ஆன்மிகம்

கருத்துவேறுபாடு அகற்றும் மகாதேவர் + "||" + Mahadeva removes disagreement

கருத்துவேறுபாடு அகற்றும் மகாதேவர்

கருத்துவேறுபாடு அகற்றும் மகாதேவர்
கணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.
தலச் சிறப்பு

சேரநாட்டை ஆண்ட பெருமாக் கோதையார் எனும் மன்னர் திருவஞ்சைக்களம் மகாதேவர் மீது அதிகமான பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும் போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலியைக் கேட்ட பின்பே, அவர் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் இறைவனை வழிபடும் போது, சிலம்பொலி கேட்கவில்லை. தன்னுடைய வழிபாட்டில் ஏதோ குறை ஏற்பட்டு விட்டது என்று நினைத்த அவர், உடைவாளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது, அந்த இடத்தில் பெரும் சிலம்பொலி கேட்டது.

அங்கேக் காட்சியளித்த இறைவன், ‘மன்னா! சோழ நாட்டிலிருக்கும் சுந்தரர் எனும் பக்தர் இனிமையான பக்திப் பாடல்களைப் பாடி என்னை வழிபடுவார். இன்று அவர் பாடிய பாடலில் மெய்மறந்து இருந்ததால், உன் வழிபாட்டைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனால், என் சிலம்பொலி உனக்குக் கேட்கச் சிறிது காலதாமதமாகி விட்டது’ என்றார்.

உடனே மன்னன், இறைவனைப் பாடல்களால் மகிழ்விக்கும் சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்தார். பின்னர் சுந்தரரைத் தேடி அவரது இல்லத்துக்குச் சென்றார். அவர்கள் இரு வருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று, அங்கிருக்கும் இறைவனை வழிபட்டுத் திரும்பினார்.

அதன் பிறகு, சுந்தரர் சோழ நாடு, பாண்டிய நாடு மற்றும் தொண்டை மண்டலம் ஆகியவற்றிலிருக்கும் பல சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

சேரநாட்டிற்குச் சென்ற சுந்தரர் அங்கிருக்கும் பல கோவில் களுக்குச் சென்று வழிபட்டார். இறுதியாக அவர், திருவஞ்சைக்களம் கோவிலுக்குச் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி ‘தலைக்குத் தலை மாலை’ என்னும் பதிகம் பாடினார். அதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர்.

அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார். இறைவனின் பெரும் கருணையை அறிந்து மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் போற்றி, ‘தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார்.

இந்தப்பாடல் முடிவடைந்த நிலையில் சுந்தரரும் இறைவன் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சுந்தரர் கடைசியாகப் பாடிய பாடலைத் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி இறைவன் ஆணையிட, வருண பகவான் அப்பாடலைக் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறது ஆலயத்தின் வரலாறு.

கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இங்கு அம்மனுக்கான தனிச் சன்னிதி இல்லை. கருவறையினுள் இறைவனுடன் அம்மன் இணைந்து, சதாசிவ (உமாமகேசுவர) நிலையில் கிழக்கு நோக்கியபடி இருக்கிறார். இக்கோவில் இறைவன் மகாதேவர், அஞ்சைக்களத்தீசுவரர் எனும் பெயர்களிலும், அம்மன் ‘உமையம்மை’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆலயத்தில் கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி என்று இருபத்தைந்துக்கும் அதிகமான தெய்வங்களின் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் சுந்தரரும், சேர மன்னனும் சேர்ந்த நிலையில் தனிச்சன்னிதி இருக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தினமும் மாலை வேளையில் ‘தம்பதி பூஜை’ நடத்தப்படுகிறது. அதன் பிறகு, ‘பள்ளியறை பூஜை’ நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பவுர்ணமி நாளன்று நடைபெறும் இப்பூஜைகளில் கலந்துகொள்வது மிகவும் சிறப்புக்குரியது என்கின்றனர். இந்தப் பூஜைகளில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொடுங்கலூர் சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருவஞ்சைக்களம் சென்றடையலாம்.