கணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு


கணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2018 8:34 AM GMT (Updated: 13 Feb 2018 8:34 AM GMT)

குற்றாலம்.. பொங்கி வரும் பொன் னருவிகள் நிறைந்த ஸ்தலம். சித்தர்களின் சொர்க்க புரியாக விளங்கும் புண்ணிய பூமி.

யோகிகளும், முனிவர்களும், ரிஷி பெருமக்களும் அபூர்வமாக வாழும் இடம். இங்குள்ள இயற்கை மூலிகையும், தென்முகமாய் வீசும் தென்றலும் மனதுக்கு அமைதியை உருவாக்கும். சாது ஒருவர் தன் சரீரத்தினை அடக்கவும், தங்களது சித்துகளை மேம்படுத்தவும் சிறந்த இடம்.

திரிகூட மலையில் உச்சத்தில் தோன்றும் சிற்றாறு ஓடிவரும் இடத்தில் அகத்தியர், தேரையர், அத்ரி போன்ற முனிவர்கள் தவம் இயற்றியுள்ளார்கள். அகத்தியர் பாதமும், பரதேசி புடையும் தவம் இருப்பதற்கான சிறப்பு மிக்க தலங்களாக பார்க்கப்படுகிறது.

தேனருவியில் இருந்து செண்பகாதேவி அருவி வரை சித்தர்களின் கூடாரமாக பல குகைகள் அமைந்துள்ளன.

செண்பகாதேவி அருவி பாய்ந்து பரவசபடுத்தும் இடத்தில் அருகில் உள்ள குகையில், பல ஆண்டு களாக தவமேற்றியவர் தான் மவுனசாமிகள்.

அவருடைய பீடத்தினை தான் நாம் தற்போது காணப்போகிறோம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் சென்றால், அங்குள்ள மெயின் அருவி அருகே தான் மவுன சாமிகள் மடம் உள்ளது. சித்தேஸ்வரி பீடமான மடத்துக்குள் நுழையும் போதே, நம் மீது ஒரு வகையான அதிர்வுகள் தொற்றிக்கொள்வதை உணர முடியும். அங்கு தான் நாடி கணபதி அருள்பாலிக்கிறார்.

மவுன சாமிகள் 1938-ம் ஆண்டில் தான் இந்த மடத்தில், கணபதியை பிரதிஷ்டை செய்தார். அப்போது நாடி துடிக்கும் சத்தம் கேட்டது. கணபதியின் நாடி தான் துடித்தது. மவுன சாமியிடம் லேசான புன்னகை எழுந்தது.

மருத்துவர்களைக் கொண்டு வந்து பரிசோதித்த போது, நாடித் துடிப்பு உறுதி செய்யப்பட்டது.

அப்போதும் சிலர் நம்ப வில்லை. “சாதாரண கல்லில் இருந்து, எப்படி நாடித் துடிப்பு வரும். யாரோ இயந் திரத்தை உள்ளே வைத்து விட்டார்கள். எனவே இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.

இதையடுத்து பூகோள சாஸ்திரக் கலைஞர்கள் கொண்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ‘இயந்திரம் எதுவும் இல்லை. தானே தான் நிகழ்கிறது’ என்பது உறுதி செய்யப்பட்டது.

விநாயகப் பெருமானிடம் இருந்து எழுந்த அந்த நாடித் துடிப்பு, சுமார் 4 நாட்கள் தொடர்ந்தது.

கணபதி சிலை உயிரோட்டமாக இருக்கிறது. அவரின் நாடி ஏன் துடிக்கிறது?. அதற்கு என்ன காரணம்? என்ற எல்லா கேள்விகளுக்கும், மவுன சாமி களின் தெய்வீக அருளே ஆதாரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மவுன சாமிகளின் புகழ், நாலா பக்கமும் பரவியது. பலரும் மவுன சாமி களின் தெய்வீக அருளை அறிந்தார்கள். அவரது மடத்திற்கு வந்த அனைவரும் நாடி கணபதியை நாடித் தொழுதனர். பின்னர் அதற்கு காரண கர்த்தாவான மவுன சாமியையும் வணங்கினர். தங்கள் உடல் குணம் வேண்டியும், நோய் தாக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

பிற்காலத்தில் இந்த நாடி கணபதி கோவிலை விரிவுபடுத்த எண்ணிய சிலர், அருகில் இருந்த மரத்தை எடுக்க முயன்றபோது பல தடங்கல் வந்தது. மரத்தை அப்படியே வைத்து மரத்தைச் சுற்றி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள்.

மவுன சாமி குறித்து பார்ப்போம்.

மவுன சாமிகள் குற்றாலத்தில் பராசக்தி பீடத்தில் அமைதியாக தவமேற்றுவாராம். கோவில் பூட்டும் நேரம் வந்தும் கூட சில நேரங்களில் அவரது தவம் கலையாமல் இருக்கும். அப்படிப்பட்ட வேளைகளில், அவரது தவத்தை கலைக்க விரும்பாத கோவில் பூசாரி, மவுன சாமிகளை ஆலயத்திற்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு வந்து விடுவாராம்.

வெளிேய வந்தால், குற்றாலத்தில் மற்றுமொரு இடத்தில் மவுன சாமிகள் செல்வதைப் பார்த்து, பலமுறை அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறார், பராசக்தி பீடத்தின் பூசாரி.

சில நேரம் மவுன சாமியை, கோவிலை விட்டு வெளியே இழுத்து கொண்டு வந்து விட்டு விட்டு நடையை சாத்துவார்களாம். ஆனால் மறுநாள் நடையை திறந்தால் உள்ளே அவர் தவம் செய்து கொண்டிருப்பாராம். ஒரே நேரத்தில் எந்த இடங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக மவுன சாமிகள் இருந்திருப்பதற்கு இதுவே சான்றாக திகழ்கிறது.

ஒருமுறை சேத்தூர் ஜமீன்தாராக இருந்த சேவுக பாண்டியனாருக்கு கடுமையான வயிற்று வலி. பலரிடம் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து அவர், மவுன சாமிகளை நாடி வந்தார்.

மவுன சாமியின் ஆசீர்வாதம் கிடைத்ததுமே, ஜமீன்தாரின் வயிற்றுவலி பறந்து போய்விட்டதாம். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தனக்கு சொந்தமான இடத்தை மவுன சாமிக்கு எழுதி வைத்து விட்டார். அந்த இடத்தில் தான் இப்போது மவுன சாமிகளின் மடம் அமைந்திருக்கிறது.

இவ்விடத்தில் மவுன சாமி, 7.10.1910 அன்று தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்தார். அதற்காக தன் தவ வலிமையால் நவ ரத்தினங்களை வரவழைத்து, யந்திரத்தின் மீது படைத்தார். அதன்மேல் தண்டாயுதபாணியை பிரதிஷ்டை செய்தார். விசேஷமான அந்த சிலையில் இருந்து கிளம்பிய ஒளி, பக்தர்களை பரவசப்படுத் தியது. அவர் புகழ் எட்டுத் திக்கும் பரவி யது.

இந்த மவுன சாமி யார்? எங்கிருந்து வந்தார்? அவருக்கு மவுன சாமி என்ற பெயர் ஏன் வந்தது? தொடர்ந்து பார்க்கலாம்.

-சித்தர்களைத் தேடுவோம்.

Next Story