பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் தலம்


பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் தலம்
x
தினத்தந்தி 28 March 2018 1:33 PM IST (Updated: 28 March 2018 1:33 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் பல உள்ளன.

பல ஆலயங்கள், சைவ வழிபற்றிய நாயன்மார்களாலும், வைணவ வழியைப் பின்பற்றிய ஆழ்வார்களாலும் பாடப்பெற்றவை. மேலும் பல கோவில்கள் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளையும், கலை அழகுமிக்க சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் பன்பாட்டை, கலாசாரத்தை, கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.

அப்படிப்பட்ட ஆலயங்கில் ஒன்றுதான், திருச்சி அருகே உள்ள சோழமாதேவியில் இருக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்.

உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது. ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் பெயர் ‘கயிலாயமுடையார்’ என்பதாகும். இறைவனின் இன்னொரு பெயர் ‘கைலாசத்து பரமேஸ்வரர்’ ஆகும். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.

காவிரியின் தென்கரை கோவில்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயம், மன்னர்களின் ஆட்சி காலத்தில் ‘சோழமகாதேவிச் சதுர்வேதி மங்களம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை எதிரே பலி பீடமும், நந்தி மண்டபமும் இருக்க, ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வடக்கே சண்டிகேஸ்வரர், சூரியன், ஐயனார், முருகப்பெருமான் ஆகியோரின் திருமேனிகளும், தென் திசையில் சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.

அன்னை கற்பகாம்பாள் வீற்றிருக்கும் சன்னிதி சிதிலமடைந்து காணப்படுவதால், தற்போது அன்னை அர்த்த மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் இருக்க, அன்னையானவள் இன்முகத்துடன் காணப்படுகிறாள்.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் கயிலாய முடையார், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

கருவறை தேவகோட்டங்களில் முதலில் காணப் படுவது பிட்சாடனர். இது ஈசனின் யாசகம் கேட்கும் திருக்கோலமாகும். கபாலம் ஏந்தி புன்னகை தவழ காட்சித்தருகிறார் இந்த இறைவன். இவருக்கு எதிர் திசையில் ரிஷி பத்தினி ஒருத்தி கரண்டியை ஏந்தி அன்னம் பாலிக்க நிற்பதுபோல் காட்சி உள்ளது. அவளது காலடியின் கீழ் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான், தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கர்வத்தை அடக்கும் புராண நிகழ்ச்சியைக் கூறும் சிற்பமாக இது அமைந்துள்ளது.

அடுத்து மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை, பிரம்மா ஆகியோர் திரு உருவங்கள் நாம் தரிசிக்க காட்சி தருகின்றன. ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரம். இது வடக்கு பிரகாரத்தில் உள்ளது.

1000-ம் ஆண்டு களுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், கி.பி.985-1014 -ல் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன.

கோவில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ என அழைக்கப்பட்டனர். சிவன் கோவிலிலும், பெருமாள் கோவிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

பஞ்ச மகா சப்தம் என்பது ஐந்து வகையான இசையைக் குறிக்கின்றன. தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் இசையை வெளிப் படுத்தி, அந்த இசைகளை ஒன்று சேர செய்வதற்கு பஞ்ச மகா சப்தம்’ என்று பெயர்.

கரடிகை ஒன்றும், மத்தளம் இரண்டும், சங்கு இரண்டும், காளம் நான்கும் ஆக மொத்தம் ஒன்பது இசைக் கருவிகள், நாள்தோறும் இந்த ஆலயத்தில் வாசிக்கப்பட்டதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, அந்த காலத்தில் இந்தக் கோவிலில் எவ்வளவு சிறப்பாக வழிபாடு நடந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடிகிறது.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாத தனுர் பூஜை இங்கு 30 நாட்களும் நடைபெறுகிறது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்: திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் உள்ளது இந்த கயிலாயமுடையார் ஆலயம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் சென்று அங்கிருந்து சூரியூர் அல்லது துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் நகர பேருந்தில் பயணித்து சோழமாதேவி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

Next Story