ஆன்மிகம்

நம்பிக்கை தரும் நல்வாழ்க்கை + "||" + Hope give is Good life

நம்பிக்கை தரும் நல்வாழ்க்கை

நம்பிக்கை தரும் நல்வாழ்க்கை
மனித வாழ்க்கை பல அடிப்படைகளின் கீழ் அமைந்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது நம்பிக்கை.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்புவது தானே வாழ்க்கை. அந்த நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கைப்பயணம் அமைதியாக இருக்காது.

இதைத்தான் இஸ்லாம் ‘அமானிதம் காக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. ‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு அமானிதம், நம்பிக்கை, உண்மைத்தன்மை என பொருள்கள் பல உண்டு. இன்றைக்கு மனித சமூகம் வளர்ச்சியடைவதும், வீழ்ச்சியடைவதும் இந்த ஒற்றைப் பண்புக்குள் தான் அமைகிறது.

மனித வாழ்க்கை ஊக்கம் பெறுவதற்கு இந்த அமானித நம்பிக்கை தான் மிக உந்து சக்தியாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறது.

நாம் நினைப்பது போல் அமானிதம் என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. அது அதீத கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒரு பண்பு. இதனால் தான் குர்ஆன் இதுகுறித்து இவ்வளவு தூரம் எச்சரிக்கிறது.

ஒருமுறை நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘மறுமைநாள் நெருங்குகிறபோது மக்களிடமிருந்து அமானிதத் தன்மை குறைய ஆரம்பித்துவிடும்’.

அதனால் தான் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ‘அமானிதத்தை நிறைவேற்றுங்கள்’, ‘மோசடி செய்யாதீர்கள்’, ‘கொடுத்தவாக்கைக் காப்பாற்றுங்கள்’, ‘உண்மையே உரையுங்கள்’, ‘ஒப்பந்தங்களை பூர்த்திசெய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

இதை பின் வரும் இறைவசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:

‘உங்களில் ஒருவர் ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அமானிதத்தை (சரியாக) நிறைவேற்றி விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அமானிதத்தில் எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிவான்’. (திருக்குர்ஆன் 2:283)

நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அல்லது அறிமுகம் இல்லாத ஒருவர் நம்மிடம் ஒரு பொருளை கொடுத்து வைக்கிறார். பிறகு அவர் அதை எப்போது நம்மிடம் கேட்கிறாரோ அப்போது அதை நாம் அவரிடம் அவர் கொடுத்தபடியே கொடுத்து விட வேண்டும். அதற்குத்தான் அமானிதம் என்று பெயர். அதில் எந்தவொரு சிறுமாற்றத்திற்கும் வழிவகை என்று எதுவுமேயில்லை.

நபிகளார் அமானிதப்பொருட்கள் வி‌ஷயத்தில் உண்மையுடனும், நேர்மையுடனும் நடந்துகொண்டார்கள். புனித மக்காவிலிருந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ சென்றபோது தம்மிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களின் அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் வரவேண்டும் என்று அலி (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் கட்டளையிட்டார்கள். உயிருக்கு ஆபத்தான அந்த இக்கட்டான நேரத்திலும் தன்னிடம் உள்ள அமானிதங்களை மறக்காமல், அதற்கென்று ஒருவரை பொறுப்புடன் நியமித்து விட்டுத்தான் புறப்பட்டுச் சென்றார்கள் என்றால் அமானிதம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.

அமானிதத்தின் முக்கியம் குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்’. (8:27)

‘இன்னும் எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி நடந்து கொள்கின்றார்களோ அவர்களும், (தான் சுவனவாசிகள்)’. (70:32)

‘(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும் படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்ச மின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்’. (4:58)

இந்த இறைவசனங்கள் மூலம் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கை தரும் வகையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறியலாம்.

இன்றைக்கு மோசமான குணங்களின் பெருக்கத்தால் பண மோசடிகள், ஏமாற்றுகள், தகவல் திருட்டுகள் என பலவும் பெருகிப் போய்விட்டன. பணத்தால் எதையும் நாம் சாதித்து விடமுடியாது. நம்மிடமுள்ள நற்குணங்களால் தான் எதையுமே என்றைக்கும் சாதிக்க முடியும் என்பதை மட்டுமாவது நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

காரிருள் சூழ்ந்த ஓரிடத்தில் ஒரு சிறு விளக்கின் ஒளித்துளி ஒன்று ஒளிரத் தொடங்கியதும் தான் இருக்கும் இடம் தெரியாமல் இருள் விலகி ஓடிவிடுவது போல நம்மிடம் அந்த அமானிதம் மிளிரும் காலமெல்லாம் மோசடிகள் யாவும் நிச்சயம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மவுலவி எஸ்.என்.ஆர்.‌ஷவ்கத்  அலி மஸ்லஹி, ஈரோடு–3.