ஆன்மிகம்

இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல் + "||" + Lord pertinent Request

இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்

இறைவனுக்கு  ஏற்புடைய வேண்டுதல்
தூய்மைமிகு இறையுறவில் நிலைத்திருக்கவும், மாட்சிமிகு நிறைவாழ்வை இலக்காகக் கொண்ட இறை வழியில் பயணிக்கவும், இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துவது வேண்டுதல்கள் ஆகும்.
‘வேண்டுதல் கிறிஸ்தவர்களின் சிறப்பு உரிமை’ என்கிறார் மார்ட்டின் லுத்தர் அவர்கள். வேண்டு தல்கள் நம் மனித வாழ்வை புனிதப்படுத்த வேண்டுமானால், அது இறைவனுக்கு ஏற்புடையதாயிருத்தல் வேண்டும்.

‘இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்’ எதுவென்பதை இறைமகன் இயேசு ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய உவமையில் எளிமையாக விளக்குகிறார்.


பரிசேயரும் வரிதண்டுபவரும்

இறைவனிடம் வேண்டுதல் செய்ய இருவர் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று வேண்டினார்.

ஆனால், வரிதண்டுபவரோ தொலைவில் நின்று கொண்டு தம் மார்பில் அடித்தவராய், ‘கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்’ என்று வேண்டினார்.

‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என்றார் ஆண்டவர் இயேசு.

பரிசேயர்

முதலாவது வருகின்றவர் திருச்சட்டத்தைக் கற்றுத் தேறினவர்களான பரிசேயர். ‘பரிசேயர்’ எனும் வார்த்தை ‘பரிசோஸ்’ என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து உருவானதாகும். இது, ‘தலைமை ஆசாரியர்’, ‘பரிசேயர்’ என்ற இரு பொருளைத் தருகிறது.

இவர்கள், ‘திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதே மானிட வாழ்வின் தலையாய இலக்கு’ என்ற கருத்தாக்கமுடையவர்கள் (மத்தேயு 23:23). அப்படியே திருச்சட்டத்தை கடுகளவும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். எனவே, ‘தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள்’ என்று நினைப்பவர்கள்.

இங்கே கூறப்படும் பரிசேயருடைய நன்றியுரை அல்லது மன்றாட்டு போலியானது என்று கருத முடியாது. ஏனெனில் இது யூத குருமார்  களின் இயல்பான மன்றாட்டு தான்.

சிமியோன் பென் யோகாய் என்ற யூத குருவானவர் தனது நூலில், ‘இவ்வுலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால், அது நானும் என் மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான் தான்’ என்கிறார்.

இந்த மனநிலை தான் ஒவ்வொரு பரிசேயர்களிடமும் காணப்பட்டது. இந்த பரிசேயரும் தன் மன்றாட்டில் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தியதோடு, கடவுளுக்கு முன்பாகத் தன்னை நீதிமானாகக் கருதுவதோடு, பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.

இறைவனை நோக்கி மன்றாடுவதற்கு பதிலாக, தன் புகழைக்கூறி, சுய நீதியை நிலை நாட்டும் ஒரு செயலை செய்கிறார்.

இவர் கடவுளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் தான் ஏற்கனவே ‘முழுமையானவன்’ என்ற நினைவு அவரிடம் மிகுந்திருந்தது.

வரி தண்டுபவர்

மற்றொருவர் வரி தண்டுபவர். ‘வரி தண்டுபவர்’ எனும் வார்த்தை ‘டோலோனஸ்’ எனும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதாகும்.

புதிய ஏற்பாட்டு காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவரி மற்றும் நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது.

இப்பணியில் பெரும்பாலும் யூதர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் மிகவும் இழிநிலையோராய் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர் (லூக் 19:7).

ஏனெனில் வரி செலுத்துவதை யூதர்கள் இறைவனுக்கு எதிரான பெருங்குற்றமாக கருதினர். இவர்கள் விபசார கூட்டத்தோடு சேர்க்கப்பட்டனர்.

இங்கே வரி தண்டுபவர் ‘தூய்மை நிறைந்த இறைவனின் முன்னிலையில், மாசு நிறைந்தவனாய் நிற்கின்றேன்’ என்ற குற்ற உணர்வு மிகுந்திட, அவரை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு, தூரத்தில் நின்று மன்றாடுகிறார்.

இவர் இறைவனின் திருவடியினில் தன் தீய ஆன்மாவை ஒப் படைத்து, செருக்கை விடுத்து, சுயத்தை அர்ப்பணிக்கிறார். இறைவனிடம் கருணையும், பாவமன்னிப்பும் பெற்றிட வேண்டி கதறு கிறார். இறைவனின் கருணையால் கிடைக்கப்பெறும் தூய்மையான நிறைவாழ்வுக்காகப் போராடுகிறார்.

இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்

யூதர்களின் பார்வையில் உயர்நிலையினராய் கருதப்பட்ட பரிசேயர், இழிநிலையோராய் எண்ணப்பட்ட வரிதண்டுபவர் ஆகிய இருவர் மீது விழுந்த இயேசுவின் புதிய பரிமாணப் பார்வையினை இந்த உவமையில் காணலாம்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்டத் தன்மையுடையவர்கள். பரிசேயர் என்பதை அன்றைய கால பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாகவும், வரிதண்டுபவரை யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.

மனித ஞானத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இரண்டு உண்மைகள் இங்கே புலப்படுகின்றது. மாபெரும் புனிதராய் கருதியவர் நீதியற்றவராய் புறக்கணிக்கப்பட, ஏழைப் பாவியர் நீதியராய், தூயராய் ஏற்கப்படுகின்றனர்.

பரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்தம் தற்புகழ்ச்சியும், தன்னலமும் நிறைந்த வேண்டுதல் இங்கே நிராகரிக்கப்படுகிறது. இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.

‘செருக்குற்றோரைக்கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்வு நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’, (1 பேதுரு 5:5).

- அருட்பணி.ம.பென்னியமின், பரளியாறு.