ஆன்மிகம்

எட்டு வகை செல்வம் அருளும் கடவில் மகாலட்சுமி + "||" + Kadavil Mahalakshmi is gives in eight Wealth

எட்டு வகை செல்வம் அருளும் கடவில் மகாலட்சுமி

எட்டு வகை செல்வம் அருளும் கடவில் மகாலட்சுமி
அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்கத் தலமாகக் கடவில் மகாலட்சுமி கோவில் திகழ்கிறது.
கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், பள்ளிப் புரம் என்னும் இடத்தில்   இந்த ஆலயம்   அமைந்திருக்கிறது.

தல வரலாறு

ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பகுதியில் நெசவுத் தொழில் செய்து வந்த சில குடும்பத்தினர், வாழ்வாதாரத்தினைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கேரளாவிலுள்ள சேர்த்தலா அருகிலுள்ள ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றனர். அங்கு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் காஞ்சீபுரத்தில் வழிபட்டு வந்த மகாலட்சுமியை நினைத்து வழிபட்டனர்.


அங்கு அவர்களது தொழிலுக்கு நல்ல மதிப்பும், வருவாயும் கிடைத்தது. அவர்களது வாழ்வுக்குத் தேவையான அனைத்து வளங்களும் பெருகின. மகிழ்ச்சியடைந்த அவர்கள், காஞ்சீ புரத்தில் இருக்கும் மகாலட்சுமியைத் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கோவில் கொள்ள வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற மகாலட்சுமியும், காஞ்சீபுரத்தில் இருந்து முதலை ஒன்றின் மேல் அமர்ந்து அவர்கள் இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள்.

அங்கிருக்கும் குளம் ஒன்றின் கரையில் தாங்கள் வழிபட்டு வந்த மகாலட்சுமி வந்திறங்கி இருப்பதை அறிந்த மக்கள், அங்குப் புதிதாக கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோவில் தல வரலாறு.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் இருக்கும் மகாலட்சுமி கிழக்கு நோக்கி நின்ற நிலையில், முன்புற வலது கையில் நெற்கதிர்கள், இடது கையில் கிளி, பின்புற வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு ஆகியவைகளைக் கொண்டிருக்கிறாள். எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் செல்வ லட்சுமியாக (ஐஸ்வரிய லட்சுமி) வழிபடப்படும் இந்த தேவி, ‘கடவில் ஸ்ரீ மகாலட்சுமி’ என்று அழைக்கப்படுகிறார். கேரள மாநிலத்தில் மகாலட்சுமிக்கென்று அமைந்த ஒரே கோவில் இது என்பதால், இவரை மலையாள மகாலட்சுமி என்றும் அழைக்கின்றனர்.

இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், கொடுங்காளி, சேத்திர பாலகர்கள் இருக்கின்றனர். ஆலயத்தின் நுழைவு வாசலில் ஒன்பது கோள்களுக்கான அதிதேவதைகள் ஒரே இடத்தில் இருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

வழிபாடு

கேரள நாட்காட்டியின் படி மகரம் (தை) மாதத்தில் வரும் புனர் பூசம் நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் மற்றும் மகரசங்கராந்தி நாள், கும்பம் (மாசி) மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கர்கடகம் (ஆடி) மாதம் முழுவதும் கேரளாவில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதுண்டு. அதே போன்று இக்கோவிலிலும் மகாலட்சுமித் தாயாருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தனு (மார்கழி) மாதத்தில் இந்த ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும் ‘களபபூஜை’ தனித்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.

திருமணத் தடை நீங்க

இக்கோவிலில் சூரிய உதயத்தின் போது, இங்குள்ள மகாலட்சுமி வந்திறங்கிய குளத்திலுள்ள நீரைச் சிறிது எடுத்து அருந்தி மகாலட்சுமியை வழி படுபவர்களுக்கு, விஷ்ணு- மகாலட்சுமி இருவரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். மேலும் திருமணத் தடைகள் இருந்தால் அவை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு எட்டு வகையான செல்வங்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேர்த்தலா என்ற இடம். இங்கிருந்து வடகிழக்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மகாலட்சுமி ஆலயத்திற்கு சேர்த்தலாவில் இருந்து சில தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஐஸ்வரிய லட்சுமி

செல்வம், ஞானம், உணவு, மனஉறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் எனும் எட்டு வகையான செல்வங்களை (ஐஸ்வரியம்) வழங்கும் கடவுளாகச் செல்வ லட்சுமி (ஐஸ்வரிய லட்சுமி) இருக்கிறார். இதனால் லட்சுமியை, அஷ்ட லட்சுமி என்றும் சொல்கின்றனர்.

-தேனி மு.சுப்பிரமணி