தானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு


தானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு
x
தினத்தந்தி 17 April 2018 8:12 AM GMT (Updated: 17 April 2018 8:12 AM GMT)

அட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.

18-4-2018 அட்சயத் திருதியை

மனிதர்கள் அனைவருக்கும் தேவையானது பணம். பை நிறையப் பணம் இருப்பவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றவருக்கு கிடைப்பதில்லை. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கின்படி, செல்வம் இல்லாதவர்களை சக மனிதர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை கண்கூடாகக் காணமுடிகிறது.

உழைப்பும் முயற்சியும் இருந்தாலும்.. அதோடு செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள்மிகுந்த கடைக்கண் பார்வையும் கிடைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நம் முன்னோர்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியை பூஜிக்க ஏற்ற சிறப்பான நாளாகத் தேர்ந்தெடுத்ததுதான், தமிழ் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பின் வளர்பிறையில் வரும் அட்சயத்திருதியை. திதிகளில் சிறப்புமிக்க திதிகளான பவுர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதிகளின் வரிசையில் இந்த அட்சயத்திருதியை திதியும் இணைந்து, வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்பை பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

‘சயம்’ என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்பது பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாதது, அள்ள அள்ளக் குறையாதது என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களுக்கு சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப்பாத்திரத்தில், எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைத்தது போன்று, இந்த அட்சயத் திருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கி என்றும் குறையாத செல்வங் களைப் பெறலாம்.

அட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது. யுகங்களில் முதல் யுகமான கிருதயுகம் தோன்றியது இந்நாளில்தான் என்றும், பிரம்மன் பூமியைத் தோற்றுவித்ததும், பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததும், பகீரதன் கடும் தவம் செய்து ஆகாயத்திலிருந்த கங்கையை பூமிக்கு வரவைத்ததும், ஈஸ்வரனுக்கு அன்னை பராசக்தி தன் கையிலிருந்த அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவளித்ததும் இந்த அட்சயத் திருதியை நாளில்தான் என்கிறது புராணங்கள். தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவரின் நினைவாகவும் கருதப்பட்டு, சமணர்களுக்கும் இந்நாள் புனிதநாள் ஆகிறது.

அட்சயத் திருதியை நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் பெற்றாராம். குபேரனும் இதே நன்னாளில் மகாலட்சுமியை மனதார வேண்டி வணங்கி, தனது செல்வத்தை என்றும் குறையாமல் பெருக்கிக் கொண்டாராம். அதனால்தான் இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியதாகிறது. அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்கள் போன்ற வற்றை லட்சுமி பூஜையில் வைத்து வளம் பெறலாம்.

லட்சுமி குபேரன் வாசம் செய்ய சில வாஸ்து முறை கூறப்பட்டுள்ளது. அதன்படி வீட்டின் வட கிழக்கு பாகத்தில் தானியங்களை சேமித்து வைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் குழந்தைகள் படிக்கும் அறையை அமைக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களையும் அதே பாகத்தில் வைக்கலாம். வடமேற்கு பகுதி பூஜை அறைக்கு சிறந்த இடம். வடக்கு திசை பொன் நகை வைப்பதற்கும், அக்னி மூலை சமையல் அறைக்கும் சிறப்பானது. பொதுவாக மனையின் தெற்கு பாகத்தில் குப்பைகள் இல்லா மல் பார்த்துக் கொண்டாலே, வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே, அட்சயத் திருதியை நாளில் பொன், பொருள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அன்றைய தினம் பொன் நகை வாங்கினால் அது பல்கிப்பெருகும் என்று சிலர் நம்பு கிறார்கள். இதனால் அன்றைய தினம் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம். அட்சயத் திருதியை தினத்தில் குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, கடன் வாங்குவதற்குக் கூட சிலர் தயங்குவதில்லை. ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா? அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா? என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

அன்னை மகாலட்சுமி பொன்னிலும் பொருளிலும் மட்டும் இல்லை. நம் நாட்டின் வளத்தைக் குறிப்பிடும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உயிர்வளர்க்கும் தானியங்களிலும், மஞ்சள் போன்ற மங்கலப்பொருட்களிலும் கூட வாசம் செய்கிறாள். எனவே அட்சயத் திருதியை அன்று, தானியங்களையோ, உப்பையோ அல்லது மஞ்சளையோ வாங்கி வீட்டில் வையுங்கள். நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களும் உள்ள இடத்தில் கண்டிப்பாக அன்னையின் அருள் கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதுதவிர மகிழ்வித்து மகிழ் எனும் கருத்திற்கேற்ப, லட்சுமியை மனதார வணங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்கலாம். தானங்களில் சிறந்த அன்னதானம், வஸ்திர (உடை) தானம் போன்றவற்றுடன், கல்வி பயில வசதியின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவது, புதிய செயல்களைத் தொடங்குவது, மரக்கன்றுகளை நடுவது, முதியோர்களுக்கு சேவை செய்வது போன்றவைகளை மனமுவந்து செய்து வந்தாலே நம் வாழ்வில் வளங்கள் பெருகி சிறக்கும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்.

இந்த அட்சயத் திருதியை நாளில் மட்டுமின்றி, என்றுமே தானங்களும் உதவிகளும் செய்து வந்தாலே நம் வாழ்வில் செல்வங்கள் பெருகி வளரும். 

Next Story