ஜோதிடத்தில் மருத்துவம் : நட்சத்திரம் தரக்கூடிய நோய்கள்


ஜோதிடத்தில் மருத்துவம் : நட்சத்திரம் தரக்கூடிய நோய்கள்
x
தினத்தந்தி 22 March 2018 11:30 PM GMT (Updated: 21 March 2018 7:56 AM GMT)

கடந்த வாரம் பூசம் வரையிலான நட்சத்திரங்கள் தரும் நோய்கள் பற்றி பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

வான்வெளியில் நிலைகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் பற்றியும், அவற்றில் ஜோதிடத்தை கணிக்கப் பயன்படும் 27 நட்சத்திரங்கள் குறித்தும், அந்த நட்சத்திரங்கள் தரும் நோய்கள் பற்றியும் பார்த்து வருகிறோம். 

ஆயில்யம்

இந்த நட்சத்திரமானது, ஆறு நட்சத்திரங் களின் கூட்டு அமைப்பாகும். புதன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், வானத்தில் பாம்பு போல் தோற்றம் அளிக்கும். ராட்சச குணம் கொண்ட இந்த நட்சத்திரம், வலது பக்கம் இருக்கும். கீழ்நோக்கும் பார்வைத் தன்மை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் அரிப்பு, தசைப்பிடிப்பு, காய்ச்சல், காது கோளாறு, மூச்சுப் பிரச்சினை, தலைவலி, நெஞ்சுவலி போன்றவை உண்டாகக்கூடும்.

மகம்

கேதுவை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், ஐந்து நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பாகும். வான்வெளியில் ஊஞ்சல் போல் தோற்றம் அளிக்கும். ராட்சச குணம் கொண்ட இந்த நட்சத்திரங்கள், இடது பக்கம் இருந்தாலும், கீழ் நோக்கும் பார்வை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வயிற்றுக்கோளாறு, தலைவலி, கண் பார்வைக் கோளாறு, உடல் வலி, கால், மூட்டு பிரச்சினை, செரிமான பிரச்சினை, ஒவ்வாமை நோய்கள் வந்து போகும்.

பூரம் 

இது இரண்டு எண்ணிக்கை கொண்ட நட்சத்திரமாகும். சுக்ரனை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், மனித குணம் கொண்டவை. வானத்தில் கட்டில் போன்ற வடிவ அமைப்பில் இவை தென்படும். இடது பக்கமாக இருக்கும் இந்த நட்சத்திரமும், கீழ் நோக்கும் பார்வை கொண்டதுதான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, இதயக் கோளாறு, ஜலதோ‌ஷம், குடல்புண், மூலநோய், தலைவலி, உடல் கட்டிகள், தோல் வியாதி  போன்றவை வரக்கூடும்.

உத்திரம்

சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரமும், இரண்டு மட்டுமே இருக்கக் கூடிய நட்சத்திரமாகும். வானத்தில் கட்டில் கால்கள் போல் வடிவமைப்புடன் காணப்படும். மனித குணம் கொண்டவை. இடது பக்கம் உள்ளவை. மேல்நோக்கும் பார்வை கொண்ட இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பாதவெடிப்பு, சிறுநீர் பிரச்சினை, மூல நோய், வாயு தொல்லை, வாய் மற்றும் பற்கள் பிரச்சினை, ரத்த குறைபாடு, புதிய நோய்கள், உடல் பருமன் போன்றவை தாக்கக்கூடும்.

ஹஸ்தம்

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமாக காணப்படும் இந்த நட்சத்திரங்கள் தேவ குணம் கொண்டவை. வானத்தில் இவை உள்ளங்கை போன்று தோற்றம் அளிக்கும். வலது பக்கமாக இருக்கும். சம நோக்கும் பார்வை தன்மை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பற்சிதைவு, காது கோளாறு, தோல் வியாதி, வாயு தொல்லை, சளி தொல்லை, சுவாசக் கோளாறு, குடல் புண்  போன்ற வியாதிகள் வரலாம்.

சித்திரை 

வான்வெளியில் முத்து போல் தோற்றம் அளிக்கும் இந்த நட்சத்திரம், வான் வெளியில் ஒரே நட்சத்திரமாக இருக்கக்கூடியது. செவ்வாய் இதன் அதிபதியாக உள்ளது. வலது பக்கமாக இருக்கும். சம நோக்கும் பார்வைத் தன்மை கொண்டவை. இது ராட்சச குணம் கொண்டதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு உடல் தசைப்பிடிப்பு, அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, கழுத்து வலி, வாயு தொல்லை, கண் கோளாறு, நரம்புத் தளர்வு போன்ற நோய்கள் உருவாகக்கூடும்.

சுவாதி

ராகுவை அதிபதியாக கொண்டது சுவாதி நட்சத்திரம் என்றாலும், இது தேவ குணம் கொண்டது. ஒரே நட்சத்திரம் கொண்டது. வான்வெளியில் மாணிக்கம் போன்ற வடிவத்தில் காட்சி தரும். வலது பக்கம் இருக்கும். சமநோக்கும் பார்வை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடல்புண், நெஞ்சில் சளி தொல்லை, மூல நோய், வாயு தொல்லை, ஒற்றை தலைவலி, கண் பார்வைக் கோளாறு, மூட்டு வலி போன்றவை தோன்றக்கூடும்.

விசாகம்

குருவை அதிபதியாகக் கொண்டது விசாக நட்சத்திரம். ராட்சச குணம் கொண்ட இந்த நட்சத்திரம் ஐந்து நட்சத்திரங்களில் கூட்டு அமைப்பாகும். வானில் சக்கரம் போல் தோற்றம் அளிக்கக்கூடிய இவை, இடது பக்கமாக இருக் கும். கீழ்நோக்கும் பார்வை தன்மை கொண்ட இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பருவநிலைக் காய்ச்சல், வயிற்றுக்கோளாறு, செரிமானப் பிரச்சினை, மூட்டு வலி, காரமின்றி வரக்கூடிய நோய்கள், ஈறு பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

அனு‌ஷம் 

மூன்று நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பாக உள்ளது அனு‌ஷம் நட்சத்திரம். சனி கிரகத்தை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், விண்வெளியில் குடை போன்ற வடிவத்தில் தென்படும். தேவ குணம் கொண்டவை. இடது பக்கமாக இருந்தாலும், சமநோக்கும் பார்வை தன்மை கொண்டவை. இதில் பிறந்தவர்களுக்கு, பித்த நோய், குடல் புண், கண்பார்வைக் கோளாறு, வாயு தொல்லை, தொற்று நோய், இதய நோய், மன அழுத்தம் போன்றவை வந்து போகும்.

கேட்டை

நட்சத்திரங்களின் வரிசையில் 18–வது நட்சத்திரமாக இருப்பது கேட்டை. இது மூன்று நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பாகும். புதன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், வானத்தில் குண்டல வடிவத்தில் தோற்றம் அளிக்கக்கூடியது. ராட்சச குணம் கொண்டவை. இடது பக்கமாக இருக்கக்கூடிய இந்த நட்சத்திரம் சமநோக்கும் பார்வை தன்மை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ரத்தக்கொதிப்பு, மூச்சுக் கோளாறு, வாயு தொல்லை, முதுகுவலி, பருவ கால நோய்கள், செரிமானக் கோளாறு, தலைவலி போன்றவை உண்டாகும்.

மூலம் 

கேது கிரகத்தை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் மூலம். இது ராட்சச குணம் கொண்டது. ஆறு நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பு இதுவாகும். வலது பக்கமாக இருக்கக் கூடியது. கீழ்நோக்கும் பார்வை தன்மை கொண்ட இந்த நட்சத்திரம், வானத்தில் அங்குசம் போல் தோற்றம் கொண்டு காணப்படும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மர்ம காய்ச்சல், தலைவலி, பற்கள்  பிரச்சினை, மூட்டு வலி, தொடை வலி, தோல் அரிப்பு, தொற்று நோய் தோன்றக்கூடும்.

பூராடம் 

சுக்ரன் அதிபதியாக இருக்கும் நட்சத்திரம் பூராடம். இது மனித குணம் கொண்டது. நான்கு நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பு இதுவாகும். இவை ஆகாயத்தில் அரை வட்ட வடிவம் போல் காட்சி தரக்கூடியது. வலது பக்கம் இருப்பவை. கீழ் நோக்கும் பார்வை தன்மை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சளி தொல்லை, மூல நோய், ரத்த குறைபாடு, உடல் உஷ்ணம், பாதங்களில் வலி, மலச்சிக்கல், மூச்சுக்கோளாறு போன்ற நோய்கள் ஏற்படலாம்.

உத்திராடம் 

எட்டு நட்சத்திரங்களின் எண்ணிக்கையில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரம், உத்திராடம் ஆகும். இது சூரியன் கிரகத்தை அதிபதியாகக் கொண்டது. வான்வெளியில் யானையின் தலை போல காட்சி தரக்கூடிய இந்த நட்சத்திரம், வலது பக்கமாக இருக்கும். மேல் நோக்கும் பார்வை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, குடல்நோய், கண் பார்வைக் கோளாறு, மூட்டு வலி, தோல் அரிப்பு, வாய்ப்புண், நெஞ்சு வலி, தொற்று நோய் போன்றவை வரலாம்.

திருவோணம்

சந்திரனை அதிபதியாகக் கொண்டது திருவோணம் நட்சத்திரம். இது தேவ குணம் கொண்டது. மூன்று நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பாக இருக்கும் இந்த நட்சத்திரம் விண்ணில் வில் போன்ற வடிவத்துடன் காணப் படும். மேல் நோக்கும் பார்வைத் தன்மை கொண்டவை. இடது பக்கமாக இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பித்த நீர், வாயு தொல்லை, வயிற்றுப்புண், பற் சிதைவு, மூட்டு வலி, கண் பார்வைக் கோளாறு, மர்மக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

மீதமுள்ள நட்சத்திரங்களுக்கான நோய் களைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Next Story