காமனை அழித்த சிவபெருமான்


காமனை அழித்த சிவபெருமான்
x
தினத்தந்தி 14 March 2018 8:14 AM GMT (Updated: 14 March 2018 8:14 AM GMT)

பசுஞ்சோலை சூழ, அமைதி பரிபாலணம் செய்யும் அழகிய கிராமம் மரத்துறை.

பசுஞ்சோலை சூழ, அமைதி பரிபாலணம் செய்யும் அழகிய கிராமம் மரத்துறை. இந்தக் கிராமத்தில்தான் எத்தனை கோவில்கள்? கிராமத்தைச் சுற்றி வலம் வரும்போது நமக்கே பிரமிப்பு ஏற்படுகிறது.

இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன வெனில் அனைத்து கோவில்களையும் இந்த ஊர்மக்கள் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

ஊரின் இதயப் பகுதியில் உள்ளது மன்மதன் ஆலயம். இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவனின் முன் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். உள்ளே கருவறையில் மூலவரான மன்மதன் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

மன்மதனின் கதை என்ன?

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டு முடிந்துவிட்டது. ஆனால், மறுபடியும் அசுரர்கள் கொடுத்த தொல்லையை தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாது தவித்தனர்.

சிவபெருமானிடம் சென்று முறையிடுவது என்று முடிவு செய்தனர். சிவபெருமானை நாடி சென்றனர். சிவபெருமானோ தவத்தில் இருந்தார். தேவர்கள் வருகையை உணர்ந்த சிவ பெருமான் அவர்களிடம் ‘என்ன வேண்டும்?’ என வினவினார்.

அசுரர்களால் தாங்கள் படும் சிரமங்களையும் இன்னல்களையும் எடுத்துக்கூறினார்கள் தேவர்கள். அனைத்தையும் கேட்ட சிவபெருமான் ‘முருகன் வருவார் உங்களை காப்பாற்றுவார்’ என கூறி விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. அசுரர்களின் கொட்டம் அடங்கவில்லை. முருகனும் வரவில்லை. தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக்கணை வீசி சிவபெருமானின் தவத்தை கலைக்கும்படி கூறினர். மறுத்தான் மன்மதன்.

‘மறுத்தால் சாபம் விடுவோம்’ என மிரட்டினார்கள் தேவர்கள். வேறு வழியின்றி மன்மதன் சிவன் மீது மன்மத பாணத்தை ஏவி அவர் தவத்தைக் கலைத்தான். கோபமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனைப் பார்க்க, மன்மதன் எரிந்து போனான்.

சிவபெருமான் தன் ஞானக் கண்ணால் மன்மதனை அழித்த செயலையே ‘காம தகனம்’ என்கின்றனர்.

மாசி மாதத்து மகத்தன்று மன்மதன் ஆலயங்களில், இந்த ‘காம தகனம்’ விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆலயத்திலும் காமதகன விழா மிகப் சிறப்பாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இதை ஒரு கிராமத்து விழாவாகவே மக்கள் நினைத்து கொண்டாடுகின்றனர்.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றது. இந்த ஆலயத்திற்கு 9.3.70-ம் ஆண்டிலும், அதன் பின் 16.9.96-ம் ஆண்டிலும் குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது.

இங்குள்ள மன்மதனை வணங்குவதால் நம்மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயிலிட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என பக்தர்கள் நம்புவது நிஜம்.

இத்தலம் செல்ல பந்தநல்லூர், சீர்காழி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, முதலிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நகரப் பேருந்துகளும் உள்ளன.

-மல்லிகா சுந்தர்

Next Story