ஆன்மிகம்

ஆலயங்களை முறையாக வலம் வாருங்கள் + "||" + Come to the temple regularly

ஆலயங்களை முறையாக வலம் வாருங்கள்

ஆலயங்களை முறையாக வலம் வாருங்கள்
ஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர், அதை நிந்திக்கின்றனர். சிலர் அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ ‘நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன்.
யாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை. ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை’ என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் அறியாமை வார்த்தைகள். இவர்கள் அனைவருமே ஆலயங்கள் சொல்லும் ஆன்மிக ரகசியங்களை சரிவர புரிந்துகொள்ளாதவர்கள்.


தன் வாழ்வில் பெரும்பாலும் ஆலயங் களுக்குச் செல்லாமல், அக வழிபாட்டை மட்டுமே சிந்தையில் நிறுத்தி, தன் வாழ்வை வென்ற சித்தர்கள் பலரும், தன்னுடைய இறுதி காலத்தில் ஆலயங்களுக்கு சென்று சமாதி நிலை அடையக் காரணம் என்ன? என்பதை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

சரி.. வாருங்கள்.. ஆலயம் சொல்லும் தத்துவத்தை சரியாக உணர்ந்து கொள்வோம்.

இந்த பிரபஞ்சம் அருளும், நம்முடைய சாதாரண புலன்களுக்கு புலப்படாத பேரின்ப நிலையை நாம் அடைய வேண்டுமானால், நம்முடைய ஆன்மா செயல்படும் ஆறுவகையான நிலைகளை ஒவ்வொருவரும் கடந்து வரவேண்டும்.

அப்படி கடந்து உள்ளே வாருங்கள். பேரின்ப நிலையை உங்களுக்கு உணர்த்துகிறேன் என்பதே ஆலயங்கள் கூறும் தத்துவமாகும்.

நம்முடைய ஆன்மாவில் மாறுபட்ட ஆறு நிலைகள் உள்ளன. அவை: பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, சீவான்மா, மந்திரான்மா, பரமான்மா.

மனிதன் என்பவர் வெறும் உடம்பல்ல, அறிவும் அல்ல.. அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மாவே மனிதன். ஆன்மா என்பது நம்மில் இயங்குவது; நம்மை இயக்குவது.

ஒருவன் தன்னுடைய உடல்தான் ‘நான்’ என்றும், அது மட்டுமே நிஜம் என்றும் நினைத்து வாழும்போது, அவன் ‘பூதான்மா’ ஆகிறான்.

அதே மனிதன் தன்னுடைய இச்சைகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தனக்குள் உட்கொள்ளும்போது, அவன் ‘அந்தரான்மா’ ஆகிறான்.

பஞ்ச பூதங்கள் முதல் ஆன்ம தத்துவங்கள் வரை அறிய முற்படும் மனதை தானாக கொள்ளும்பொழுது அவன் ‘தத்துவான்மா’ ஆகிறான்.

அந்த தத்துவான்மாவின் பயனாக, மேல்சொன்ன அனைத்தையும் அடக்கி ஆண்டு நானே பிரம்மம் என்று ஆணவ முனைப்பில் உணரும்பொழுது அவன் ‘சீவான்மா’ ஆகிறான்.

நான், எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சிவம் நிலை அடைய வேண்டி மந்திர உபாசனையில் நிற்கும்பொழுது அவன் ‘மந்திரான்மா’ ஆகிறான்.

கடைசியில் இறையோடு இரண்டற கலக்கும் அந்த நொடியில் அவன் ‘பரமான்மா’வாக மாறுகிறான்.

இந்த ஆறு நிலையைத் தான் ஆலயங்களிலும் வைத்து பொருத்திப் பார்க்க வேண்டும். அதன்படி...

முன்கோபுரம் - பூதான்மா

பலிபீடம் - அந்தரான்மா

கொடிமரம் - தத்துவான்மா

மூலவர் - சீவான்மா

இறை மந்திரம் - மந்திரான்மா

பரவெளி - பரமான்மா


ஒரு ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக நம்மை வரவேற்பது முன்கோபுரம். அந்த இடம் வந்த உடன் பூதான்மாவை அழிக்க வேண்டும். அதாவது இந்த உடல் தான் ‘நான்’ என்ற எண்ணத்தை அடியோடு அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்.

இரண்டாவதாக நாம் காண்பது பலிபீடம். இங்கே அந்தரான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது தன் இச்சைகள், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை அங்கே அழித்துவிட வேண்டும். அதன் பின்னர் தான் மேற்கொண்டு செல்ல வேண்டும்.

மூன்றாவதாக கொடிமரம். அங்கே தத்துவான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது மனம் தான் நான் என எண்ணும் அந்த நிலையை அழித்துவிட வேண்டும். அதாவது மனம் அங்கே வேரறுக்கப்பட வேண்டும்.

நான்காவதாக நாம் காண்பது மூலவர். அங்கே தான் நம்முடைய சீவான்மா அழிக்கப்பட வேண்டும். அதாவது நம்முடைய ஆணவம். ‘அனைத்தும் நாமே’ என்ற ஆணவம் அங்கே அழிக்கப்பட வேண்டும்.

ஐந்தாவதாக நாம் செய்ய வேண்டியது நம்மை உணர்தல். அதற்கு தான் இறைமந்திரம் உதவி செய்கிறது. இறை மந்திரங்களை உச்சரித்து மனதை ஒருநிலைப்படுத்தும்போது, ‘மந்திரான்மா’ மறைந்துவிட வேண்டும். அதாவது பேரின்ப வீடு வேண்டி நிற்கும் அந்த ஆன்மா, அந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

ஆறாவதாக நாம் காண்பது தீப ஒளி. அதாவது கற்பூர, தீப ஆரத்தி. இறைவனுக்கு ஆராதனை செய்யும்போது, தீயில் கரைந்து போகும் கற்பூரத்தைப் போல, நாமும் இறைவனோடு இரண்டற கலந்து, பரவெளி நிலையான ‘பரமான்மா’ நிலையை அடைய வேண்டும்.

இந்த வகையில் ஆறு வகை பேதங்களை, அதாவது ஆறு வகை ஆன்ம பேதங்களை நாம் கடந்து சென்றோமானால், நாம் இறையுடன் இரண்டற கலக்கும் உன்னத நிலைக்குச் செல்லலாம். இதை உணர்த்துவது தான் ஆலயங்கள்.

கோபுரம் முதல் தீபம் வரை, அதன் நிலைகளில் நாம் சரியாக கடந்து சென்றோமானால், நாம் பேரின்ப நிலையை அடையலாம். இதை உணரத்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைத்தார்கள். அந்த தத்துவங்களை நாம் உணரத்தான் சித்தர் பெருமக்களும், அங்கே சமாதி நிலைக்குச் சென்று அமர்ந்தார்கள்.

அற்புதமான நிலைக்கு செல்ல வேண்டிதான் இந்த ஆலய அமைப்பே தவிர, வேண்டுதல் செய்யவோ.. பூஜைகளும் பரிகாரங்களும் செய்யவோ மட்டுமே ஆனதல்ல ஆலயங்கள்.

மேற்சொன்ன வகையில் ஆலயங்களுக்கு ஒரே ஒரு முறை சென்று வாருங்கள். இறை சக்தியுடன் இரண்டற கலப்பதை உணரலாம்.