தீராத குறைகளையும் தீர்க்கும் தீர்த்தகிரி முருகன்


தீராத குறைகளையும் தீர்க்கும் தீர்த்தகிரி முருகன்
x
தினத்தந்தி 14 March 2018 9:47 AM GMT (Updated: 14 March 2018 9:47 AM GMT)

வள்ளிக்கும், முருகனுக்கும் சம உயர சிலை அமைந்த அபூர்வ ஆலயம், முருகப்பெருமானின் திருவடிகள் அமைந்துள்ள அழகிய மலை, வள்ளியை மணம் முடிக்கும் முன் முருகன் இளைப்பாறிய மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்.

வள்ளியை மணம் புரிய விரும்பிய முருகப்பெருமான், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி, பாதம் பதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளன.

ஆலயத்தின் பின்புறம் தென்திசையில் மிக உயரமான பசுமை மலை மனதுக்கு இதமளிக்கிறது. வடக்கே நோக்கினால் ஊர்களும், பசுமை வெளியும் மனதை கவர்கிறது.

வசூரை ஒட்டிய மலைக்கூட்டத்தில் சிறியமலை மீது முருகப்பெருமானின் ஆலயம் உள்ளது. மலை அடிவாரத்தில் செல்வ விநாயகர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் பெரிய அளவிலான திருக்குளம் இருக்கிறது. செல்வ விநாயகர் சன்னிதியில் இருந்து மலையேறும் படிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

222 படிகள் ஏறினால் மலை உச்சியை அடையலாம். பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகப்பெருமானின் திருவடிகள் காட்சி தருகின்றன. அதனையடுத்து முருகனின் பணிவிடைப் பெண்கள் என்றுகூறப்படும் கன்னிமார்கள் சன்னிதி படியேறும் போது இடதுபுறம் அமைந்துள்ளது. அதன் வலப்புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரம் காட்சி தருகின்றது.

மலை ஏறியதும், அழகிய முருகப்பெருமானின் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இவ்வாலயத்தின் மூலவர் பழைமையானவராக இருந்தாலும், அண்மை கால கட்டிட அமைப்பு அதனைப் புதுக்கோவிலாக மாற்றியுள்ளது.

ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தல மரமான நாவல்மரம் ஆகியவை உள்ளன. ஆலமரத்தின் அடியில் பாறையின் கீழே இன்றும் சுனைத் தீர்த்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இத்தலம் தீர்த்தகிரி என வழங்கப் படுகிறது.

மூலவர் வள்ளி-தெய்வானையோடு கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் முருகப்பெருமானும், வள்ளியம்மையும் சம அளவான உயரத்திலும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர்.

காதலித்து மணம் முடித்த முருகப்பெருமான், காதலியான வள்ளியை சம உயரத்தில் வைத்துப் பார்த்துள்ளது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இதனாலோ என்னவோ இத்தலத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்கள், காதல் திருமணங்களே என்பதை அறியும் போது வியப்பளிக்கிறது.

இங்குள்ள மூலவர் முருகப்பெருமான், வேலைவாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என வேண்டிய வரத்தை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார்.

இவ்வாலயத்தை மலையடி வாரத்தில் உள்ள வசூர் நடராஜன் என்ற பெரியவர் புனரமைத்த தாகக் கூறப்படுகிறது. நிர்வாகத்தை மலையடிவார கிராமங்களான வசூர், அலமேலுமங்காபுரம், பெருமுறை ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் கவனித்து வருகின்றனர்.

இவ்வாலயத்தில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகைக்கு முதல்நாள், மறுநாள் என இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இது தவிர பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்ற விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

இந்த ஆலயம் செல்வதற்கு சென்னை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சேரி அடுத்த வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அதன் தென்புறம் உள்ள மலை மீது அமைந்த ஆலயமே தீர்த்தகிரி முருகன் கோவில். இது வேலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வசூர் ஊரின் எல்லையின் உள்ளது.

- பனையபுரம் அதியமான்

108 அடிய உயர முருகப்பெருமான்

இவ்வாலயத்திற்கு 108 அடி உயர முருகன் சிலையை மலேசிய நாட்டு பத்துமலை முருகன் வடிவில் தீர்த்தகிரி மலை மீது அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. சிலை வடிவமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்துமலை முருகன் சிலையை செய்த சிற்பியே இந்த சிலையையும் வடிவமைக்க உள்ளாராம்.

Next Story