சிலுவை மொழிகள்


சிலுவை மொழிகள்
x

இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவான் 19:26,27)

உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.

“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”.

தந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.

இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்க தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.

தான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.

வலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம். வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.

சிலுவை வரைத் தன்னை பின்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

தொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.

‘வியாகுல அன்னை’ என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி, சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.

ஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் ரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.

எல்லோரும் ஓடிவிட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரியாள் அதனால் தான் ‘வியாகுல அன்னை’ என அழைக்கப்படுகிறார்.

“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.

“என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.

மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும், உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித் திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும்.

இயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மிக மகனிடம்” ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக்கொடுக்கிறார்.

தம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக்கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்ல வில்லை என்கிறது மரபுச் செய்தி.

இயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.

உலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது. சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

(தொடரும்)

Next Story