ஆன்மிகம்

வாழ்க்கைப் பயணம் தரும் படிப்பினை + "||" + The lesson of life travel

வாழ்க்கைப் பயணம் தரும் படிப்பினை

வாழ்க்கைப் பயணம் தரும் படிப்பினை
இறப்பில் இருந்து நாம் படிப்பினை பெறுவது என்பது, மற்றவர்களின் இறப்பிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினையைக் குறிப்பதாகும்.
உயிரினங்கள் அனைத்துமே ஒரு நாள் அழிவை சந்திக்கக் கூடியவையே. உயிரினங்கள் மட்டுமின்றி உயிரற்றவைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இறைவனால் படைக்கப்பட்ட அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா பொருட்களும், இயந்திரங்களும் தங்களின் அசலான நிலையில் இருந்து உருமாறி, தேய்ந்து வருடங்கள் பல கடந்த பின் இல்லாமலேயே போய்விடும்.

பெரும் பாறைகள், மலைகள், கடினமான பாகங்களைக் கொண்ட பொருட்கள் அனைத்துக்கும் இந்த நிலைமை என்றால் ரத்தமும், சதையும், விரைவில் மக்கிப் போகக் கூடிய எலும்புகளாலும் ஆன மனிதர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இறைவன் தான் படைத்த உயிரினங்களுக்கு மட்டும் கூடவே காலக்கெடுவினையும் விதித் திருக்கிறான்.

உறுப்புகள் பழுதடைந்து, கூன் விழுந்து முதுமை அடைந்தால்தான் இறப்பு வரும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. எந்த நேரத்திலும் இறப்பு சம்பவிக்கலாம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் பெரும்பாலான மனிதர்கள் திடீரென ஏற்படும் மரணங்களினால் நிலை தடுமாறித்தான் போய்விடுகின்றனர். எவ்வளவு பக்குவம் உள்ள மனிதர்களும் செய்வதறியாமல் விக்கித்துப் போய்விடுகின்றனர்.

தம் உயிரைப் போன்று நேசித்த உறவுகளின் உயிர்கள் நோயினாலேயோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இவ்வுலகை விட்டு நீங்கும் பொழுது தாங்கமுடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள். இதுதான் இறைவன் நமக்கு விதித்தது என்று ஆறுதல் கொள்ள, காயங்கள் ஆற அவரவர் மன உறுதிக்கேற்ப, சிறிது காலமோ அல்லது நெடுங்காலமோ தேவைப்படுகிறது.

‘‘(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்’’. (திருக்குர்ஆன் 2 : 156).

பிறப்பினை ஏற்றுக்கொள்ளும் நாம் இறப்பினையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவ்வுலக வாழ்க்கை ஒரு பிரயாணம் போன்றது. பயணத்தொலைவை, படைத்தவன் மட்டுமே அறிவான். பயணம் நெடும் பயணமாகவோ, சட்டென்று முடிந்து போகக் கூடியதாகவோ இருக்கலாம்.

பிரயாணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் நம்முடைய சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் நம்முடன் பயணிப்பவர்கள் நம்மை விட்டுச் சென்று விடுவார்கள். அது போல்தான் நம் வாழ்க்கையும். எதற்கும் தயாராக நாம்தான் இருக்க வேண்டும்.

அதனால் இழப்புகளினால் ஏற்படும் வலியில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ளலாம். நம்முடைய நெருங்கிய சொந்தங்களின் மீது கட்டற்ற பாசம் வைக்கக் கூடாது. நமக்கு உயிரும், உடலும் தந்த இறைவன் மீதே அளப்பரிய அன்பு இருக்க வேண்டும். அவனிடம் இருந்து வருகிறோம், அவனிடமே திரும்பிச்செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

எனவே, ‘வாழும் காலத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் எந்த நேரத்திலும் முடிவடையலாம், அதற்குள் எனக்கு இறைவனால் கடமையாக்கப்பட்ட வி‌ஷயங்களை நான் காலம் கடத்தாமல் செய்வேன்’ என்ற உறுதியுடன் நற்காரியங்களை நாம் செய்வதால் நம் முடைய பிறப்பு அர்த்தம் உடையதாக ஆகி விடுகிறது. 

மணம் வீசும் மலர்கள், பயன் பல தரக் கூடிய தாவரங்கள் போன்றவை தாங்கள் வாடி வீழும் வரை வாசனையைப் பரப்பிக் கொண்டிருப்பதாலும், பயன்கள் தருவதாலும் அவை மடிந்த பிறகும், அவற்றின் சிறப்புக் குணங்களை நாம் நினைவு கூர்கிறோம்.

மனிதர்கள் பல சிறப்புகளை உடையவர்கள். தங்களின் அறிவு, ஆற்றல், சக்தி ஆகியவற்றை பிற மக்களின் உயர்வுக்காக பயன்படுத்த வேண்டும். கல்வி கற்ற மனிதர்கள் மற்ற மக்களுக்கு தாம் கற்ற கல்வியை, ஒழுக்க நெறிகளை போதிக்க வேண்டும். நாம் செய்யும் உதவி களுக்கு பிரதி பலனை எதிர்பார்க்காமல் செய்தால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில், நாம் தேவையுள்ளவர்களாக இருக்கும் நேரங்களில் இறைவனிடம் இருந்து உதவி கிடைக்கும். 

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல் நம்மைச் சுற்றி யுள்ள மனிதர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்ய வேண்டும். உதவி செய்யும் நிலையில் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையிலும் தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டும்.

நல்ல மனிதர்களை அவர்களின் நற்செயல்களுக்காக இவ்வுலகம் அவர்களின் மரணத்திற்குப் பின் கூட நல்ல விதத்தில் நினைவில் கொள்கிறது. ‘இப்படிப்பட்ட மனிதரை உலகம் இழந்து விட்டதே’ என்று வருந்துகிறது. தீயவர்களின் தீயசெயல்களை மக்கள் வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள். ‘நல்ல வேளை போய்த்தொலைந்தான்’ என்று மகிழ்கிறது.

நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது அதைப் பற்றி புகழ்ந்து பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உறுதியாகி விட்டது’ என்று மூன்று முறை சொன்னார்கள்.

பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது பற்றி இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபியவர்கள் ‘உறுதியாகி விட்டது’ என்று மூன்று முறை கூறினார்கள்.

அது பற்றி உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது, ‘‘நீங்கள் யாரைப் பற்றிப் புகழ்ந்து பேசினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. யாரைப் பற்றி இழிவாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகி விட்டது’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததுடன், ‘நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்’ என்று மூன்று முறை கூறினார்கள்’’. (ஹதீஸ்)

குழந்தைகளுக்கு ஓரளவிற்கு பக்குவம் வந்த பின்னர் பிறப்பு, இறப்பு பற்றிய விளக்கங்களை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதுடன், அவர்களை இறந்து போன மனிதரின் ஜனாஸாவைப்  பார்க்க கூட்டிச்செல்லலாம். யாரையும் முழுக்க சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்பதையும், ஒருவரின் இழப்பினால் இந்த உலகம் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை என்பதையும் பக்குவமாகச் சொல்லித் தர வேண்டும்.

அத்துடன் இவ்வுலகில் வாழும் காலம் வரை யாருக்கும் எந்த வகையிலும் தீங்கு தராமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் பதியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். சான்றோர்களின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

மற்றவர்களின் மரணம் நமக்கு எப்படி வாழ வேண்டும், என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் சொல்லித் தருகிற அருமையான புத்தகம் எனலாம். அப்படி ஒருவர் தனது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்கவில்லை என்றால் அவர் எந்த காலத்திலும் எவற்றாலும் எந்தவொரு படிப்பினையையும் பெற முடியாது என்பது உறுதி.

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை–84.