1. சிலுவை மொழிகள்


1. சிலுவை மொழிகள்
x
தினத்தந்தி 11 April 2018 5:50 AM GMT (Updated: 11 April 2018 5:50 AM GMT)

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக்கா 23:34)

இயேசு சிலுவையில் பேசிய முதல் வாக்கியம் இது தான்.

இயேசு கைகளிலும், கால்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கியபோது, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு ஏழு வாக்கியங்களைப் பேசினார்.

அவை கிறிஸ்தவ ஆன்மிக வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் விஷயங்களாக அமைந்துள்ளன.

‘சிலுவை’, மீட்பின் சின்னம். இன்றைக்கு அது காதுகளிலும், கழுத்திலும், விரல் களிலும், ஒரு அலங்காரச் சின்னமாக இடம்பெற்று விட்டது.

சிலுவை அலங்காரப் பொருளா?

கல்வாரியில் இயேசுவின் குருதியும், வலி நிறைந்த வார்த்தைகளும், உயிர் உறைந்த அவமானங்களும் இறுகப்பற்றியிருக்கும் சின்னம்.

ஒழுங்கற்ற மரத்துண்டுகளால் இணைந்த சிலுவை தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக மாறியது.

‘சிலுவை’ என்பது அழகியலின் அடையாளம் அல்ல. இயேசு எனும் மீட்பரின் உயிர் உறிஞ்சிய கொலைக்கருவி. நிராகரிப்புகளின் வலி நிரம்பிய கொலைக்கருவி. அது இயேசுவைத் தாங்கியதால் மீட்பின் கருவியாக மாறிப்போனது.

‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்பார்கள். ஏதேன் தோட்டத்தில் மரத்தின் கனியினால் விளைந்த பாவத்தை, கல்வாரியில் மரத்தின் சிலுவையால் நீங்கியது.

குற்றுயிராய் நைந்து தொங்கிய உடல், சிலுவையில் ஓர் அழுக்கான படத்தைப் போல ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டது. அந்த வேதனையின் பெருங்கடலிலும் இயேசு தந்தையிடம் வேண்டுதல் செய்தார்.

“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”.

தனக்காக வேண்டுதல் செய்யவே பிரியமில்லாத மனிதர்களின் மத்தியில், பிறருக்காக வேண்டுதல் செய்கிறார் இயேசு. அதுவும் மரணத்தின் வாசலில் கால் வைக்கும் போதும் அவர் வேண்டுகிறார்.

பாவத்தை யார் தான் தெரியாமல் செய்தது? இயேசுவை சாட்டையால் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?, சிலுவையைத் தோளில் தூக்கிப் போட்டவனுக்குத் தெரியவில்லையா?, கூர் ஆணிகளால் வெள்ளைப் புறாவின் இறகுகளை இறுக்கமாய் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?

எல்லோருக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், ‘மீட்பரைச் சிலுவையில் அறைகிறோம்’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

வாழ்நாள் முழுவதும் மன்னிப்பைச் செயலிலும், போதனைகளிலும் காட்டி வந்த இயேசு, தனது முடிவுரையில் மீண்டும் ஒரு முறை அதை எழுதி வைக்கிறார்.

“தந்தையே இவர்களை மன்னியும்” என யாரைக் குறிப்பிட்டார் இயேசு.

இயேசுவை குற்றம் சாட்டியவர்களை, சாட்டையால் அடித்தவர்களை, ‘சிலுவையில் அறையும்’ என கத்தியவர்களை, ‘பரபாஸ் போதும்’ என சமரசம் செய்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை, அவருக்கு ஆதரவாய் நிற்காத மனிதர்களை... எல்லோரையும் இயேசு மன்னித்தார். அவ்வளவு தானா?

“நமது பாவங்கள் தான் அவரைச் சிலுவையில் அறைந்தது” என்கிறது பைபிள்.

அப்படியானால் அவரைச் சிலுவையில் அறைந்தது யார்? நமது பாவங்கள்தான்.

நம்மிடம் பாவம் இல்லை என்றால் நாம் பொய்யர்கள். எனில், சிலுவையில் உச்சியில் இயேசு யாருடைய பாவங்களை மன்னித்தார்?

நமது பாவங்களை, இயேசுவை, சிலுவையில் அறைந்ததில் நமது பங்கும் உண்டு.

நாம் தெரிந்தே செய்கின்ற பாவத்தைக் கூட இயேசு, “தெரியாமல் செய்கிறார்கள்” என கரிசனையோடு கூறுகிறார். நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

மூன்று வயது மழலை மகள் தவறு செய்து விட்டு ஓடி வரும் போது, “சின்னப்பிள்ள தெரியாம செஞ்சுடுச்சு” என தழுவிக்கொள்ளும் ஒரு தந்தையின் பிரமிப்புப் பாசத்தை அல்லவா இயேசு சிலுவையில் காட்டினார்?

“இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் சந்ததி மேலும் வரட்டும்” என திமிராய்ப் பேசிய மக்களை இயேசு சிறிதும் வெறுக்கவில்லை.

“தெரியாமல் செய்கிறார்கள், மன்னியுங்கள் தந்தையே” என வலியின் உச்சத்திலும் கதறி வேண்டுகிறார்.

“பாவத்தின் சம்பளம் மரணம், இதோ அந்த மரணத்தை நான் சிலுவையின் வழியாக நிறைவேற்றி விட்டேன். தந்தையே இவர்களை மன்னியும்” என இயேசு மக்களுக்காய் வேண்டுகிறார்.

பழிக்குப்பழி வாங்கும் எண்ணமோ, முள்ளை முள்ளால் எடுக்கும் குணமோ எனக்கு இல்லை. “பிதாவே என்னிடம் வெறுப்பு இல்லை, இவர்களை மன்னியும்” என எதிரி களுக்காய் மன்றாடுகிறார்.

அந்த வார்த்தை கூடியிருந்த சேவகர்களை ஊடுருவக் குத்தியிருக்க வேண்டும். அங்கிருந்த படைவீரர்களில் சிலர் புனிதர்களாக மாறினார்கள் என்கிறது வரலாறு.

இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.

எப்படி செபிக்க வேண்டும் எனும் போதனையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி வாழவேண்டும் என‌ வாழ்க்கையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி இறக்க வேண்டும் என்பதிலும் மன்னிப்பை முன்னிறுத்துகிறார்.

கேட்காமலேயே மன்னிக்கும் மனம் கொண்ட இறைவனிடம், மன்னிப்பைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தயாராவோமா?

- சேவியர்


(தொடரும்)

Next Story