வான்மறையின் முதல் கட்டளைகள்


வான்மறையின் முதல் கட்டளைகள்
x
தினத்தந்தி 7 March 2018 9:54 AM GMT (Updated: 7 March 2018 9:54 AM GMT)

என்னுடைய கட்டளையை நிறைவேற்ற அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை முதலிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“நபியே! வஹியின் அதிர்ச்சியால் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீர் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக! உமது ஆடையை பரிசுத்தமாக வைத்துக் கொள்வீராக! அசுத்தங்களை வெறுத்து விடுவீராக. எவருக்கும் நீர் நன்மை உபகாரம் செய்து அதைவிட அதிகமாய் அவரிடம் பெற்றுக்கொள்ள கருதாதீர். உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிரமங்களை பொறுத்திருப்பீராக!” (திருக்குர்ஆன் 74:1-7)

இந்த வசனங்களைச் சொன்ன வானவர் தலைவர் ‘அண்ணல் முகம்மதே! அல்லாஹ் உங்களைத் தன் நபியாக, தன் வஹியை எடுத்துச் சொல்லும் தூதுவனாக தேர்ந்தெடுத்துள்ளான்’ என்று நற்செய்தியை கூறிவிட்டு மறைந்துவிட்டார்கள்.

முகம்மது (ஸல்) அவர்களுக்கு இந்த ஆன்மிக அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. வானவர் தலைவரின் உண்மையான தோற்றம், அவர்கள் உள்ளத்தில் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதயம் நடுங்கியவர்களாக ஹீரா குகையிலிருந்து தன் இல்லம் நோக்கி விரைந்தார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்களின் இறுக்கமான அணைப்பு இதயத்தை நடுங்கச்செய்துவிட்டது. உள்ளமெல்லாம் பதற, குளிர்வாட்டி வதைக்க இல்லம் வந்தடைந்த நபிகளார், தன் மனைவி கதீஜா நாயகத்திடம், ‘அருமை கதீஜாவே, என்னைப் போர்த்திவிடுங்கள், என்னை போர்த்தி விடுங்கள்’ என்று படபடப்புடன் கூறினார்கள். கதிஜா அம்மையார் போர்வையால் போர்த்திவிட்டபின் நபி அவர்கள் அமைதியாக உறங்கிவிட்டார்கள்.

சிறிது நேரம் சென்று விழித்தவர்கள் “அருமை கதீஜாவே, நான் எப்போதும் போல் ஹீரா குகையிலே தியானத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றைக்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தன்னை ‘ஜிப்ரீல்’ (வானவர் தூதுவர்களின் தலைவன்) என்று அறிமுகப்படுத்திய, ஆஜானுபாகுவான இறக்ைககள் கொண்ட தூதுவர் ஒருவர் என் முன்னே தோன்றினார். ‘அல்லாஹ்வின் கட்டளை, உங்களை அவனின் தூதுவனாக ஏற்றுக் கொண்டுள்ளான். இனிமேல் அவன் அனுப்பும் ‘வஹி’யை உங்களிடம் நான் வந்து தெரிவிப்பேன். அந்த கட்டளைகளை மனித குலம் முழுவதுக்கும் நீங்கள் எடுத்துச்சொல்லி அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘இக்ரஹ்’ (ஓதுவீராக) என்று கட்டளையிட்டார்கள்”.

“நான் படிப்பறிவில்லாவதன்! என்னை எதை ஓதச்சொல்கிறீர்கள், என்று நான் கூறியபோது, அவர் தன் உருவத்தை சுருக்கி, என் அருகில் வந்து, என்னை ஆரத்தழுவி ‘உங்கள் இறைவனின் பெயரைச்சொல்லி இப்போது ஓதுவீராக’ என்று சொன்னார்கள். அவர்களின் அணைப்பின் கதகதப்பில் நான் என்னை அறியாமல் ஓதத்தொடங்கினேன். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். சற்று சிந்தித்து பார்த்தபோது அவர்களின் உருவம் மற்றும் அவர்களின் உரையாடல்களை நான் வினோதமாக உணர்ந்தேன். ஆனால், அதில் உண்மைத்தன்மையையும் அறிந்து கொண்டேன். அதனை உணர்ந்தபோது என்னை குளிர் வாட்டி வதைத்துவிட்டது. அதனால் தான் உங்களை என்னைப்போர்த்தி விடும்படிச் சொன்னேன்” என்று நடந்த விஷயங்கள் அத்தனையையும் அருமை மனைவியிடம் அழகாக விவரித்தார்கள்.

‘அப்படியா சொல்கிறீர்கள், நீங்கள் இதுவரை பொய் சொல்லி நான் அறியேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்புகிறேன். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு உங்களை நான் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்கள்.

அண்ணலார் கொண்டு வந்த அற்புத கலிமாவை இந்த உலகில் ஏற்றுக்கொண்ட முதல் நல்லடியார் அன்னை கதீஜா நாயகி தான்.

தன் கணவருக்கு இப்போது ஆறுதல் தேவைப்படுகிறது, அதிர்ச்சியில் உறைந்துள்ளவரை நிஜ உலகிற்கு திரும்ப கொண்டு வருவதில் மனைவியான தனக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது என்பதை கதீஜா அம்மையார் உணர்ந்துகொண்டார். உடனே கணவரை ஆசுவாசப்படுத்தி இவ்வாறு கூறினார்கள்-

‘அல்லாஹ் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டான். நீங்கள் ‘அல்அமீன்’ (உண்மையாளர்). உங்கள் உறவினர்கள் எப்படிப்பட்டவர்களாயினும் அவர்களை அனுசரிக்கிறீர்கள். பிறர் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறீர்கள். அவர்களின் பாரங்களை நீங்கள் சுமக்கிறீர்கள். பலவீனமானவர்களுக்கு உதவுகிறீர்கள். விருந்தினர்களை இன்முகத்தோடு உபசரிக்கிறீர்கள். பிறரின் பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தருகிறீர்கள். இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் கை விடமாட்டான்’ என்று ஆறுதல் கூறி தேற்றினார்கள்.

அதன்பின் ‘இன்ஜீல்’ வேதத்தை ஓதித்தேர்ந்த நவ்பல் என்பவரிடம் நபிகளாரை அழைத்துச்சென்று, அத்தனை செய்திகளையும் சொன்னார்கள் கதீஜா நாயகி அவர்கள்.

அத்தனையையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நவ்பல் ‘இவர் இன்றைய காலகட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட இறைத்தூதர் முகம்மது என்பவர். இந்த நிகழ்வுகளும், இவரைப்பற்றிய குறிப்புகளும் முந்தைய வேதங்கள் அனைத்திலும் தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைப்பதில் மிகுந்த சிரமத்திற்குள்ளவார். இவரின் சொந்தங்களே இவரை தங்கள் ஊரை விட்டு வெளியேற்றும். நான் உயிருடன் இருந்தால் அந்த காட்சிகளை கட்டாயம் காண்பேன். இவர் தான் வேதங்கள் அத்தனையும் ஒப்புக்கொண்ட இறுதி நபி’ என்றார்.

அவர் சொல்லில் தெரிந்த உண்மை அண்ணலாரின் உள்ளத்தை உறுதி செய்தது. நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை தான் என்று நம்பினார்கள்.

உள்ளம் உறுதி பெற்றதும் தன் கடமையை உணர்ந்தார்கள். கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானார்கள். கட்டளைகளில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைக் கொண்டே எப்படிப்பட்ட நேர்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொள்ளமுடியும்.

இறைவனைப் பெருமைப்படுத்தச்சொன்ன முதல் வசனத்தை அடுத்து சுத்தத்தை வலியுறுத்துகிறது. அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கச் சொல்கிறது. மனம், குணம், செயல்கள், சொற்கள் எல்லா வற்றிலும் சுத்தத்தை கடைப்பிடிக்கச்சொல்கிறது.

என்னுடைய கட்டளையை நிறைவேற்ற அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை முதலிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்ப்பைத்தடை செய்கிறது. ‘ஒருவனுக்கு ஒரு நன்மையைச் செய்தால் அவனிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று வலியுறுத்துகிறது.

இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் மனிதன் இவ்வுலக வாழ்வில் நேர்வழியையும், மேன்மையையும் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை அறியும் போது இஸ்லாம் எத்தகைய உன்னத மார்க்கம் என்பது புரியும். 

Next Story