யோகம் தரும் யோக நரசிம்மர்


யோகம் தரும் யோக நரசிம்மர்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:40 PM IST (Updated: 21 Feb 2018 3:40 PM IST)
t-max-icont-min-icon

காவிரிக்கரையில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் பலவற்றுள் ‘நரசிம்ம மூர்த்தி’ யோகநிலையில் வீற்றிருக்கும் நரசிங்கன்பேட்டை திருத்தலமும் ஒன்று.

நரசிம்ம அவதாரம் என்றாலே உக்கிரமானது என்று சிலர் நினைக்கின்றனர். உலகில் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட நாராயணனால் எடுக்கப்பட்ட அவதாரங்களில் ஒன்று இது. இரண் யகசிபுவின் வதம் இதனையே குறிக்கிறது. நாராயணன் தனது பக்தர்களை கைவிடமாட்டார் என்பதையும் இது காட்டுகிறது. நாளை என்பதே நரசிம்மனிடத்தில் கிடையாது என்பதற்கேற்ப, தன்னை சரணடைந்தவர்களை உடனடியாக காக்கும் உருவமே நரசிம்ம உருவம்.

இரண்யகசிபு வதத்திற்குப் பிறகு கோபம் தணிய பகவான் அமர்ந்த தலங்களுள் நரசிங்கன் பேட்டை என்ற இத்தலம் முக்கியமானதாகும். இங்கு பகவான் யோக நிலையில் அருள் பாலிக்கிறார். யோக நிலை நரசிம்மர் மற்ற நரசிம்ம மூர்த்தங்களை விட சக்தி வாய்ந்தவர் என்பது ஐதீகம். மறைமுகமான எதிர்ப்புகளான ஏவல், சூன்யம் முதலியவற்றை நொடியில் நசித்து விடுவார் இவர்.

விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்தி, இரண்டு கைகளை யோக முத்திரையில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் மகா சாந்தமாக சேவை சாதிக்கும் இவரது அருள் அற்புதமானது.

இரண்யகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்க நரசிம்மர் பூஜித்த சிவலிங்கம் இக்கோவிலுக்கு அருகில் ‘சுயம்புநாத சுவாமி’யாக கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் வரப்பிரசாதியாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம். அடுத்து உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக காட்சி தருகின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட புராதனமான இக்கோவில் விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்டது.

யோக நரசிம்மருக்கு ஏற்றப்படும் நெய் தீபம், மோசமான உடல்நலக் கோளாறு உள்ளவரையும் உடனடியாக காப்பாற்றும். வெல்லபானகம் இவருக்கு பிடித்த விசேஷமான நைவேத்தியமாகும்! பிரதோஷம், சுவாதி நட்சத்திரம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் சனிக்கிழமைகள் இவருக்கு உகந்த நாட்கள் ஆகும்.

இவரது சன்னிதிக்கு எதிரே கருடனும், பிராகாரத்தில் ஆஞ்சநேயரும் தனிச் சன்னிதிகளில் சேவை சாதிக்கின்றனர். இந்த ஆஞ்சநேயருக்கு மட்டை தேங்காயை, பக்தர்கள் மலையாக குவித்திருக்கிறார்கள். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காயில் ஒரு நம்பரை பொறித்து, அந்த நம்பரை சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு, தேங்காயை பக்தர்களிடம் தந்து விடுகிறார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஐந்து மாதத்திற்குள் அந்த தேங்காயை எடுத்து வந்து பிராத்தனையை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் வழியில் ஆடுதுறைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது. 

Next Story