சிலுவை மொழிகள் - சேவியர்


சிலுவை மொழிகள் - சேவியர்
x
தினத்தந்தி 1 May 2018 5:16 AM GMT (Updated: 1 May 2018 5:16 AM GMT)

இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்

யேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் (மத்தேயு 27:45)

இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது.

வலியின் வார்த்தை, நிராகரிப்பின் வார்த்தை. வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.

மக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் லட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வியர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறிவித்துத் திரிந்தவர் இயேசு.

கடைசியில் மதவாதிகளாலும், அதிகாரி களாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்.

நிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.

நாம் நினைப்பது போல ஆணியின் கூர்மை களைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது. அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல, இதயத்தின் வலி.

உலகின் பாவங்களைப் போக்கவேண்டும் எனில் மானிடரின் பாவங்களை எல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு.

“அவரோ நம் குற்றங்களுக்காகக் காய மடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.

இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.

இப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப்போகின்றனர்.

பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.

இந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” (மத் 26:39) என தந்தையிடம் வேண்டினார்.

எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.

உலகம் தொடங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.

“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” (சங் 22) என்பது அந்தக்கால பிரபலமான ஒரு பாடலின் தொடக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் தொடங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.

அந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல்.

“மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்...” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.

சிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கதரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.

இயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் ‘மெசியா’ என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார்.

உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.

(தொடரும்)

Next Story