கேட்டவரம் அருளும் முத்தியாலம்மன்


கேட்டவரம் அருளும் முத்தியாலம்மன்
x
தினத்தந்தி 13 Feb 2018 9:51 AM GMT (Updated: 13 Feb 2018 9:51 AM GMT)

ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் மார்க்கத்தில் வரும் சக்கரக் கோட்டைக் கண்மாய். இங்கிருந்து இடது புறம் ராமேஸ்வரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் பயணித்தால், 300 வருடங்கள் பழமையான முத்தியாலம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய வரலாற்றைப் பார்ப்போம்.

ஆந்திராவில் இருந்து ராஜபாளையத்தில் குடியேறிய தம்பதியருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜாதகம் குறித்த ஜோதிடர், ‘இந்தக் குழந்தைக்கு பதினோரு வயது பத்து நாள் வரை தான் ஆயுள் பாக்கியமுள்ளது’ என்றார்.

பதறிப்போன பெற்றோர், கேரளம் சென்று பிரசன்னம் பார்த்தனர். அவரும் அப்படியே கூற, ‘என்ன பரிகாரம் செய்யலாம்?’ என்று கேட்டனர்.

அதற்கு பிரசன்னம் பார்த்து சொன்னவர், ‘ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் சென்று பரிகார பூஜை செய்தால் குழந்தையின் ஆயுள் நீடிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

உடனே அவர்கள் குழந்தையைக் கூட்டிக் கொண்டு, ராமேஸ்வரம், தேவிபட்டினத்தில் பூஜைகள் செய்து விட்டு, திருப்புல்லாணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு உடைமரத்தடியில் இளைப்பாறினர். அப்போது அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டது. சோகத்தைத் தாங்கிக்கொண்டு, குழந்தைக்கான இறுதி காரியங்களைச் செய்து விட்டு வீடு திரும்பினர்.

ஒரு நாள் பெற்றோரின் கனவில், அந்தப் பெண் குழந்தை தோன்றியது. ‘நான் இறந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி, என்னை குலதெய்வமாக வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் ஏற்பட செய்கிறேன்’ என்று கூறி மறைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அரண்மனையில் கோவில் எழுப்ப அனுமதி கேட்டு, உத்தரவு கிடைத்ததும் பனை மரங்களைக் கொண்டு மேற்கூரை அமைத்து ஆலயம் எழுப்பினர். பிறகு ஒரு சின்னப் பெண் வடிவில் வடிக்கப்பட்ட கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். இந்த ஆலயத்தில் உள்ள முத்தியாலம்மன், தற்போது அந்தப் பகுதியின் காவல் தெய்வமாக விளங்குவதாக தல புராணம் சொல்கிறது.

ஆலய அமைப்பு

ஆலயத்தில் நாம் முதலில் காண்பது, ஆலய முகப்பில் உள்ள வேப்பமரம். இதற்கு வலது மற்றும் இடது புறத்தில் சுமை தாங்கி கற்களில் மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. அடுத்து விசாலமான மண்டபம் இருக்கிறது. இதன் மேற்கூரை முகப்பில் வடக்கு நோக்கிய திசையில் கஜலட்சுமி நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அந்த மேற் கூரையில் சங்கு, சக்கரம் மற்றும் நான்கு மூலைகளிலும் அனுமன், கருடன் சுதைச்சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் உள்ளே உள்ள எட்டுதூண்களிலும் சங்கு, சக்கரம், திருநாமம், இரண்டு மீன்கள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் சதுர வடிவில் யாக குண்டம், பலிபீடம் மற்றும் அம்மன் கருவறையை நோக்கி சிம்ம வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை விமானத்தில் நான்கு மூலைகளில் நான்கு யாழிகள் சுதைச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே கல் கட்டிடத்தில் முத்தியாலம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு கரத்தில் தாமரை மலர் ஏந்தியும், மறு கரத்தை மடியில் வைத்தபடியும் குழந்தை வடிவில் புன் சிரிப்புடன் காட்சி தருகிறார்.

கருவறையை சுற்றி வருகையில் வலது புறத்தில் கருப்பண சுவாமி சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலய அம்மனுக்கு, இவர் காவல் தெய்வமாக விளங்குவதாக கூறுகின்றனர். அடுத்து விநாயகர் சன்னிதி உள்ளது. எந்த ஆலயத்திலும் இல்லாத அமைப்பாக வெளிப்பிரகார முடிவில் இந்த சன்னிதி அமைந்துள்ளது. விநாயகருக்குப் பக்கத்தில் இரண்டு ஐந்து தலை நாகங்களின் கற்சிலைகள் காணப்படுகின்றன.

இவ்வாலயத்திற்கு பின்புறம் பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தை ‘அம்மன் கோவில் குளம்’ என்றே அழைக்கின்றனர். குளத்திற்குள் ஒரு கிணறும் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கான நீர் எடுக்கப்படுகிறது.

ஆலய திருவிழாக்கள்

வைகாசி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வருடாபிஷேகம் நடை பெறுகிறது. ஆடி மாதத்தில் கிராம மக்கள் அக்னி சட்டி, முளைப்பாரி சுமந்து கிராமத்தை வலம் வந்து ஆடி உற்சவத்தை கொண்டாடு கிறார்கள். நவராத்திரியில் அம்மனுக்கு பலவித அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் வைணவ மரபுப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

-மு.வெ.சம்பத்

Next Story