மகாலட்சுமி அருளைத் தரும் திருவாழ்மார்பன்


மகாலட்சுமி அருளைத் தரும் திருவாழ்மார்பன்
x
தினத்தந்தி 20 March 2018 3:35 PM IST (Updated: 20 March 2018 3:35 PM IST)
t-max-icont-min-icon

இக்கோவிலில் விஷ்ணுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகாலட்சுமி வாழும் திருமாலின் திருமார்பு தரிசனத்தால், லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

சங்கரமங்கலம் என்ற கிராமத்தில் வசித்த சங்கரமங்கலத்தம்மையார் என்ற பெண்மணி ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அங்கிருக்கும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபடுவார். மறுநாளான துவதாசி நாளில் அவர், அந்தக் கோவிலில் இருக்கும் துறவிகள் அனைவருக்கும் அன்னதானம் செய்து மகிழ்ச்சி அடைவார்.

அவர் கோவிலுக்குச் சென்று வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், அந்த அம்மையாரைக் கோவிலுக்குச் செல்லவிடாமல் தடுத்ததுடன், மறைவாக இருந்து கொண்டு, அவருக்குப் பல்வேறு துன்பங்களையும் கொடுத்து வந்தான். அதனால் வருத்தமடைந்த அந்த அம்மையார், தான் கோவிலுக்கு வந்து செல்லும் போது, கண்களுக்குத் தெரியாத அசுரன் ஒருவன் தனக்குக் கொடுக்கும் துன்பத்தைச் சொல்லி அதிலிருந்து தன்னைக் காக்கும்படி வேண்டி வந்தார்.

ஒரு நாள், அவர் அந்தக் காட்டு வழியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்த போது, திருமணமாகாத இளைஞன் ஒருவன், அசுரன் ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியாகிப் போனது. அங்கு அசுரனையும் காணவில்லை, அவனுடன் போரிட்ட இளைஞனையும் காணவில்லை.

அதன் பிறகுக் கோவிலுக்குச் சென்ற அம்மையார், கோவிலில் இருந்த இறைவனைப் பார்த்த போது, தான் வரும் வழியில் அசுரனுடன் போரிட்டுக் கொண்டிருந்த திருமணமாகாத இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தனக்குத் துன்பமளித்துக் கொண்டிருந்த அசுரனைத் தான் வழிபட்டு வந்த இறைவனே வந்து அழித்திருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ந்தார். அன்றிலிருந்து அந்தக் கோவிலில் இறைவன், திருமணமாகாத இளைஞராகவேக் காட்சியளிக்கிறார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் இருக்கும் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் எட்டு அடி உயரத்தில் திருவல்லபனாக இருக்கிறார். இங்கு மேற்கு நோக்கிய நிலையில் சுதர்சனமூர்த்தியாகவும் இறைவன் காட்சி தருகிறார். இங்குள்ள இறைவன் திருவாழ்மார்பன், கோலப்பிரான் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இறைவி செல்வத் திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் பிற கோவில்களைப் போன்று கருடன் இறைவனுக்கு எதிரில் இல்லாமல் 50 அடி உயரத்தில் இருக்கும் கல்தூண் ஒன்றில் பறக்கும் நிலையில் இருக்கிறார். இறைவனை வேண்டியவுடன், இக்கோவிலின் கல்தூணில் ஐம்பது அடி உயரத்தில் இருக்கும் கருடன், பக்தர்களின் வேண்டுகோளைச் செயல்படுத்த இறைவனை உடனடியாக ஏற்றிச் செல்லத் தயார் நிலையில் இருப்பதாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

திருவாழ்மார்பன்

அன்றைய காலத்தில், கேரளாவில் திருமணமாகாத இளைஞர்கள் மேலாடை அணிவதில்லை என்பதால், இக்கோவிலில் திருமணமாகாத இளம் தோற்றத்தில் இருக்கும் இறைவனும் கிழக்கு நோக்கி நின்ற நிலையில், மேலாடையின்றி மார்பு தெரியும் நிலையிலேயேக் காட்சியளிக்கிறார். இறைவியான லட்சுமி இறைவனின் மார்பில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதால், மார்பு தெரியக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இத்தலத்து இறைவன் ‘திருவாழ்மார்பன்’ என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக விஷ்ணு கோவில்களில் இறைவனின் திருவடி தரிசனம் சிறப்புக்குரியதாக இருக்கும். இங்கு இறைவனின் மார்பு தரிசனம் சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் இறைவனின் மார்பு தரிசனம் கண்டவர்களுக்கு இறைவி லட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைப்பதுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்கின்றனர்.

வழிபாடு

இக்கோவிலில் தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் விஷ்ணுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதம் பூசம் நட்சத்திர பத்து நாட்களுக்கு முன்பாகக் கொடியேற்றத்துடன் தொடங்கி, பூசம் நட்சத்திர நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடையும் பத்து நாட்கள் திருவிழா இக்கோவிலின் சிறப்புத் திருவிழாவாக இருக்கிறது.

கதகளி நேர்ச்சை

இக்கோவிலில் குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் கேரளாவின் புகழ்பெற்ற கதகளி நடன நிகழ்ச்சியை நேர்ச்சையாக நடத்துகின்றனர். தினசரி நடைபெறும் இந்த நேர்ச்சைக்காகக் கோவிலில் கதகளி நடனக் கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நடனக்குழுவினைக் ‘கலாசேத்திரா’ என்று அழைக்கின்றனர்.

அமைவிடம்

கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா நகரிலிருந்து அம்பலப்புழா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குத் திருவல்லா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 

Next Story