ஆன்மிகம்

நல்வழிபடுத்தும் ராம நாமம் + "||" + Good way Ram

நல்வழிபடுத்தும் ராம நாமம்

நல்வழிபடுத்தும் ராம நாமம்
மனித குலத்தை மேம்படுத்த எம்பெருமாள் எடுத்த அவதாரமான ராமாவதாரத்தின் நாள் இந்த ராம நவமி.
பொதுவாக ராமநவமி விழா அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டாலும், ராமருக்கென்று அமைந்த தனி ஆலயங்களில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அயோத்தி ராமர் கோவில், ஆந்திராவின் பத்ராச்சலம் ராமர் கோவில், மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள் கோவில், புன்னைநல்லூர் சாளக்கிராம ராமர் கோவில், சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோவில், ஸ்ரீரங்கத்திலுள்ள கல்யாணராமர், பட்டாபி ராமர் ஆலயம் போன்ற  ஆலயங்களில் அதிகாலை அபிஷேக அலங்காரங்களுடன், ராமனை வழிபட்டு ராம நாமத்துடன் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஓதி, ராம நவமிக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

 மனிதன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் நியதிகளை கற்றுத்தந்து, மனித குலத்தை மேம்படுத்த எம்பெருமாள் எடுத்த அவதாரமான ராமாவதாரத்தின் நாள் இந்த ராம நவமி. இந்த நாளில் நீர், மோர், பானகம் தயார் செய்து அதை ராமனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின், பக்தர்கள் அனைவருக்கும் அவற்றை தாகம் தீர்க்கக் கொடுப்பது சிறப்பு. 

இந்த நாளில் விரதம் இருப்பது நல்லது. அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், ராமரை வணங்கி அன்று முழுவதும் ராம நாமத்தை பாராயணம் செய்வது சிறப்புக்குரியது. உள்ளத்தில் ராமனை நினைத்து ராம நாமத்தை எழுதியோ, மனனம் செய்தோ ஒருமுகமாக ராமரை சிந்தித்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும். ஏனெனில் ராமரை விடவும், ராம நாமமே சிறந்தது. மற்றவர் மனம் புண்படுத்தும் சொற்களை பேசாமலும், தீய செயல்களை செய்யாமலும், நேர்வழியில் சென்று அமைதி காத்து ராமரின் நற்குணங்களை நினைத்து அதன் வழி நாமும் செல்ல உறுதி கொள்ள வேண்டும்.  

–சேலம் சுபா.