முக்தியை அருளும் மூலசேத்திரம் : 2.பார்வதியை ஈசன் மணம் புரிந்த தலம்


முக்தியை அருளும் மூலசேத்திரம் : 2.பார்வதியை ஈசன் மணம் புரிந்த தலம்
x
தினத்தந்தி 11 April 2018 5:32 AM GMT (Updated: 11 April 2018 5:32 AM GMT)

அகரம் ஆதிமூலேசுவரர் ஆலய புராணம் பற்றி இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

சிவ புண்ணியம் பெறவேண்டி கயிலை நோக்கி புறப்பட்ட பிரசன்மன் என்பவனுக்கு இத்தலத்திலேயே கயிலைக் காட்சி அருளியது, இரவுக்காவலில் ஈடுபட்டிருந்த மாறன் என்பவன் நள்ளிரவில் தன்னை காணவந்த தந்தையை திருடன் என்று கருதி அடித்துக் கொன்ற பாவத்தை போக்கியது, காஷ்மீர தேசத்து மன்னன் கமனீயனின் நோயை நீக்கியது என ஆதிமூலேசுவரர் செய்த அற்புதங்கள் பலப்பல.

மருமகனான சிவபெருமானை அழைக் காமல் யாகம் நடத்தியதால், தட்சன் வேள்வி பங்க தோஷத்திற்கு ஆளானான். அந்த தோஷத்தில் இருந்து மீள்வதற்காக, இத் தலத்தின் மேற்கே இருந்த வனம் ஒன்றில் யாகம் தொடங்கி ஆதிமூலேசுவரரை வழிபட்டான். தட்சன் யாகம் மேற்கொண்ட தட்ச வனம் மருவி தச்சக்காடு என்ற ஊராக இவ்வாலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் தட்சனின் மகளாகப் பிறந்த குற்றம் நீங்க பார்வதிதேவி, விகுண்டி முனிவரின் தவத்தில் உதித்தான். ஆயினும் உமையின் குற்றம் நீங்கவில்லை. இதனால் வாருணஸ்தலத்தில பொற்சீந்தல் கொடியாகி, மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் முளைவிட்டு அமுதசரசில் உண்டாகிய அமுதத்தால் வளர்ந்து வந்தாள். இதை நாரதர் மூலம் அறிந்துகொண்ட மதங்கன் என்ற அசுரன், பொற்சீந்தல் கொடியை கவர வந்தபோது, விஷ்ணுவால் அழிக்கப்பட்டான். அவன் சிரம் விழுந்த இடம் மதங்கவனம் என்று பெயர் பெற்றது. மதங்கம் என்பதற்கு யானை என்றும் பொருள் உண்டு. இந்த மதங்கவனம் ஆலயத்தின் மேற்குதிசையில் ஆனையாங்குப்பம் என்ற ஊராக அமைந்துள்ளது.

உமையவள் பொற்சீந்தல் கொடியாக வளர்ந்து வந்த வேளையில், சிவபெருமான் நந்திதேவரை அழைத்து ‘வருணாபுரியில் எனக்கும், உமையவளுக்கும் விவாகம் நடந்தேற தேவையான ஏற்பாடுகளை செய்க’ என்றார்.

அதன்படி நந்திதேவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சிவன் பொற்சீந்தல் கொடி அருகில் நிற்க, அம்பாளும் பெண்ணுருவம் கொண்டாள். திருமண வைபவம் நடந்தேறிய 4-வது நாள் மக தீர்த்தத்தில் நீராடியதுடன், அந்த சமயம் அங்கு தீர்த்தமாடிய அனை வருக்கும் நன்மை செய்து பெரியகோவிலின் சிவலிங்கத்துள் ஈசன் புகுந்தார். அம்பாள் சுவாமிக்கு இடதுபுறத்தில் அமர்ந்தாள். பிரிசித்திப்பெற்ற இந்த திருமண விழாவும், இதனைத்தொடர்ந்து மக நீராட்டலும் இவ்வாலயத்தின் ஆண்டு உற்சவமாக இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால், தன்னுடைய வீணையை பறிகொடுத்தார் நாரதர். இதை யடுத்து தந்தை பிரம்மதேவரின் கட்டளைப்படி பூமிக்கு வந்து திருவதிகை மார்க்கமாக செல்லும்போது, ஓரிடத்தில் கீழே இழுக்கப்பட்டார். அப்படி அவர் இழுக்கப்பட்ட இடம் ஆதிமூலேசுவரர் அருள் செய்யும் இடமாகும். அந்த ஆலயத்தில் உள்ள சிவனை வணங்கி, ஆலயத்தின் தென்புறம் இருந்த கொன்றை மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். இதையடுத்து அவர் முன் தோன்றிய ஈசன், நாரதருக்கு அவர் இழந்த வீணையைக் கொடுத்து அருள்புரிந்தார். நாரதர் தியானம் செய்து வீணைபெற்ற கொன்றை மரம் விழுந்துவிட்டபடியால், அதே இடத்தில் வேறொரு கொன்றை மரத்தை வளர்த்துள்ளனர்.

அகத்தியரின் வருகை

ஒருசமயம் கயிலையில் அகத்தியர் சகுனத் தியானம் செய்ய முற்பட்டார். அதைப்பார்த்த ஈசன், ‘அதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. நீ வருணாபுரிக்கு வடமேற்கே உள்ள கோதிட்டை சித்தாசிரமம் செல்’ என்றார்.

ஈசன் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த அகத்தியர், தன்னுடைய கையில் வைத்திருந்த மூலிகை நீர் நிறைந்த கமண்டலத்தை கீழே வைத்தார். மறுநொடி அந்த கமண்டலம் நாகலோகம் சென்றுவிட, கமண்டலம் வைத்த இடம் ஒரு தீர்த்தமாயிற்று. அந்தத் தீர்த்தத்தில் தேவர்களுடன் நீராடி, அங்கு மலையுருவாக இருந்த சிவபெருமானை நினைத்து சகுனத் தியானம் செய்து அருள்பெற்றார். அகத்தியர் தியானம் செய்த இடமே கோதிட்டையாகும். அந்த இடம் தற்போது ‘கொத்தட்டை’ என்று அழைக்கப்படுகிறது.

பின்னர் வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரையும் வழிபாடு செய்தார். அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் கோவிலின் மேற்கு பிரகாரத்திலுள்ள விசுவநாதர் ஆகும். (சக்திமிகுந்த இந்த லிங்கத்தை தரிசிக்க வந்த மறைந்த காஞ்சி பெரியவர் ஏழு நாட்கள் வரை, லிங்கத்தின் அருகிலேயே அமர்ந்து தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

பின்னர் பொதிகை மலைக்குச் சென்ற அகத்தியர், தன் சீடர்களுக்கு தான் அடைந்த தரிசன பாக்கியத்தைக் கூறினார். அதைக் கேட்டு அகத்தியரின் சீடர்கள் பன்னிருவர், வருணாபுரி வந்து ஆதிமூலேஸ்வரரை தரிசித்து, ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். அந்த லிங்கமே ஆலயத்தின் தென்மேற்கில் உள்ள ராமலிங்கர் ஆகும்.

சூரியன் ஸ்தாபித்த லிங்கம்

ஒரு முறை சூரியன் உதயமாகும் வேளையில், இலங்கை மாண்டேகத் தீவில் இருந்து ஆயிரம் அசுரர்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க முற்பட்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான சூரியன், தன்னுடைய மகன் சாவன்னியை அழைத்து, ‘வாருணஸ்தலம் சென்று அங்குள்ள ஈசனை வழிபடு’ என்றார்.

சாவன்னி பூஜை பொருட்கள் மற்றும் திரவியங்களுடன், வாருணஸ்தலம் வந்து ‘அமுதசரசு’ என்னும் தீர்த்தத்தை (ஆலயகிணறு) உருவாக்கி சுவாமியை அபிஷேகித்து வழிபட்டான். அந்த வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், சூரியனை தடுத்த அசுரர்களை மறைந்து போகச் செய்தார். இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் ஏழு நாளும், சூரியன் இவ்வாலய இறைவனையும், இறைவியையும் பூஜித்து வருகிறான்.

சூரியன் தன்னுடைய உடல் உஷ்ணத்தை குறைக்க, சாணக்கல்லின் மீது உடலை வைத்து தேய்த்தான். இதனால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட, ஆதிமூலேஸ்வரம் வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இதையடுத்து அவனது தோஷம் விலகியது. ஆதித்தன் பிரதிஷ்டை செய்த அந்த லிங்கம் ‘ஆதித்தேசுவரம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் செட்டிசமூகத்தினர், அந்த லிங்கத்தை எடுத்து வேறொரு இடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் செட்டிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ளது.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்

சக்கர தீர்த்தம்

ஒருசமயம் திரிகூடமலையிலிருந்து கஜேந்திரன் என்னும் ஆண் யானை, ஆயிரம் பெண் யானைகள், இரண்டாயிரம் குட்டிகளுடன் வந்து வெள்ளாற்றின் மடுவங்கரையில் நீராடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை கஜேந்திரன் யானையின் காலைப் பற்றி, நீருக்குள் இழுத்தது. அதனால் பயந்த கஜேந்திரன் ‘ஆதிமூலமே அபயம்தா!’ என்று குரல்கொடுத்தது.

இக்குரல் சிவனுக்கு கேட்ட அதேசமயம், விஷ்ணுவின் காதுகளிலும் விழுந்தது. முன் ஜென்மத்தில் தன் பக்தனாய் இருந்த யானையின் துயர்நீக்க விஷ்ணு சக்கராயுதத்தை ஏவினார். அது வேகமாக முதலையின் வாயைக் கிழித்து கஜேந்திர யானையைக் காப்பாற்றியது. பின்னர் கீழுலகம் என்னும் பாதாளத்திற்குள் புகுந்து நின்றது.

பாதாளத்திற்குள் சென்று புகுந்துகொண்ட தன்னுடைய சக்கரத்தை மீட்க முடியாமல், ஆதிமூலேஸ்வரரை வேண்டினார், விஷ்ணு பகவான். இதையடுத்து தான் உருவாக்கிய சூல தீர்த்தத்தில் வந்து சக்கரத்தை எடுத்துக் கொள்ளுமாறு சிவபெருமான் அருள்புரிந்தார். இதனால் சூல தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என்ற பெயரையும் பெற்றது. கமனீயன் என்ற காஷ்மீர தேசத்து மன்னனின் சூலநோயை தீர்த்த இறைவன், அவனுக்கு காட்சி அளித்த இடம் சூல தீர்த்தம். இது ஆலய ராஜகோபுரத்திற்கு முன்பாக உள்ள பிருகு மகரிஷி வாழ்ந்த மண்டபத்தை ஒட்டி இருக்கிறது. ஆதிமூலேஸ்வரரை தரிசித்து தன் சக்கரத்தைப் பெற்ற விஷ்ணுவின் ஆலயம், பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையிலுள்ள பெருமாள் கோவில் ஆகும். கஜேந்திரன் நீராடிய வெள்ளாற்று மடு, பு.மடு வங்கரை என்ற பெயரில் ஊராக அமைந்துள்ளது.

(தொடரும்)

Next Story