ஆன்மிகம்

பக்தனைத் தேடி வந்த முருகப்பெருமான் + "||" + Lord Murugan who searched for devotion

பக்தனைத் தேடி வந்த முருகப்பெருமான்

பக்தனைத் தேடி வந்த முருகப்பெருமான்
திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது, குலசேகரன்பட்டினம் என்னும் சிறப்பான ஊர். இவ்வூரில்தான் தனது பக்தன் ஒருவருக்கு, திருச்செந்தூர் முருகன் அருள்புரிந்துள்ளார். அந்தக் கதையைப் பார்ப்போம்.
ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் குலசேகரப்பட்டினம். இங்கு முற்காலத்தில் துறைமுகம் இருந்துள்ளது. தற்போதும் இங்கு கலங்கரை விளக்கம், அங்கசாலை விநாயகர் உள்பட பல பழமையின் நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் தமிழ்சங்கம் இங்கு இருந்த தாகவும், இந்த ஊரை கபடபுரமென அழைத்ததாகவும் அறிஞர் பெருமக்களின் கருத்து.


குலசேகர பாண்டியன் இந்நகரின் பல்வேறு இடங்களில் சிவ பெருமானுக்கு ஆலயம் அமைத்து திருப்பணி செய்த சிறப்பான ஊர். எல்லாவற்றிற்கும் மேலாக தசராத் திருவிழா நடைபெறும் குலசை முத்தாரம்மன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.

இவ்வூரில்தான் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார். ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை. இவர் பிறப்பால் பெரும் செல்வந்தர். இவர் குலசேகரன் பட்டின குறுநில மன்னருக்குத் தலைமை அமைச்சராகவும் விளங்கியுள்ளார். சைவ ஒழுக்கம் நிறைந்தவர். திருச்செந்தூர் முருகனிடத்தில் சிறந்த பக்தி கொண்டவர். ஞான நூல்களை ஓதியும், ஓதுவித்தும் பெருமையுடன் வாழ்ந்து வந்தவர். மந்திர தந்திர நூல்களில் நிபுணராகவும் விளங்கினார்.

இவர் தினமும் இரவு நேர வழிபாட்டிற்காக திருச்செந்தூர் செல்வது வழக்கம். இதை தன் வாழ்க்கையில் கடமையாகவே செய்து வந்தார். ஆட்சித் திறன் அமைந்தவர் என்பதாலேயே இவரை பலரும் ‘ஞானியார்’ என்று அழைத்து வந்தனர். இவர் தனது தவ வலிமையால் பல அபூர்வ சக்திகளை, மக்களுக்கு நன்மை செய்வதற்காக வெளிப்படுத்தினார்.

கேரள மாநிலம் பூதப்பாண்டி என்ற ஊரில் பொல்லாப் பிள்ளை ஆசான் என்பவன் வாழ்ந்தான். இவன் கைதேர்ந்த மிகப்பெரிய மந்திரவாதி. அந்தப் பகுதி அரசனையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருந்தான். எனவே இவனும் ஒரு சிற்றரசன் போல வாழ்ந்தான். அந்தப்பகுதியில் ஒன்பது வீட்டு பிள்ளைமார்கள் வாழ்ந்தனர். இவர்களும் திறமை மிக்கவர்களே. ஒருநாள், மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க அவர்கள் எண்ணினர்.

அதன்படி அந்த மந்திரவாதியிடம் அபாயகரமான ஒரு வேலையைக் கொடுத்தனர். இலங்கை கண்டியில் அரச மாடத்தினுள் தூங்கிக் கொண்டிருக்கும் அரச கன்னியை தம் ஊருக்கு ஏவல் மூலம் உடனே கொண்டு வரவேண்டும் என்பதே அந்த வேலை.

‘என்னால் முடியும்’ என சவால் விட்டான் மந்திரவாதி.

தன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட பூதங்களைக் கூப்பிட்டான். அவைகளை கண்டிக்கு வான் வழியே ஏவினான். அவைகளும் ஆகாய மார்க்கமாக அரச கன்னியைக் கொண்டு வர புறப்பட்டன. அரச மாளிகையில் வான் வழியே உப்பரிகையில் குதித்த பூதங்கள், தூங்கிக்கொண்டிருந்த அரச கன்னிகையைக் கட்டிலோடு தூக்கிக் ெகாண்டு பூதப்பாண்டி நோக்கிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல் கடந்து குலசேகரன்பட்டினம் வழியாக அவை சென்றுக்கொண்டிருந்தன.

அந்த வேளையில் ஞானியார், குளத்தில் நின்றபடி இராப்பொழுது செய்ய வேண்டிய நாலாங்காலக் கடன் என்னும் துரிய சந்தியை முடித்துக் கொண்டிருந்தார். அப்போது விண்ணில் பூதங்கள் கட்டிலோடு கன்னிகையைத் தூக்கிப் போகின்ற நிழலை தண்ணீரில் கண்டார். அவரது ஞானசக்தியால் அசம்பாவிதத்தை உணர்ந்த ஞானியார், தன்னுடைய சக்தியால் பூதங்களோடு கட்டிலை கீழே இறக்கினார்.

அவரது சக்தியைக் கண்டு அஞ்சிய பூதங்கள், அவர் முன்பாக மண்டியிட்டன. அவைகளைப் பார்த்து, ஒரு பாவமும் அறியாத அரச கன்னியை முன்னிருந்த இடத்தில் கொண்டு விட்டு வரும்படி பூதங்களை ஏவினார். அவைகளும் அப்படிச் செய்து விட்டு, ஞானியாரிடம் திரும்பி வந்தன.

அந்த பூதங்களிடம், ‘உங்களை ஏவிவிட்ட மந்திரவாதி யிடம் சென்று, இனி இவ்விதக் கொடிய செயல்களில் ஈடுபடக் கூடாதென சொல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.

மந்திரவாதியிடம் சென்று பூதங்கள் நடந்த நிகழ்வுகளை கூறின. கோபம் கொண்ட மந்திரவாதி, ஞானியார் மீதே பல பூதங்களை ஏவினான். ஆனால் அந்த பூதங்களையெல்லாம் தனது தவ வலிமையால் விரட்டினார் ஞானியார்.

இறுதியாக வைரவ மூர்த்திக்குரிய மந்திரங்களை, மிக உக்கிரமாக உச்சாடணம் செய்து ஞானியாரிடம் ஏவினான் மந்திரவாதி.

வைரவமூர்த்தி மிக உக்கிரமாக குலசேகரன்பட்டினம் வந்து சேர்ந்தார். ஞானியாரைக் கண்டதும், இவர் செந்தூரனின் சிந்தை கவர்ந்த பக்தன் என் பதைத் தெரிந்து கொண்டார். உடனே அவரது ஆவேசம் குறைய ஆரம்பித்தது. ஞானியாருடனேயே வைரவமூர்த்தி தங்கினார். குலசையில் ஞானியார் வீட்டில், வைரவருக்குத் தனிப்பீடம் போடப்பட்டிருக்கிறது. பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் மந்திரவாதி... வைரவ மூர்த்தியை காணாது சினம் கொண்டான். எனவே அவன் நேராக குலசேகரன்பட்டினம் வந்தான். அங்கே ஞானியாரைக் கண்டான். இருவருக்கும் பல தர்க்கங்கள் நடந்தது. இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்திரவாதியின் பிடி தளர்ந்தது.

அவனைக் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஞானியார், அங்குள்ள ஒரு அறையைத் திறந்து காண்பித்தார். அங்கு மந்திரவாதியின் மனைவி, தங்கை, தாய், தந்தை முதலியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போனான் மந்திரவாதி. ஞானியாரிடம் சரணடைந்தான்.

மந்திரவாதியை மன்னித்த ஞானியார், ‘மந்திர ஆற்றலை இழி தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டாம்’ என்று அறிவுறுத்தி வழியனுப்பினார்.

ஞானியார் அடிகளின் புகழ் எங்கும் பரவியது. இதுபோலவே பல நற்பணிகளை செய்து வந்த ஞானியாருக்கு வயது 80-யை தொட்டது.

வயது முதிர்ந்த காலத்திலும் திருச்செந்தூர் கோவிலுக்கு இரவு வழிபாட்டுக்கு முருகனை வழிபட தினசரி எட்டு மைல் தூரம் நடந்தே செல்வார். அங்கு செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருவார். ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்ற போது, மழை பெய்தது. இடியும்.. மின்னலும் மிரட்டின.

தள்ளாத வயதில் வழிதவறி கடற்கரையை விட்டுச் சிறிது கரைக்கு மேல்புறம் நிலப்பகுதிக்கு போய் விட்டார். கையில் விளக்குமில்லை. வழிகாட்ட வழிப் போக்கர்கள் யாருமில்லை. மூப்பினால் தள்ளாடிக் கொண்டே கால்கள் போன பக்கம் நடந்தவருக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது ஒரு உருவம் கையில் சிறு விளக்கைப் பிடித்துக் கொண்டு ஞானியாரடிகள் முன்தோன்றியது. அந்த உருவம் அவரை, திருச்செந்தூர் சண்முக விலாசம் வரை கூட்டிச்சென்றது. அதன் பின் மறைந்தது.

செந்திலாண்டவனே தனக்கு இவ்வாறு துணையாக வந்தார் என்று ஞானியாரடிகள் மெய் சிலிர்ப்புடன், நா தழு தழுக்க அவரை எதிர்பார்த்து காத்திருந்த வேத விற்பன்னர்களிடம் கூறி மகிழ்ந்தார்.

குலசேகரன்பட்டினம் திரும்பியதும், செந்திலாண்டவன் அவர் கனவில் தோன்றி, ‘அன்பா! உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. தளர்ச்சியடைந்து விட்டாய். இனி இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் வரவேண்டாம். நாமே நாள்தோறும் திருச்செந்தூரில் இராக் காலம் ஆனதும், உன் வீட்டிற்கு படுக்கைக்கு வந்து விடுகிறோம்’ என்றருளி மறைந்தார். அன்று முதல் ஞானியாரடிகள் தனது வீட்டிலே உள்ள பூஜை மடத்தில் செந்திலாண்டவன் திரு உருவத்தை வைத்து வழிபட்டு வரலானார். இன்றும் ஞானியார் வழிபட்ட இடம் ‘படுக்கை வீட்டுக் கோவில்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இங்கு ஞானியார், முருகப்பெருமானை வழிபட்டு வந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

ஞானியார் சமாதி அடையும் காலம் வந்தது. நண்பகல் நேரம் அவரது பூத உடலை விட்டு குலசேகரன்பட்டினத்தில் உயிர் பிரிந்த போது அதிசயம் ஒன்று நடந்தது.

அச்சமயம் திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்ததாம். ஞானியாரடிகள் தன் பூத உடலுடன் மூலஸ்தானத்துக்குள் நுழைவதை அங்கு குழுமியிருந்த சேவார்த்திகள் பார்த்தனர்.

இவ்வாறு நூதனமாக மூலஸ்தானத்துக்குள் ஞானியார் செல்வதைக் கண்டு அங்குள்ள அனைவரும் திகைத்தனர்.

ஞானியாரின் உடல் குலசேகரன்பட்டினத்தில் மறைந்தாலும் உயிர் முருகப்பெருமானோடு கலந்து விட்டது என பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்.

ஞானியாருடைய பூத உடல், குலசேகரன் பட்டினத்தில் சமாதி வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

-சித்தா்களைத் தேடுவோம்.