கும்பகோணம் 20/20
தமிழகத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது கும்பகோணம்.
கும்பகோணத்தில் சைவ, வைணவக் கோவில்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர மகா மகம் அன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் நீராடும் மகாமக குளம் மிகவும் பிரசித்திப்பெற்றது. பல சிறப்புகளைக்கொண்ட கும்பகோணத்தைப் பற்றி இங்கே காணலாம்.
கும்பகோணத்திற்கு ‘குடந்தை’ என்ற பெயரும் உண்டு. குடமூக்கு என்பதன் மருவுச் சொல்லே குடந்தையாகும். குடந்தை என்ற சொல்லுக்கு ‘வளைவு’ என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி, கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் முக்கியநதியாக இருப்பவை, காவிரி, கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள். இவை அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் இருப்பதாக திருநாவுக்கரசர் தன்னுடைய பாடல் மூலம் பெருமை சேர்த்துள்ளார்.
சூத முனிவர் என்ற மகரிஷி, ‘சிவரகசியம்’ என்ற நூலை உருவாக்கி, அதனை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த நூலில் கோவில் நகரமான கும்பகோணத்தின் சிறப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உயிர்கள் தாங்கள் புரிந்த தீய வினைகளில் இருந்து விடுபட்டு, மோட்சம் பெற கும்பகோணம் திருத்தலமே சிறந்தது. இதனை சிவபெருமானே அருளியிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி என்பவன், அந்தணர் ஒருவரை கொன்ற பாவம் நீங்குவதற்காக, இங்குள்ள காசிப தீர்த்தத்தில் நீராடினான். அதன் மூலம் அவன் பாவம் நீங்கியது.
கும்பகோணத்தில் உள்ள சோமலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து, சந்திரன் தன்னுடைய நோயில் இருந்து விடுபட்டான். கும்பகோண தலத்தை வணங்கிய பிறகே, குபேரன் குபேரபுரிக்கு தலைவனானான். இத்தலத்தில் பூஜை செய்ததால், திருமால் வைகுண்ட பேறு அடைந்தார்.
சிவபெருமானை அழைக்காமல், தட்சன் யாகத்திற்கு சென்றதால் தேவர்களுக்கு துன்பம் வந்து சேர்ந்தது. அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க தேவர்கள் அனைவரும் கும்பகோணம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர்.
சூரியனின் ஒளியை அழிக்கும் படி, எமதர்மனை அவனுடைய மனைவி தூண்டினாள். எமனும், சூரியனின் ஒளியை இழக்கும்படிச் செய்தான். இழந்த ஒளியைப் பெறுவதற்காக சூரியன் வந்து வணங்கிய தலம் கும்பகோணம் திருத்தலம்.
காசியைப் போலவே கும்பகோணத்திலும், எட்டுத்திசைகளில் எட்டு பைரவர்கள் காவல்புரிகின்றனர். இங்கு தான் ஞானம்பிகையுடனான பைர வேசர் கோவில் இருக்கிறது.
கும்பகோணத்தில் பெருமையாக திகழும் மகா மகம் குளம், 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மகாமகம் தினத்தன்று, லட்சக்கணக்கில் மக்கள் நீராடுகின்றனர். காசியில் தீராத பாவங்கள் கூட கும்பகோணத்தில் தீரும் என்கிறது தல புராணம்.
சூரியனுக்கு நேர் எதிராக குருவும் சந்திரனும் இருக்கும் கிரக நிலையில், இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் உள்ளது. அதனால் புத்திர பாக்கியம், செல்வம் அனைத்தும் தரும் இடமாக இது விளங்குகிறது.
மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளை மாடு, அன்னம், தென்னை, குப்ததானம், சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரைக்கு அருகே உள்ள தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜகேசரி என்ற சோழ அரசனுடைய கல்வெட்டில், மாகமகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட அரசன்.
மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகை சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுண்ணிய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களிலும் நீராடுவது மிகவும் நன்மை தரும்.
மாசிமக நீராடலை, ‘பிதுர் மகா ஸ்நானம்’ என்று மாகபுராண அம்மானை என்ற நூல் கூறுகிறது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுகிறது.
மாசி மகத்தன்று விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் ஆண் சந்ததி உண்டாகும் என்ற நம்பிக்கையுள்ளது.
பிரம்மா தான் மகாமக விழாவை முதன் முதலில் தொடங்கி வைத்தார் என்கின்றன புராணங்கள். இந்த மகாமக குளத்தில் மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாளாக உள்ளது.
மாகமகக் கிணறு என்னும் சிம்மக் கிணறு உள்ளது. இதுவும் சிறப்பு மிக்கதாகும். மாசிமகத்தன்று தெப்பத்திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும்.
கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் அள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.
இக்குளத்தில் நீராடினால் அமுத குளத்திலே நீராடிய நன்மை கிடைக்கும்.
Related Tags :
Next Story