ஆன்மிகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்த ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் + "||" + Erode, a large mariamman temple pavilion that flows thousands of devotees

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்த ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்த ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தின் போது ஒருவர் மீது ஒருவர் மஞ்சள்நீர் ஊற்றி உற்சாக கொண்டாடினார்கள்.
ஈரோடு,

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் நடந்தது. அப்போது ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகமாக விழாவை கொண்டாடினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில். கொங்கு மண்டலத்தின் குல தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோவில் ஈரோடு பிரப் ரோட்டில் அமைந்து உள்ளது. பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் (நடுமாரியம்மன்), காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும்.


அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ந் தேதி 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். குறிப்பாக பிரப் ரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இரவு, பகலாக பல்லாயிரக்கணக்கானவர்கள் வரிசையில் காத்து நின்று கம்பத்துக்கு தண்ணீர், மஞ்சள் நீர், பால் ஊற்றி வழிபட்டனர்.

பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்யப்படும்.

மேலும், பக்தர்கள், தனியார் நிறுவனத்தினர் நீர்மோர் பந்தல் வைத்தும், உணவு பந்தல்கள் அமைத்தும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர், கூழ் ஆகியவை வழங்கி வந்தனர். 29-ந் தேதி கோவில் கொடியேற்று விழா நடந்தது.

கோவிலின் குண்டம் விழா கடந்த 3-ந் தேதி நடந்தது. இதற்காக காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் வளாகத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். 4-ந் தேதி தேர்த்திருவிழா நடந்தது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. 5-ந் தேதி பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா நடந்தது. இந்த விழாக்கள் நடந்தபோதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றினார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

முக்கிய விழாவான கம்பம் பிடுங்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி வழக் கத்தை விட அதிகமாக பெண்கள் வந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றினார்கள். பிற்பகல் 2 மணி அளவில் 3 கோவில்களிலும் கம்பம் பிடுங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. 2.30 மணி அளவில் கம்பங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த வேப்பிலைகள் அகற்றப்பட்டது. கம்பத்தில் வைக்கப்பட்டு இருந்த அக்னி சட்டி எடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் தலையில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி அளவில் கம்பங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள். 3 கோவில்களிலும் அடுத்தடுத்து கம்பங்கள் பிடுங்கப்பட்டன. அவற்றை பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை, மேளங்களுடன் கம்பம் புறப்பட்டது. பன்னீர்செல்வம் பூங்கா வழியாக கம்பம் கொண்டு வரப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதுபோல் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில், நடுமாரியம்மன் கோவில்களில் இருந்து கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. 3 கம்பங்களும் மணிக்கூண்டு வந்தடைந்தன. பின்னர் 3 கம்பங்களுடன் ஊர்வலம் தொடங்கியது.

ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக வந்த ஊர்வலம் ஈஸ்வரன்கோவில், காமராஜ் வீதி, பிரப் ரோடு வழியாக எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தது. அங்கு கம்பங்களை தோளில் வைத்துக்கொண்டு இருந்த பூசாரிகள் சாமி அருள் வந்ததுபோன்று சுற்றி சுற்றி ஆடினார்கள். அங்கிருந்து மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, கச்சேரி வீதி, நேதாஜி ரோடு, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.

கம்பம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்தின் பின்னால் நடந்து வந்தார்கள். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கம்பம் வரும் வழிப்பாதைகளில் பக்தர்கள் குவியத்தொடங்கினார்கள். 3 மணிக்கு மணிக்கூண்டு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் வரையும், அங்கிருந்து கம்பம் சென்ற வழிப்பாதைகள் எங்கும் தண்ணீர் ஊற்றி அந்தந்த பகுதியினர் சாலையை தூய்மை செய்து வரவேற்றனர்.

கம்பத்தை சுமந்து கொண்டு பூசாரிகள் முன்னே செல்ல சாலையின் 2 பக்கங்களும் ஏராளமான பக்தர்கள் கூடி வரவேற்றனர். ஈரோடு ரவுண்டானா பகுதியில் ஊர்வலம் வந்தபோது மேட்டூர் ரோடு, பிரப் ரோடு பகுதியில் இருந்து வந்து கூடிய மக்களால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே இருந்தது.

ஈரோடு பகுதி முழுவதும் மஞ்சள் நீர் விழா கொண்டாடப்பட்டது. சத்திரோடு, நாச்சியப்பாவீதி, கோட்டை நேருவீதி, கோட்டை பகுதியை சுற்றியுள்ள அனைத்து வீதிகள், அகில்மேடு வீதி, தில்லை நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, டி.வி.எஸ்.வீதி, பிருந்தா வீதி, வெங்கடாசலம் வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன்கோவில் வீதி, கடைவீதி, ஆர்.கே.வி. ரோடு, பெரியார் வீதி, காரைவாய்க்கால், கச்சேரி வீதி, மேட்டூர் ரோடு, பெரியார் நகர், சேட் காலனி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மஞ்சள் நீர் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமின்றி மஞ்சள் நீரை ஒருவருக்கொருவர் ஊற்றினார்கள். மஞ்சள் பொடியை நண்பர்கள், உறவினர்கள் தலை, முகம் உடலில் பூசியும், குங்கும பொட்டுகள் வைத்தும் மகிழ்ந்தனர். வீட்டு பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றவர்களுக்கு மஞ்சள் நீர் ஊற்றி விளையாடியதை செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தார்கள்.

இதுபோல் இளம்பெண்கள் முகம் முழுவதும் மஞ்சள் பூசிக்கொண்டு தோழிகள், அக்கம் பக்கத்தினர், பெற்றோர் மற்றும் சகோதர -சகோதரிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வீதிகளில் சென்ற பலரும் விழாவில் பங்கு கொள்ளும் மகிழ்ச்சியில் மஞ்சள் நீர் ஊற்றிக்கொண்டனர். கொண்டாடினார்கள். இளைஞர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் 3 பேர்வரை உட்கார்ந்து கொண்டு அனைத்து வீதிகளிலும் சுற்றி சுற்றி வந்தனர். மகிழ்ச்சியாக அவர்கள் வலம் வந்தாலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இதுபோல் சிலர் உடல் முழுவதும் கருப்பு வண்ண சாயத்தை பூசிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சிலர் கைகளில் கத்தி ஏந்தியும், வாயில் எலுமிச்சை பழத்தை கவ்விக்கொண்டும் வேடம் அணிந்து ஆடிக்கொண்டே வந்தனர்.

சிலர் சிவன்-பார்வதி, நரசிம்மர், நாரதர், முருகன், விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்கள் வேடமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கம்பம் ஊர்வலத்தில் சிறப்பு அம்சமாக கருதப்படுவது கம்பத்துக்கு உப்பு நல்லமிளகு வீசுவதாகும். பெரிய மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக வீதிகளில் காத்திருந்து கம்பங்களில் உப்பு, நல்லமிளகு வீசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இவ்வாறு உப்பு வீசினார்கள். இதனால் ஊர்வலம் முடிந்த பின்பு சாலைகளை பார்த்தால் தார் ரோடு வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது.

நேற்று கடுமையான வெயிலாக இருந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவையும் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.ராதாகிருஷ்ணன், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரவிக்குமார், கண்ணன், சேகர், ராஜகுமார், முருகையன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், சாலைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.