ஆன்மிகம்

நன்மைகள் வழங்கும் சென்ன மல்லீஸ்வரர் + "||" + Senna Malleswarar gives benefits

நன்மைகள் வழங்கும் சென்ன மல்லீஸ்வரர்

நன்மைகள் வழங்கும் சென்ன மல்லீஸ்வரர்
சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
 சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

தல வரலாறு

அந்த காலத்தில் மதுரேசர் என்பவருடைய வாழைத் தோட்டமாக இருந்த பகுதியே, இன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலகமாகவும், கோட்டை என்ற பெயரிலும் விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனியர் தங்கள் வியாபாரத்தை வளர்க்க நினைத்து மதுரேசருடைய வாழைத் தோட்டத்தை விலை கொடுத்து வாங்கினர். 1758-ம் ஆண்டில் கோட்டையை வலிமை மிக்கதாகக் கட்டி முடித்தனர். ராணுவத்தைப் பெருக்க விரிவான நிலம் தேவைப்பட்டதால், தற்போதுள்ள உயர்நீதி மன்றத்தின் தென்புறத்தில் இருந்த சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் ஆகிய இரு இரட்டைக் கோவிலை அகற்றினர்.


1762-ம் ஆண்டு கோவிலை கட்டித் தருவதாக ஆங்கிலேயர்கள் உறுதியளித்தனர். ஆனால் அதை மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்பவர் மறுத்ததோடு, தனது சொந்த செலவிலேயே இரண்டு ஆலயங்களையும் வைணவ மற்றும் சைவ ஒற்றுமையை பறை சாற்றும் வண்ணம் தற்போது உள்ள இடத்தில் கட்டி முடித்தார். தற்காலம் வரை இந்தக் கோவில் அவருடைய சந்ததியினரது மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. இத்திருக்கோவில் நுழைவு வாசலில் அழகான மண்டபம் உள்ளது.

வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார். தன்னை வணங்குபவருக்கு மனத்தூய்மையும், மங்களத்தையும் தருவதோடு விக்கினங்கள் வராமலும் தடுக்கிறார். இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். அடுத்ததாக இறைவனாய் காட்சி தருகிறார்.

மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள். பேரெழில் பொருந்திய அன்னையின் திருக்கோலம் காண்போர் உள்ளத்தை கவரும் விதமாக உள்ளது.

வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர். இவர் அருகில் சிவனார் லிங்க வடிவில் அருள்புரிகிறார். இவர் முருகப் பெருமான் மேல் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் வகுப்பு, திருவகுப்பு போன்ற நூல் களைப் பாடி நமக்குத் தந் தருளியுள்ளார்.

வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில் ஆறுமுகப் பெருமான் அருள்மிகு சண்முகராய் தெற்கு நோக்கிய படி அருள் புரி கிறார். இவருக்கு அருகில் பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.

உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது. இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

கருவறை வாசலின் தென்புறத்தில் கிழக்கு நோக்கியபடி சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்தியும், வடபுறத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. துவார பாலகர்களை கடந்து செல்கையில் உள்ளே ஜோதிர்லிங்கம், சத்யோஜாத ஆகாசலிங்கம், சதாசிவம் என ஆகமங்களால் கூறப்படும் சென்ன மல்லீஸ்வரர் அனைவருக்கும் தலைவராய், முதல்வராய், திருக்காட்சி தருகிறார்.

சென்ன மல்லீஸ்வரர் அதிகாரநந்தி சேவை கண்கொள்ளா காட்சியாக பக்தர்கள் மனதில் பதிந்து எப்போதும் அந்த நினைவினிலேயே லயிக்கச் செய்கிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் பெண்கள், நந்தியம்பெருமான் மற்றும் மூலவரை வணங்கி வந்தால் அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்புகின்றனர். தொடர்ந்து பிரதோஷ வழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படுவதாகக் கருது கின்றனர்.

இக்கோவிலில் உஷக்காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடியில் பவித்ர உற்சவம், ஆவணி மூலம் சிறப்பு அபிஷேகம், ஐப்பசி மாதத்தில் வரும் பூரத்தில் திருக்கல்யாண உற்சவம், அன்னாபிஷேகம், மாசியில் மகாசிவராத்திரி, பங்குனியில் பங்குனி உத் திரம், பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஆனி மாதத்தில், மாணிக்கவாசகர் உற்சவம் (10 நாட்கள்), ஆதி சங்கரர் உற்சவம் (10 நாட்கள்) மற்றும் ஆனி திருமஞ்சனம் உற்சவம் நல்ல முறையில் நடைபெறுகிறது.

ஆடி மாத சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உற்சவம், கிருத்திகையில் சுப்ரமணியர் உற்சவம், பூரத்தில் அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஆவணி மாதம் நடராஜர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம் (10 நாட்கள்), கந்தசஷ்டி உற்சவம், சூரசம்ஹாரம், கார்த்திகை சோமவாரம், திருக் கார்த்திகை தீபம், மார்கழி திருவெம்பாவை உற்சவம், ஆருத்ரா தரிசனம், அரைக்கட்டு உற் சவம், ரதசப்தமி, மாசி மகம், திருஞானசம்பந்தர் உற்சவம், வைகாசி விசாகம், அறுபத்துமூவர் திருநட்சத்திரங்கள் விமரிசையாக நடைபெறுகிறது. விஜயதசமியன்று அம்பாள் திருவீதி புறப்பாடு நடத்தப்படுகிறது. தைக் கிருத்திகையில் சுப்ரமணியர் அபிஷேகம் நடக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

- மு.வெ.சம்பத்