இறைவன் அருள்பொழியும் அபூர்வமான இடம் கஅபா


இறைவன் அருள்பொழியும் அபூர்வமான இடம் கஅபா
x
தினத்தந்தி 28 March 2018 7:40 AM GMT (Updated: 28 March 2018 7:40 AM GMT)

“இப்ராகிமும் இஸ்மாயிலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்திய பொழுது, ‘எங்கள் இறைவனே உனக்காக நாங்கள் செய்த இப்பணியை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீதான் எங்கள் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் நன்கு அறிந்தவன்’ என்று கூறினார்கள்”. (திருக்குர்ஆன் 2:127)

“இப்ராகிம் இறைவனிடம் ‘என் இறைவனே மக்காவாகிய இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு உணவாக பலவகை கனிவர்க்கங்களையும் அளித்து வருவாயாக’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 2:126)

உலகில் எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ், ‘மனிதனை மட்டும் தன்னை வணங்குவதற்காக படைத்தேன்’ என்று சொல்கிறான்.

வணங்குவது என்றால் எப்படி வணங்குவது, எங்கிருந்து வணங்குவது? என்ற கேள்விகள் மனதில் எழுவது இயற்கை தானே. அதுவும் எந்தவித முன் உதாரணமும் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்த வினா இயல்பானது தானே.

எத்தனையோ கோள்களைப் படைத்த அல்லாஹ், மனிதன் வாழ்வதற்காக அத்தனை அனுகூலங்களும் உள்ள ‘பூமி’ என்ற கோளைப் படைத்தான்.

ஆதிபிதா ஆதம் நபி படைக்கப்பட்டு, தனது துணையுடன் இன்பமாக சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சைத்தானின் ஆளுமைக்கு கட்டுப்பட்டதால் தவறு செய்தார்கள். இறைவன் தடுத்த பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தின் எல்லைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். அப்போது அவர்கள் வாழ இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த இடம் இந்த பூமி.

பூமியில் வந்து சேர்ந்தவர்களுக்கு எப்படி பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தான் இறைவன். மனித இனம் பெருக ஆரம்பித்த உடன் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக, கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒரு வழிபாட்டு தலத்தை கட்டிக்கொடுக்க எண்ணினான்.

பாலைவனம் பகுதியில் சற்று மேடாய் அமைந்த பகுதியை சுட்டிக்காட்டி, ‘ஆதமே, மக்கள் என்னை வணங்குவதற்காக ஓர் இறை இல்லத்தை இங்கே என்னுடைய உத்தரவின்படி கட்டுங்கள்’ என்று கட்டளையிட்டான்.

உலகம் தோன்றிய உடனேயே ‘கஅபா’ என்ற இறைஇல்லம் கட்டப்பட்டது. ஆதம் நபியவர்கள் உலகில் வந்தடைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘கஅபா’ கட்டப்பட்டது. இதை வானவர்கள் மூலம் இறைவன் கட்டினான்.

காலப்போக்கில் இயற்கை மாற்றங்களால் அந்த இடம் சேதம் அடைந்து மணல் மேடாய் உருமாறியது. அந்த இடம் தான் பின்னர் ஆதம் நபிகளுக்கு அடையாளம் காட்டப்பட்டு அங்கு இறை இல்லம் தோன்றியதாகவும் வரலாறு உண்டு.

அதன்பின் சில கால இடைவெளியில் நூஹ் நபிகள் வாழ்ந்த பொழுதில் மனித இனம் ஓரிறைக்கொள்கையை முற்றிலும் மறுத்து விட்டது. இதனால், நூஹ் நபிகள் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதால், உலகம் வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகள் என்று எவையும் அற்ற வெற்றிடமாய் பூமிப்பந்து மாற்றப்பட்டது. அந்த நிலையில் கஅபாவும் சேதம் அடைந்தது. ஆனால் அதன் அடிப்படை அஸ்திவாரம் அமைந்திருந்த அடையாள எல்லைக்கோடுகள் அப்படியே நிலைத்திருந்தன.

காலங்கள் மாறின. மக்களை நேர்வழிப்படுத்த நாடிய இறைவன் நபிகளை அனுப்பினான். அந்த வரிசையில் இப்ராகிம் நபியவர்கள் தோன்றி இறைகட்டளையை நிறைவேற்றினார்கள். அவரது இறைப் பணியில் ஈர்க்கப்பட்டு மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். மிகப்பெரிய அந்த மக்கள் கூட்டத்திற்கு வழிபாட்டு தலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எண்ணிய அல்லாஹ் மீண்டும் கஅபாவை புதுப்பிக்க நாடினான்.

இப்ராகிம் நபிகளை அழைத்து, அவர்களுக்கு அந்த புராதான இடத்தை அடையாளம் காட்டி, அங்கே மீண்டும் கஅபாவை கட்ட கட்டளையிட்டான். இப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள்.

கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.

அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.

அதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்திற்கு பிறகு மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவின் புனித தன்மை முழுமையாக பாதுகாக்கப்பட்டுவிட்டது.

கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.

இன்றளவும் கஅபாவின் மேன்மையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு வருவதுபோல் உலகம் அழியும் காலம் வரை பாதுகாக்கப்படும். காரணம் இறைவன் அருள் பொழியும் அபூர்வமான இடங்களில் இதுவும் ஒன்று என்று திருக்குர்ஆன் அன்றே கூறிஉள்ளது.

(தொடரும்)

மக்காமா இப்ராகிம்

இப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித் தார்கள். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.

இப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.

Next Story