ஆன்மிகம்

குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன் + "||" + Korttumalai Ganesan to solve the problems

குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்

குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்
கோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம்.
தங்க விமானம், தங்க காசு மாலை பெற்ற முதல் கோவில், 32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.

தலவரலாறு

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில், கி.பி.1889-ம் ஆண்டு வாழ்ந்தவர், வாக்னர்துரை என்ற வெள்ளைக்காரர். காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி, பிரபல வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர் இவர். இவருக்கு இப்பகுதியில் மிகப்பெரிய பங்களாவும், கோர்ட்டு அலுவலகமும், மிகப்பெரிய தோட்டமும் இருந்தன.


அந்த பங்களாவில் தோட்ட வேலைபார்த்து வந்த தொழிலாளி ஒரு தமிழர். இயல்பாகவே தெய்வபக்திகொண்ட அவர் தன்னிடம் இருந்த சிறிதளவு தொகையைக்கொண்டு கணேசன் வடிவத்தை உண்டாக்கி, அதனை பங்களாவின் பின்புறம் வைத்து வழிபட்டு வந்தார்.

நாளடைவில் கணேசரின் புகழ் வெளியே தெரிய ஆரம்பித்து, கணேசரை வழிபடுவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. இதனால் சிறிய சன்னிதி அமைத்து, காலை, மாலை என வழிபாடுகள் நடக்கத் தொடங்கியது.

இதனைக் கண்டு மனம் பொறுக்காத சிலர், வாக்னர்துரையிடம் புகார் செய்து அந்த ஆலயத்தை அகற்றத் தூண்டினர். இதற்கு செவி மடுத்த துரை, அந்தத் தொழிலாளியைக் கூப்பிட்டு ‘உடனே கோவிலை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் நானே இடித்து அகற்றுவேன்’ என்று ஆவேசப்பட்டார்.

இவ்வாறு கூறிய ஓரிரு நாளில், வாக்னர் துரைக்கு வாதநோய் ஏற்பட்டது. அவரின் கையும் காலும் அசைவற்றுப்படுக்கையில் கிடந்தார். வெளிநாட்டில் இருந்து வைத்தியர் வந்து மருத்துவம் பார்த்தும், அவர் குணம் பெறவில்லை.

இதற்குக் காரணம் கணேசரின் கோபமே என்பதை உணர்த்த வாக்னர் துரையின் தமிழ் நண்பர்கள், இது பற்றி அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறினர். அவரின் உடலில் திருநீறை பூசிவந்தால் குணம் பெறலாம் எனக் கூறினர். என்றாலும், அவரின் வறட்டுக் கவுரவம் அதைத் தடுத்தது.

ஆனால் கணேசர், தொழிலாளியின் கனவில், துரைக்கு விபூதியை தந்து தடவி விடும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ததும், துரையின் வாதநோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இயல்புநிலைக்குத் திரும்பினார்.

தன் தவறை உணர்ந்த துரை, அந்த இடத்தில் பெரிய ஆலயம் எழுப்பி வழிபட இடம் தந்து, நிதியுதவியும் செய்தார். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. மக்களின் கூட்டமும் அதிக அளவில்கூடத் தொடங்கியது என்கிறது இந்த ஆலய வரலாறு.

தனிச்சிறப்புகள்

உற்சவ மூர்த்தியாக விளங்கும் கணபதி தங்கத்தாலான வடிவம் என்பது மற்றொரு சிறப்பு அம்சம். இவ்வாலயத்தில் நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இது வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு ஆகும். தங்க விமானம், தங்ககாசு மாலை பெற்ற முதல் ஆலயம் இது. 1008 தங்க காசுமாலையின் காசுகள் ஒவ்வொன்றிலும் 108 மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

விழாக்கள்

விழாக்களில் முக்கியத் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாது சீனர்கள், மலேயர்களும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆலயம் கோலாலம்பூரில் பழமையான ஆலயமான, மகா மாரியம்மன் திருக்கோவிலின் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அமைவிடம்

கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மகாமாரியின் ஆலயத்தின் அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள புகுலாமா பகுதியின் மேடான இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

நல்ல நோக்கத்திலான வேண்டுதல்களை நிறைவேற்றுவதில், கோர்ட்டுமலை கணேசன் வள்ளல் என்பதால், இவரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளது.

- பனையபுரம் அதியமான்


பத்துமலை சென்றுவரும் கணேசர்

இந்த ஆலயத்தின் பக்தர்கள் நன்கொடையால் தங்க ரதம் செய்யப்பட்டுள்ளது. தைப் பூசத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி ரதங்களில் பவனி வரும் கணேசர் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் சென்று, தன் தம்பிக்கும், அடியார்களுக்கும் தரிசனம் தந்தபின்பு, மீண்டும் ஆலயம் திரும்புவது வழக்கமாக உள்ளது. வழிநெடுக திரளான மக்கள் அவரை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.