ஆன்மிகம்

மன்மதனை உயிர்ப்பித்த திருமூலநாதர் + "||" + Thirumoolanathan who resurrected Manmadhan

மன்மதனை உயிர்ப்பித்த திருமூலநாதர்

மன்மதனை உயிர்ப்பித்த திருமூலநாதர்
தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.

இங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமூலநாத சுவாமி’. இறைவி பெயர் குங்கும சவுந்தரி அம்பாள். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பைத் தாண்டியதும் அகன்ற மண்டபத்தில் கொடிமர விநாயகர் அருள்பாலிக்க, கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள கலை மண்டபத்தைக் கடந்தால், மகாமண்டப நுழைவு வாசலை துவார பாலகர்களின் அழகு திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். இறைவன் சன்னிதியை அடுத்து அன்னை குங்கும சவுந்தரி தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாள். அன்னையின் சன்னிதியின் முன்புறம் கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அன்னையின் சன்னிதியில் மகா மண்டப நுழைவுவாசலில் துவார பாலகிகளின் சுதை வடிவமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன.

கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு இறைவன் கல்யாண கோலத்தில் இருப்பதால், இறைவியின் சன்னிதி இறைவனின் இடதுபுறம் அமைந்துள்ளதாக பக்தர்கள் சொல்கின்றனர். தவிர இறைவன் - இறைவி ஆலயங்கள் இணை ந்து அமைந்துள்ளதால் பிரகார வலம் வரும் போது இரண்டு ஆலயத்தையும் சேர்த்தே தான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது.

இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேல்புறம் அண்ணாமலையார், தெற்கில் சிவதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இங்குள்ள சிவதுர்க்கைக்கு 8 கரங்கள் உள்ளது என்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

ஆலயத்தின் திருச்சுற்றின் தெற்கில் நால்வர் மற்றும் நாயன்மார்களின் திரு மேனிகள் அழகுற அமைந்துள்ளன. பொதுவாக நால்வர் வரிசை என்பது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்ற முறையிலேயே அமைவது வழக்கம். ஆனால் இங்கு மாணிக்கவாசகர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தெரியவில்லை. நாயன்மார் வரிசைக்கு எதிரே மகாலிங்க மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது.

மேற்கு திருச்சுற்றில் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிகிறார். இவரே தல விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். இவருக்கு அருகே மற்றொரு பிள்ளையாரும் உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் ஒரே கல்லால் ஆனவர். இவருக்கு நெய் தீபம் ஏற்றி அருகம்புல் சூட்டி அர்ச்சனை செய்தால் புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

அடுத்து தனி சன்னிதியில் ஆறுமுக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அழகு திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதரால் போற்றிப் பாடப்பெற்ற பெருமான் இவர். இந்த முருகன் ஆறு தலைகளுடன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும்.

அதை அடுத்து தண்டாயுதபானி சன்னிதியும், அடுத்து மகாலட்சுமி, நாகர், ஜேஷ்டாதேவி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் தனிச் சன்னிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அசுரர்கள் ஓயவில்லை. தேவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேரே சிவனிடம் சென்றனர். தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.

‘முருகன் வருவார் காப்பாற்றுவார்’ எனக் கூறிவிட்டு மீண்டும் தவத்தில் அமர்ந்துவிட்டார் சிவன். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்தபாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.

தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக் கணை வீசி சிவனது தவத்தை கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் மறுத்துவிட்டான். ‘மறுத்தால் தாங்கள் சாபம் விடுவோம்’ என தேவர்கள் பயமுறுத்தவே, பயந்த மன்மதன், சிவன் மேல் மன்மத பாணத்தை ஏவினான்.

கிழக்கு நோக்கி இருந்த சிவன் மேற்கு நோக்கி திரும்ப, சிவனின் நெற்றிக் கண் பார்வை பட்டு மன் மதன் எரிந்து போனான். இந்த சம்பவம் நடந்த தலம் கொருக்கை. நாகை மாவட்டத்தில் உள்ளது இத்தலம். அதன்பின், தன் கணவனை இழந்த ரதிதேவி அழுதாள். கண்ணீர்விட்டு கதறினாள். பலன் இல்லை. உடனே சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். பிரம்மாவும் தவித்தார். மன்மதன் இல்லாததால் அவரது படைப்புத் தொழிலை அவரால் செய்ய முடியவில்லை.

தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவுக்கும் மன வேதனை. அனைவரும் சிவபெரு மானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்துகொண்டிருந்த ரதியின் முன் தோன்றினார்.

‘உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான்’ என்று ரதியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது இந்த ஆலய தல வரலாறு.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இந்த ஆலயம் பல சிறப்புகளுக்கு உட்பட்டது. இறைவன் சுயம்பு மூர்த்தி. ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள், சைவ சாத்திர நுட்பங்களை தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி சைவ சாத்திர யாகம் செய்தனர். வேள்விக்கு மகிழ்ந்த பெருமான் எழுந்தருளி, எழுபதின்மர் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ சாஸ்த்திர நுட்பங்களை அருளினார் என தல புராணம் கூறுகிறது.

தவத்தில் சிறந்த சிவன முனிவரின் சாபத்தால் பொலிவிழந்த இந்திரன், அவர் வழிகாட்டலின்படி பூவாளூர் பெருமானை வழிபட்டு மீண்டும் பொலிவுபெற்றான். அக்னி தேவன் இப்பெருமானை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான்.

இறைவியின் அர்த்த மண்டப இடது பக்க கருங்கல் சுவறில் நீண்ட நாகத்தின் உருவம் காணப்படுகிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாகரை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

பூவாளூர் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வெளியே வலது புறம் ஓடும் பல்குனி ஆற்றின் கரையில் தனிக் கோவில் கொண்டு அமர்ந்துள்ளார் ஸ்ரீதென் கயா பல்குனி ருத்ர சித்தர். இவருடைய யோக ஜோதி இத்தலத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

மூதாதையர்களுக்கு உரிய திதிகளில் இங்குள்ள பல்குனி நதிக்கரையில் தர்பணங்கள், சிரார்த்த ஹோம வழிபாடுகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம் தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல் தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் வழிபாட்டின் பரிபூரண பலன் கிட்டும் என்பது அனைவரின் நம்பிக்கை.

ஆலயத்தின் அருகே வலது புறம் வாக்கு வாளம்மன் ஆலயம் உள்ளது. இதன் கருவறையில் சப்த மாதர்களின் திருமேனி கள் உள்ளன. திருமணம் ஆகாத கன்னியர்கள், இறைவி குங்கும சவுந்தரிக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை எடுத்து தினசரி நெற்றியில் இட்டுக் கொண்டால் விரைந்து திருமணம் நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவியின் சன்னிதியில் தொட்டில் வாங்கி கட்டினால் அந்த பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள்.

தினசரி நான்கு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சி- லால்குடி நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்