இளமையும் அழகும் அருளும் ஆலயம் - பனையபுரம் அதியமான்


இளமையும் அழகும் அருளும் ஆலயம் - பனையபுரம் அதியமான்
x
தினத்தந்தி 1 May 2018 10:22 AM IST (Updated: 1 May 2018 10:22 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது இலம்பையங்கோட்டூர் சிவாலயம்.

தீண்டாத் திருமேனிநாதர், தேவலோகக் கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டைநாட்டுத் தலம், சந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், யோகதட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கோவில், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மனம் கவர்ந்த கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது இலம்பையங்கோட்டூர் சிவாலயம்.

தல வரலாறு

தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற 32 தலங் களுள் 13-வது தலமாக விளங்குவது இலம்பையங்கோட்டூர். திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனுக்கு இடையூறு ஏற்பட்டு தேர் அச்சு முறிந்து சாய்ந்தது. அப்போது சிவபெருமான் அணிந்திருந்த கொன்றை மாலை பூமியில் விழுந்தது. அந்த மாலை ஒரு சுயம்பு லிங்கமானது. தேவர்களைக் காப்பதற்காக புறப்படும் போது, தோன்றிய லிங்கம் என்பதால் இந்த இறைவன் ‘தெய்வநாயகேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.

இந்த நிகழ்வை திருஞானசம்பந்தர் தனது இரண்டாவது பாடலில், திருமலர்க்கொன்றையான் என்ற வரிகள் வாயிலாக உணர்த்துகிறார்.

திருஞானசம்பந்தர் பல்வேறு சிவ தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியவாறு, இந்தத் திருத் தலத்தைக் கடந்து சென்றார். அப்போது இறைவன் ஒரு குழந்தையாக வந்து இத்தலத்திற்கு அழைத்தார். ஆனால் திருஞானசம்பந்தர் வரவில்லை. அதனால் முரட்டுக் காளையாக வந்து வழிமறித்து, மிரட்டி இத் தலத்தை திருஞானசம்பந்தருக்கு இறைவன் காட்டியதாக தல வரலாறு சொல்கிறது.

இச்சம்பவத்தைப் ‘பாலனாம்.. விருத்தனாம்.. பசுபதிதானாம்..’ என்ற பாடலின் வாயிலாக அறிய முடிகிறது.

இத்தல இறைவியின் பெயர் கனககுசாம்பிகை. இவர் இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியபடி எழில்மிகு தோற்றத்துடன் காட்சி தருகிறார். அம்மனின் பாதத்தில் காஞ்சிப் பெரியவர் வழங்கிய சக்கரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. இத்தல ஈசன், கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கி இறைவி காட்சி தருகிறாள். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய ரம்பாபுரிநாதர், பதினாறு பேறுகளைத் தரும் சிவனாக அமர்ந்திருக்கிறார். கோவிலின் தெற்கே மல்லிகா புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. இது ரம்பா தீர்த்தம், சந்திர தீர்த்தம் என வெவ் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் இடப்புறத்தில் பழங்கால சத்திரம் காட்சி தருகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 1948-ம் ஆண்டும், ஆலய பரம்பரை அறங்காவலரால் 1979-ம் ஆண்டும் குடமுழுக்கு நிகழ்ந்துள்ளன.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, இங்கே கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் யோக தட்சிணாமூர்த்தி. இவர் சின்முத்திரையைத் தனது இதயத்தில் நிறுத்தி, கண்கள் இரண்டையும் கீழ்நோக்கியும், வலது கரத்தில் திரிசூலம், இடது கரத்தில் ருத்திராட்ச மாலை ஆகியவற்றைத் தாங்கியும், மற்றொரு இடதுகரத்தைக் கீழே நிறுத்தி, இடது பாதத்தை அபஸ்மாரன் என்ற முயலகன் மீது அமர்த்தியும், சனகாதி முனிவர்களுடன் கல்லால மரத்தின் அடியில் அபூர்வ திருக்காலத்தில் அமர்ந்துள்ளார்.

தேவலோகக் கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் இத்தலம் வந்து வழிபட்டுப் பேறு பெற்றதை, சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருக்கூவப் புராணம் நூல் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், இவர்கள் வழிபட்டதன் நினைவாக தனி சிவலிங்கமும், சுற்றுப் பிரகாரத்தின் இடது புறம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் 16 பட்டைகள் கொண்டு விளங்குகிறது. இச்சம்பவம் காரணமாக திருஅரம்பேஸ்வரர் என்ற திருப்பெயரும் இறைவனுக்கு உண்டு. எனவே, அழகை விரும்பும் பெண்கள் அவசியம் சென்று வழிபட ஏற்ற தலம் இது.

இத்தலத்து இறைவனை வழிபட்டால், மறுபிறவியே இல்லை என்பதை ஞானசம்பந்தர் உறுதிபடக்கூறுகிறார். மறுபிறவி வேண்டுவோர் யாரும் இல்லை என்பதால், அவசியம் இத்தலத்து நாயகனைத் தரிசித்துப் பிறவாநெறி பெற்றுய்யலாம்.

அமைவிடம்

இச்சிறப்புமிகு தலம் அமைந்துள்ள இடம், இலம்பையங்கோட்டூர் என்றாலும், இதன் இன்றைய பெயர் எலுமியன்கோட்டூர். இது காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்குவார்சத்திரம் அருகே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மேற்கே 55 கி.மீ., பூந்தமல்லியிலிருந்து மேற்கே 40 கி.மீ., காஞ்சீபுரத்தில் இருந்து வடக்கே 25 கி.மீ., ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மேற்கே 22 கி.மீ, பேரம்பாக்கத்தில் இருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் எலுமியன்கோட்டூர் அமைந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் மூலம் பேரம்பாக்கம் செல்ல வேண்டும். அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.

Next Story