கிறிஸ்தவத்தின் முதன்மை தகுதி


கிறிஸ்தவத்தின் முதன்மை தகுதி
x
தினத்தந்தி 9 March 2018 5:38 AM GMT (Updated: 9 March 2018 5:38 AM GMT)

கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.

உலகத்தில் எந்தவொரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் முதலில் கேட்கப்படுவது, தகுதி.

கல்வித் தகுதி, உடல் தகுதி, அறிவாற்றல் ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்க வேண்டியதுள்ளது. தகுதிக் குறைபாடு ஒருவனை அலைக்கழிப்புக்கு ஆளாக்கிவிடுகிறது.

அதுபோலவே ஆன்மிகத்திலும் இறைவனுடன் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளை இயேசு போதித்துள்ளார். அது உடல், அறிவு, கல்வி சம்பந்தப்பட்டதல்ல. அந்த அடிப்படைத் தகுதிகளில் முதன்மையான தகுதி, ‘ஒருவன் தன்னை பாவி’ என்று முழுமையாக ஒப்புக்கொள்வதுதான்.

இதுபற்றி இயேசு கூறும்போது, “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என்று ஜெபித்த பாவிதான் நீதிமானாக்கப்பட்டான்” என்றார்.

நாம் தினமும் செய்யும் குற்றங்கள், பாவங்களை, தனி ஜெபங்களில் இறைவனிடம் சொல்லி மன்னிப்புகேட்கிறோம். அதன் மூலம் நம்மை பாவி என்று நாம் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் என்று கேட்கலாம்.

தினமும் பாவம் செய்வதும், மன்னிப்புக்காக ஜெபம் செய்வதும், ஒரு மனிதனை இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் செயலாக அமையாது. அது ஒருவன் தன்னை பாவி என்று முழுமையாக ஒப்புக்கொண்ட நிலை அல்ல. எனவே அதுபோன்ற ஜெபங்களால் நேரம்தான் வீணாகிறது. தினமும் வேலை செய்து அழுக்காவது, பின்னர் அழுக்கைப் போக்குவதற்கு குளிப்பது போன்ற இயல்பு நிலை ஆன்மிகத்தில் இல்லை.

பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வது என்பது எப்படி? செய்த குற்றம்பாவத்தால் மனது அழுத்தப்பட்டோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலோ அல்லது பின்விளைவுகளை உணர்வதாலோ, இனி அந்த பாவங்களில் நீடிக்கமாட்டேன் என்று முடிவு செய்து இறைவனுடன் ஒப்புரவாதல் ஆவதுதான், பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகும். இதுதான் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் முதன்மையான தகுதி.

அதாவது தன் குற்றங்களையும், பாவ செயல்பாடுகளையும் நியாயப் படுத்தாமல், அதை இறைவனிடம் ஒப்புக்கொள்ளுதலாகும். சூழ்நிலையின் நெருக்கடினால் பொய் பேசிவிட்டேன், திருடிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன், பழிதீர்த்துவிட்டேன் என்று தவறுகளை நியாயப்படுத்தும் எவரும், உண்மையான கிறிஸ்தவத்தின் ஆரம்பகட்ட தகுதியைக்கூடப் பெறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்களிடம் அநீதி, பொறாமை, பெருமை, வேறுபாடு பார்த்தல், பகை, பழிதீர்க்கும் மூர்க்கம் போன்ற ஜென்ம மற்றும் சரீர சுபாவத்திலான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் இவர்களிடம் ஜெபம், உபவாச ஜெபம், சபைகூடுதல், காணிக்கை செலுத்துதல், மன்னிப்பு கேட்குதல் (தேவைப்படுவோரிடம் மட்டும்), ஊழியங்களை தாங்குதல் என பல கண்ணுக்குத் தெரியும் நற்செயல்பாடுகளும் காணப்படும். ஆனால் இவைஎல்லாம் உண்மையான கிறிஸ்தவ நடத்தைக்கான செயல்பாடு அல்ல.

கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியைப் பெறாமல், இந்த நற்செயல்கள் மூலம் இறைவனுடன் யாராலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது. எனவே இவை அனைத்துமே, ஆன்மிக பலன்களை (ஆத்தும ஆசீர்வாதங்களை) அடைவதற்கு உதவாத மற்றும் வீணான நற்செயல்களாகவே உள்ளன.

பாவி என்று உணர்ந்து, தன்னை தாழ்த்தி குற்றங்களை ஒப்புக்கொண்டு, இனி பாவம் செய்யமாட்டேன் என்று இறைவனுடன் ஒப்புரவாகி மனந்திருந்தும் பாவிதான் கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகுதியைப் பெறுகிறான். அவனுக்குத்தான் ஆன்மிகத்தின் அடுத்த வழி திறக்கப் படுகிறது.

மனந்திரும்பும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான மன்னிப்பை பெறவும் வேதம் வழிகாட்டுகிறது. யாருக்கு எதிராக குற்றம், அநீதி, அநியாயம் செய்தோமோ அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க இறைவனால் உள்ளம் தூண்டப்படுகிறது. இதில் மிகுந்த தயக்கம் ஏற்பட்டாலும், இறைஆவியின் மூலம் தைரியம் அளிக்கப்படு கிறது. ஆனால் இதில் பலர் சோர்ந்து, சில பாவங்களுக்கான மன்னிப்பை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.

எனவே இறைவனுடனான மேலும் நெருக்கம் ஏற்படாமல் போய்விடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனுடனான தொடர்பை இழந்து பழைய பாவ நிலைக்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர். இறைவன் காட்டும் வழியை உணர்ந்து நடந்துகொள்ளாமல், மாறாகச் சென்றால் அதில் இறைவனின் பாதுகாப்பு கிடைக்காது.

அடுத்ததாக, மனிதனுக்கு எதிரான குற்ற செய்கைகளுக்காக இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மனிதன் என்பவன் இறைவனின் படைப்பு. அந்த வகையில், அவரது படைப்பில் ஒன்றான மனிதனை துன்புறுத்தியதற்காக இறைவனிடமும் மன்னிப்பை பெற வேண்டும். இப்படிப்பட்ட இறைவனின் சித்தத்துக்கு உட்பட்ட வழிகாட்டுதலின் மூலமாகத்தான் படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முடியும்.

பாவி என்ற நிலையில் இருந்துகொண்டு காணிக்கை கொடுப்பதாலோ அல்லது வேறு யாரிடமாவது சென்று ஜெபிப்பதாலோ ஆன்மிக நிலைப்பாட்டை அடைய முடியாது. ஆன்மிகம் என்பது, குறிப்பிட்ட மதத்தில் இருந்துகொண்டு எல்லாரையும்போல கோவிலுக்குச் சென்று வருவதல்ல. இறைவனை அடையும் தகுதிகளைப் பெற்று, அந்த வழியில் சென்று, அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஆன்மிகம். இதற்கு மதம் உதவாது.

இயேசு காட்டியுள்ள இந்த ஆன்மிக வழியில், பகைத்தவருக்காக ஜெபித்தல், அடித்தவரையும் அரவணைத்தல், வேறுபாடு பார்க்காமல் உதவுதல், அனைவரின் முன்பாகவும் தாழ்மையாக நடந்துகொள்ளுதல், அநியாய செல்வங்களை தவிர்த்தல், பாவநெருக்கடிகளுக்குள் சாயாமல் இருத்தல் என்ற இறைத்தன்மைகள் வருகின்றன. இதுதான் தெய்வீக அன்பு.

பக்தனின் வாழ்க்கையில் இவை குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். இந்த வழியில் ஒருவன் நடக்கிறான் என்றால் அவன் இயேசுவுடன் (கிறிஸ்தவ மதத்துடன் அல்ல) பிணைப்பில் இருக்கிறான் என்று அர்த்தம். இந்த வழிகளைக் கடந்துதான், அவனுக்கென்று இறைவன் வைத்துள்ள இலக்கை நோக்கிச் சென்றாக வேண்டும்.

இயேசு கூறியுள்ள அந்த வழிகளில் நடந்து செல்வது, இயல்பு குணத்தில் நீடிக்கும் சாதாரண மனிதனால் முடியாது. கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஒருவனை கிறிஸ்தவனாக வேதம் அங்கீகரித்துவிடவில்லை. இயேசு சொன்ன தெய்வீக அன்பின்படி நடந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் (மதத்தில் அல்ல) நீடித்து வாழ்வது எளிதானது அல்ல என்பதால்தான் அதை இடுக்கமான வழி என்று வேதம் கூறுகிறது. மதத்தில் உள்ள பெயர்ப்பட்டியல் பெரிதாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தவர்கள் குறைவுதான்(மத்.7:13, லூக்.13:24) என்பதே வேதத்தின் முடிவு. 

Next Story