பிரம்மச்சாரியாக அருளும் முருகப்பெருமான்


பிரம்மச்சாரியாக அருளும் முருகப்பெருமான்
x
தினத்தந்தி 27 April 2018 2:00 AM GMT (Updated: 26 April 2018 8:51 AM GMT)

தமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.

தல வரலாறு

ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுக் கொண்டு வரும் வழியில்,  தன்னைச் சந்திப்பதாகச் சொல்லிச் சென்ற ராமனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார், பிரம்மச்சாரி யான கவுண முனிவர். ஆனால், ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பிய போது, அவரைச் சந்திக்காமலேயே சென்று விட்டாராம். ராமன் தன்னை மறந்து ஊர் திரும்பிச் சென்றதற்கு, அவரது இல்லற வாழ்க்கையே காரணமென்று நினைத்த கவுண முனிவர், ராமனிடம் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாத நிலையில், தான் அதிகம் விரும்பும் கடவுளான முருகப்பெருமானிடம் தன் வேண்டுதலை முன்வைப்பதென்று முடிவு செய்தார்.

தன் எண்ணப்படி முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்த கவுண முனிவரின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘ஒரு மனைவியைக் கொண்டிருக்கும் ராமனே இல்லற வாழ்க்கைக்கு இடையே நம்மை மறந்து விட்டாரே, இரண்டு மனைவிகளைக் கொண்ட முருகப்பெருமான் நமது வேண்டுதலைக் கவனிப்பாரோ, மாட்டாரோ’ என்று நினைத்தார்.

தன் மனதில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக, கவுண முனிவர் தான் வடித்த முருகப்பெருமானின் சிலையை பிரம்மச்சாரியாக வடித்து, கோவிலில் நிறுவி விட்டார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ‘பிரம்மச்சாரி முருகன்’ என்றே அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவர் ‘சுப்பிரமணியசுவாமி’, ‘கிடங்கூரப்பன்’ என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மேற்குப் பகுதி யில் மயில் உருவத்துடன் கூடிய உயரமான கொடி மரம் மற்றும் பலிபீடம் அமைந்திருக்கிறது. கேரளக் கோவில்களில், இங்குள்ள கொடிமரமே மிகுந்த உயரமானது என்கின்றனர். கோவில் வளாகத்தினுள் மகாவிஷ்ணு, சாஸ்தா சன்னிதிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள கூத்தம் பலத்தில் புவனேஸ்வரி அம்மன் இருந்து அருள் செய்கிறார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

கூத்தம்பலம்


இந்தக் கோவிலில் மருத்துவக் குணங்கள் அதிக முடைய ‘குறுந்தொட்டி’ எனப்படும் மரத்தைக் கொண்டு கூத்தம்பலம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திர வடிவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் வைத்து, பழமையான ‘கூடியாட்டம்’ எனும் கூத்து நடத்தப்படுகிறது. இக்கூத்தில் முருகப்பெருமானைப் பற்றி நடத்தப்படும், ‘பிரம்மச்சாரி கூத்து’ மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.



வழிபாடுகள்

இந்தக் கோவிலில் தினசரி காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ‘திரு உற்சவம்’ என்று அழைக்கப்படும் இந்த ஆண்டுத் திருவிழா, 10 நாட்கள் வரை வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா நாட்களில் மலையாள மரபு வழி, கலை நிகழ்ச்சிகள் பலவும் நடத்தப்படுகின்றன.

அதே போல மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகைத் திருவிழாவும், மகரம் (தை) மாதத்தில் தைப்பூசத் திரு விழாவும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

இவை தவிர இத்தலத்தில் உள்ள மகாவிஷ்ணு சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் வரும் அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திர நாளில் ‘கிருஷ்ண ஜெயந்தி விழா’ கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் இங்குள்ள சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை செய்யப்படுகிறது.

சிங்கம் (ஆவணி) மாதத்தில் உத்திராடம் நட்சத்திர நாளில் ‘புத்தரிசி நாள் விழா’வும், துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன. இதில் விஜயதசமி நாளில் கல்விப் பயிலப் போகும் பிள்ளைகளுக்கு, ‘எழுத்து நிறுத்து விழா’ நடக்கிறது.

வழிபாட்டுப் பலன்கள்


உடல்நலம் வேண்டுபவர்கள் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், திருமணத்தடை நீங்க வேண்டுபவர்கள் சுயம்வர அர்ச்சனை செய்தும் வேண்டிய பலன்களைப் பெறலாம். இங்குள்ள விஷ்ணு சன்னிதியில் பக்தர்கள் பால்பாயாசம், அப்பம் படைத்து விஷ்ணுவை வணங்கி வருகின்றனர்.

இங்குள்ள கூத்தம்பலத்தில் இருந்து அருளும் புவனேஷ்வரி அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குருதி பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

அமைவிடம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் இருந்து எட்டுமானூர் வழியாக 14 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ அல்லது பாலா எனும் ஊரிலிருந்து 9 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ கூட்டாப்புரம் எனும் கிடங்கூர் சந்திப்பு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்று இக்கோவிலை அடையலாம்.

கோட்டயத்தில் இருந்து மன்னார்காடு வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆயர்குன்னம் என்னும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலுக்குக் கோட்டயம், பாலா ஆகிய இரு ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

- தேனி மு.சுப்பிரமணி



பெண்களுக்கு அனுமதியில்லை

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருப்பதால், அவரது சன்னிதிக்குள் பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுவதில்லை. எனவே பெண்கள் அனைவரும் முருகப்பெருமான் சன்னிதிக்கு முன்பாக உள்ள கொடி மரத்தின் அருகில் நின்று இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கணவன் -மனைவியாகக் கோவிலுக்குச் சென்றாலும், கணவன் மட்டுமே முருகன் சன்னிதிக்குள் சென்று குழந்தைப்பேறு வேண்டி முருகனை வழிபட முடியும். மனைவி கொடிமரத்தின் அருகில் நின்றபடி முருகனிடம் குழந்தைப்பேறு வேண்டலாம். வேண்டுதலுக்குப் பின்பு குழந்தைப்பேறு பெற்றவர்கள், இங்குள்ள கூத்தம்பலத்தில் நடைபெறும் ‘பிரம்மச்சாரி கூத்து’ நிகழ்ச்சியை நடத்தி முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

Next Story