ஆன்மிகம்

போகரும்.. முருகரும் + "||" + Bogar Murugar

போகரும்.. முருகரும்

போகரும்.. முருகரும்
போகர் ஸ்தாபிதம் செய்த பழனி முருகன் சிலையின் பெருமையால் இவர் ஒரு முருகபக்தர் என்பது மட்டும் தெளிவாகிறது.
ழனி பதி வாழ் பாலகுமாரனின் சிலையை, நவபாசான சிலையாக உருவாக்கி பக்தர்களின் உடல், மன ஆரோக்கியத்தைக் காத்த சித்தர்களுள் பெருமை மிக்கவரான போகர் அறியப்படுகிறார்.

தங்கள் தவ யோகத்தின் பலனாக அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் எனும் அட்டமா சித்தி ஆற்றல்களைப் பெற்றவர்கள் சித்தர்கள் எனும் மகான்கள். இவர்கள் மருத்துவம், மந்திரம், ஜோதிடம், மெய்யுணர்வு ஆகியவற்றில் சிறந்து விளங்கி தங்களை நம்பும் மக்களுக்கு நன்மையை அளிப்பவர்கள். இன்றும் பல சித்தர்கள் மனிதரின் கண்களில் படாமல் மறைந்து அருள்பாலிப்பதாக ஆன்மிக அன்பர்களின் கூற்று. அவர்களின் இருப்பை தமக்கேற்பட்ட அனுபவங்கள் மூலம் உணர்ந்தவர்கள் பலருண்டு. நவநாத சித்தர்கள் பதினெண் சித்தர்கள் எனப்படுபவர்கள், நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே. இவர்களிலும் மூலர், காலாங்கி, கொங்கணர், கோரக்கர், போகர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

முருக பக்தர்

இவர்களுள் போகர் திருமூலரின் மாணவர் என்றும், காலாங்கிநாதரின் மாணவர் என்றும் இருவேறு கருத்துகள் இருந்தாலும், ஒன்பது விதமான நஞ்சு கலந்த, உடல் நலம் பேணும் மூலிகைகள் கொண்டு இவர் ஸ்தாபிதம் செய்த பழனி முருகன் சிலையின் பெருமையால் இவர் ஒரு முருகபக்தர் என்பது மட்டும் தெளிவாகிறது. இவரும், இவரின் மாணாக்கரான புலிப்பாணியும் வைகாவூர் என்றழைக்கப்பட்ட பழனிமலை அடிவாரத்தில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்.

மருத்துவ நூல்கள்

திருநந்தி தேவரே பல பிறப்புகளுக்குப் பின் போகராக இப் புவியில் அவதரித்ததாக கூறுகின்றனர். போகர் வரலாறு பற்றிய நூல்கள், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் சித்த மருத்துவ நூல் வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு, போகார் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம் போன்ற நூல்கள் இவர் எழுதியுள்ளவற்றில் சில. இவரது படைப்புகளில் மருத்துவம் குறித்த செய்திகளே அதிகம். இவரது மாணவர்கள் புலிப்பாணி, சட்டமுனி, மச்சமுனி, கமலமுனி, நந்தீசர், கொங்கணர், கருவூர்த்தேவர் எனும் எழுவர் ஆவர்.

அருள் தரும் முருகன் திருமேனி

யோகம், மருத்துவம், ரசவாதம், கணிதம், காயகற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர் போகர். அந்நாட்களில் வான்வழியில் சீனம், ரோமாபுரி, மக்கா, மதீனா சென்று இறுதியாக சீடர் புலிப்பாணியுடன் பழனிக்கு வந்தார். பின்னர் அங்கேயே தங்கியிருந்து பழனிமலையில் தாம் அமைத்த திருக்கோவிலில் நவபாஷாணக் கட்டி கொண்டு தண்டாயுதபாணி சுவாமியின் அருள்மேனியை நிறுவினார். இங்கு ஆண்டவரின் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதப்படும். மாபெரும் மருத்துவ சக்தியைக் கொண்ட நவபாஷாண முருகன் திருமேனியில் பட்டுவரும் விபூதி, பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் போன்ற அனைத்தும் தேடிவரும் பக்தர்களின் உடற்பிணி, உளப்பிணி, பிறவிப்பிணியை தீர்க்கும் வல்லமை கொண்ட அருமருந்து என்பதை இன்றும் மக்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் உணர்ந்து உண்மை என்கின்றனர்.

போகர் சன்னிதி

பழனி மலைக்கோவில் தென்மேற்கு மூலையில் போகரின் சன்னிதி உள்ளது. இங்குதான் போகர் ஜீவ சமாதி ஆனார். போகர் தன இஷ்ட தெய்வமாக வழிபட்ட ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனும், ஈஸ்வர சொரூபமான மரகத லிங்கமும் இங்கு இன்றும் பூஜையில் உள்ளன. இச்சன்னிதியில் இருந்து தண்டாயுதபாணி சுவாமியின் திருவடி நிலைக்கு ஒரு சுரங்கவழி உள்ளது. கடைசியாக அதனுள் சென்ற போகர், திரும்பாமல் அதனுள் முருகப்பெருமானின் திருவடியில் ஐக்கியமானதாக வரலாறு குறிப்பிடுகிறது.

தான் கற்ற வித்தைகள் மூலம் மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் எனும் நல் எண்ணத்துடன் பல மருத்துவ வழிகாட்டி நூல்களையும், நவபாஷாணம் கொண்டு முருகன் சிலையையும் படைத்த மக்கள் சித்தர் போகரின் பொற்பாதங்கள் பற்றி நல்வாழ்வு பெறுவோம்.

தொடர்புடைய செய்திகள்

1. லிங்கத்துக்கு பின்புறம் நந்தி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வலியசாலா என்னும் ஊர். இங்கு மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.