அர்த்தங்கள் மிகுந்த சடங்குகள்


அர்த்தங்கள் மிகுந்த சடங்குகள்
x
தினத்தந்தி 25 April 2018 6:24 AM GMT (Updated: 25 April 2018 6:24 AM GMT)

இந்துமத வழிபாட்டில் சில சடங்குகளும், வழிபாடுகளும் அர்த்தம் பொதிந்தவைகளாக உள்ளன. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

துளசி வழிபாடு

பலரும் தங்களது வீடுகளில் துளசி செடியுடன் கூடிய மாடம் அமைத்திருப்பார்கள். அதனை சுற்றி வந்து தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உருவாக்கி னார்கள்.

கோவில் மணிகள்

ஆலயத்திற்குச் சென்றால் அங்கு ஒலிக்கும் மணியோசை பிரதானமானது. கோவில் மணிகள், சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், துத்தநாகம், இரும்பு, காப்பர், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு முறை மணியை அசைக்கும் போது எழும் கூர்மையான சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்குமாம். இந்த ஒலியை உற்றுக் கேட்டால், பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பி அடங்குவதை உணரலாம்.

அரச மரம்

சுயநலமாகவோ, பொருளாதார ரீதியிலோ பார்த்தால் அரசமரத்தால் பெரிய பயன் ஒன்றும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த மரம் இந்துக்களால் வழிபடப்படும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மரம் மனிதர்களின் உயிர்க்காற்றான ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதே இதற்குக் காரணம். இரவு நேரத்திலும் கூட ஆக்சிஜனை வெளியிடும் ஒருசில மரங்களில் அரசமரமும் ஒன்று. பெரும்பாலும் விநாயகரின் உருவங்கள், அரசமரத்தின் அடியில்தான் இருக்கும்.

பொட்டு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது வழக்கமானதே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது, இந்த சக்கரம் தானாக செயல்படத் தொடங்கி விடும். இது உடலில் உள்ள ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும் என்கிறார்கள்.

கோவில் வலம்

உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையில், சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அப்படி ஒரு இடமாக ஆலயங்கள் திகழ்கிறது. வெறும் பாதத்தில் மேடு பள்ளமாக கற்களைப் பதித்திருக்கும் வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும். வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் ேபாது உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புண்ணியத்துடன் கூடிய ஆரோக்கியம். நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் இணைந்துள்ளன. கடற்கரை மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள். புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் வளரும்.

Next Story