ஆன்மிகம்

நாகதோஷம் நீக்கும் சோழீஸ்வரர் + "||" + Naga Dhamsham removal choleswarar

நாகதோஷம் நீக்கும் சோழீஸ்வரர்

நாகதோஷம் நீக்கும் சோழீஸ்வரர்
இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் தங்கை கோமளவள்ளி. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய மன்னன், அவளது ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டிக் கணிக்கச் சொன்னான்.
ஜோதிடர் சொன்னச் செய்தி, மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு உரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறினார்.

மன்னன்.. தாம் வணங்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.


அப்போது ‘ஓர் ஆலயம் கட்டு. உன் தங்கையின் தோஷம் விலகும்’ என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயம் கட்டி முடித்தான்.

இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.

அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.

கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.

தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.

பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர். ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.

ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு கஜலட்சுமிக்கு ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் வளையல் அலங்காரம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.