இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முன்னோடிகள்


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முன்னோடிகள்
x
தினத்தந்தி 14 March 2018 1:37 PM IST (Updated: 14 March 2018 1:37 PM IST)
t-max-icont-min-icon

“போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே, நபியே இரவில் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக.

“போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே, நபியே இரவில் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக. முழு இரவிலும் அல்ல. அதிலொரு சொற்ப பாகம். அதாவது அதில் பாதி நேரம் அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம் அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். அதில் இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக. நிச்சயமாக அதி சீக்கிரத்தில் மிக உறுதியான ஒரு வார்த்தையை உம்மீது இறக்கி வைப்போம்” (திருக்குர்ஆன் 73:1-6)

அல்லாஹ்வின் மூலம் அண்ணலாருக்கு நபித்துவம் அளிக்கப்பட்டது. வானவர் ஜிப்ரீல் இந்த செய்தியை நபிகளிடம் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து பலநாட்கள் இறைத்தூதுச் செய்தி எதுவும் அண்ணலாருக்கு அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் அவர்கள் ஆழ்ந்த தியான நிலையில், தன்னைப் படைத்த இறைவனின் நோக்கம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். தன்னை இறைத்தூதராக்கிய இறைவனின் எண்ணங்கள் என்னவாய் இருக்கும்? அதனால் தன் பொறுப்பு என்ன? தான் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதெல்லாம் அவர்கள் மனத்திரையில் வந்துவந்து போய்க் கொண்டிருந்தன.

அப்படி ஒருநாள் அவர்கள் வழக்கம் போல தனது தியானத்தை முடித்துவிட்டு குகையில் இருந்து வந்த போது, ஒரு குரல் அவர்களை ‘யா முஹம்மது?’ என்று அழைத்து அவர்களின் கவனத்தை கலைத்தது. குரல் வந்த திசையில் உற்று நோக்கினார்கள். அண்ணலாருக்கு எதுவும் தென்படவில்லை. சுற்றும் முற்றும் ஏறிட்டார்கள்.

கடைசியில் மேல் வானத்தை நோக்கியவர்களுக்கு, அந்தரத்தில் ஒரு பலகையின் மீது அமர்ந்தவாறு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் காட்சி அளித்தார்கள். இதைக்கண்டதும் அண்ணலாருக்கு மீண்டும் அச்சம் தலைதூக்கியது. அப்படியே உடம்பெல்லாம் வெட வெடுத்தவர்களாக ஓடோடி சென்று மீண்டும் போர்வையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார்கள்.

அப்போது அல்லாஹ் வெளிப்படுத்திய வசனம் தான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு கட்டளையாக அறிவிக்கத் தொடங்கினான்.

அக்கால சூழ்நிலையில் அரபியர் மத்தியில் குடிகொண்டிருந்த அத்தனை பழக்க வழக்கங்களையும் இடித்துரைத்து தடை செய்யச்சொல்லிய கட்டளைகளை எப்படி அந்த மக்கள் ஏற்று கொள்வார்கள். மனிதனுக்கு இயல்பாகவே கேளிக்கை, கொண்டாட்டங்களில் உள்ள ஈர்ப்பு அலாதியானது. அதனை கைவிடுங்கள் என்றால் யார் தான் முன்வருவார்கள்.

அதோடு மட்டுமில்லாமல், ஆண்டாண்டு காலமாய் கையாண்டு வந்த சிலை வணக்கத்தை தவிர்த்து, ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

உருவமில்லாத இறைவனைப்பற்றி, கற்பனை செய்யவோ இப்படி தான் என்று அடையாளம் காட்டக்கூடாத ஒன்றை, மனஓர்மையோடு தாங்கள் சொல்லிய முறையில் தொழ வேண்டும் என்றால் அதனை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?. அதுவும் இரவில் தனிமையில் விழித்திருந்து இறைவனை தொழ வேண்டும் என்றால், தங்கள் சுகத்தைத் துறந்து இறைவனின் கட்டளைக்கு மக்கள் அடிபணிவார்களா?

விடை தெரியாத இந்த கேள்விகளைப் பற்றி கவலைப்படாத அண்ணல் எம்பெருமானார் தங்கள் கடமையை செவ்வனே செய்ய முற்பட்டார்கள்.

இறைச்செய்தியை அறிந்த உடனே ‘ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனது திருத்தூதராக முகம்மது (ஸல்) அவர்கள் உள்ளார். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’, என்று உறுதிமொழி கூறி தன்னை இஸ்லாமிய கோட்பாட்டில் இணைத்துக் கொண்ட முதல் பெண் என்ற பெருமை கதீஜா நாயகி அவர்களுக்கு கிடைத்தது.

அதன்பின் அண்ணலாரின் அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், ‘நபியே நீங்கள் உண்மையாளர். உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லி அறியாதவர். நான் உங்களோடு பழகிய காலகட்டங்களில் உங்கள் நற்குணங்களில் என்னை இழந்துள்ளேன். எனவே நான் உங்களை இறைத்தூதராக ஒப்புக்கொள்கிறேன் என்று ‘கலிமா’ சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் உங்களின் இந்த இறைப்பணியில் எல்லா நிலைகளிலும் உங் களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொழியும் அளித்தார்கள்.

அண்ணலாரின் மருமகன் அலி (ரலி) அப்போது சிறுவயதாக இருந்த போதும் கூட அண்ணல் எம்பெருமானாரின் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அறிவுரையும், அரவணைப்பும் அலி (ரலி) அவர்களின் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களைத் தோற்றுவித்தன. சிறுவர்களில் அலி (ரலி) அவர்கள் தான் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள்.

இந்த கட்டளையின் முக்கிய பகுதியாக ‘நபியே, நீங்கள் இரவுத்தொழுகையை நிறைவேற்றுங்கள். இரவின் முற்பகுதியில் அதனை நிறைவேற்றுங்கள். கிட்டத்தட்ட பாதிநேரம் அல்லது அதில் சிறிது குறைத்தோ, அதிகரித்தோ நீங்கள் அந்த கடமையை நிறைவேற்றுங்கள். நல்லடியார்களுக்கு அதனை நிறைவேற்றும்படி கட்டளையிடுங்கள்’ என்றும் அல்லாஹ் உத்தரவிட்டான்.

நபிகள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “இரவின் நடுநிசியை தாண்டிய பகுதியில், விடியலை நோக்கி நகரும் அந்த நேரத்தில் அல்லாஹ் ஏழாவது வானத்தின் அடியில் வந்து, ‘என் அடியார்களில் யாராவது என்னிடம் எதையாவது கேட்க நினைக்கிறார்களா? அவர்கள் வேண்டியது அத்தனையும் நான் வழங்க காத்திருக்கிறேன். செல்வம் வேண்டுமா, அறிவு வேண்டுமா, ஆரோக்கியம் வேண்டுமா, நோயிலிருந்து நிவாரணம் வேண்டுமா? கடனிலிருந்து நிவர்த்தி வேண்டுமா, பிள்ளைச் செல்வங்கள் வேண்டுமா? எந்த சுபிட்சம் வேண்டுமென்றாலும் அள்ளி வழங்க காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கும் என் அடியாருக்கும் இடையில் எந்தவித திரையும் இல்லை. எனவே என்னிடமே கையேந்துங்கள்’ என்று அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி கூறுகிறான்”.

இன்னுமொரு இடத்திலே குறிப்பிடும் போது, ‘என் அடியான் நான் கட்டளை இட்டேன் என்பதை நிறைவேற்றுவதற்காக, எனக்கு முற்றிலும் அடி பணிந்தவனாக சுகமான தூக்கத்தை, இதம் தரும் படுக்கையை, இதயம் குளிரச் செய்யும் மனைவியை எல்லாம் உதறி தள்ளி விட்டு என்னை தொழுவதற்காக எழுந்து நிற்கின்றான். அவனது இந்த செயல் என்னை ஆனந்தப்படுத்தியதால், அந்த நிலையில் அவன் எதை கேட்பினும் அது அவனுக்கு நன்மை தரும் என்றால் உடனேயும், சில சமயம் காலம் தாழ்த்தியும், சில சமயம் அதனை மறுமையிலும் வழங்குவேன். எல்லாமே அவன் நன்மையைக் கருதியே’ என்று இறைவன் உறுதியளிக்கிறான்.

நபி பெருமானார் (ஸல்) சொன்னார்கள், ‘தஹஜ்ஜத்’ என்ற இரவுத்தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்தால் ஒருவன் அதனை தொழாமல் இருக்கவே மாட்டான். அல்லாஹ் அதில் கொடுத்த முக்கியத்துவத்தை நினைத்தால், அதனையும் அவன் ஐந்து வேளை தொழுகை போல் கட்டாய கடமையாக்கி விடுவானே என்று சந்தேகப்பட்டேன், என்றார்கள்.

அத்தகைய சிறப்புமிகு தஹஜ்ஜத் தொழுகையை நபிகள் நாதர் தன் வாழ்வில் இடைவிடாமல் நிறைவேற்றி வந்தார்கள். நம்மை நிறைவேற்றவும் சொன்னார்கள்.

(தொடரும்)


Next Story