தொழுகைக்கான திசை
அண்ணலார் மக்காவில் வாழ்ந்த காலத்தில் “பைத்துல் முகத்தஸ்” என்ற பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கியே அனைவரும் தொழுது வந்தனர்.
“கிழக்கு திசையும், மேற்கு திசையும் அல்லாஹ்விற்கே உரியன. ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். மிக அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:115)
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதராய் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அல்லாஹ்விடம் இருந்து ‘வஹி’ எனப்படும் இறைச்செய்திகள் அவ்வப்போது நபிகளுக்கு வந்தது. அந்த இறைவசனங்களை மக்களிடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்.
அந்த இறைவசனங்களில் இருந்த உண்மை மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நபிகளாரின் போதனைகளை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் கூட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், ஏக இறைவனான தன்னை வணங்குவதற்கான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தர அல்லாஹ் விரும்பினான்.
இதையடுத்து நபிகளாரை “மிக்ராஜ்” என்ற விண்வெளிப் பயணத்தின் மூலம் தன்னிடத்திற்கு அழைத்தான். அப்போது, தன் அடியார்களுக்கு தினமும் ஐந்து வேளைத் தொழுகையை கடமையாக்கினான்.
அதன் அடிப்படையில் பலருக்கு தொழுகை முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் கண்மணி நாயகம். அதில் ஒரு வரைமுறையாக, தொழுகைக்காக எழுந்து நிற்பவர் பாலஸ்தீனில் உள்ள “பைத்துல் முகத்தஸ்” என்ற இறை இல்லத்தை நோக்கி தொழ வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
அண்ணலார் மக்காவில் வாழ்ந்த காலத்தில் “பைத்துல் முகத்தஸ்” என்ற பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கியே அனைவரும் தொழுது வந்தனர். நபிபெருமான் (ஸல்) மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து மதினாவை வந்தடைந்த பிறகு ‘கஅபா’ ஆலயத்தின் மீதான அன்பு அவர் களுக்கு மனதில் அதிகரிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதை அறிந்த அல்லாஹ் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட இந்த வசனத்தை இறக்கினான்:
“நபியே உமது முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாக திருப்புகிறோம். எனவே நீர் தொழும் போது மக்காவிலுள்ள கஅபத்துல்லாவின் பக்கமே உமது முகத்தை திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையில் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (திருக்குர்ஆன் 2:144).
ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஷபான் மாதம் அத்தீக் என்ற இடத்தில் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) லுஹர் (நண்பகல் நேர) தொழுகை தொழுது கொண்டிருந்த போது இந்த வசனம் இறங்கியது.
மாநபி அவர்கள் மனம் மகிழ்ந்தவர்களாக தான் தொழுது கொண்டிருந்த இரண்டாவது ரக்காத்திலேயே அப்படியே நேர் எதிர் திசையான கஅபத்துல்லாவை நோக்கி திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்த சஹாபா பெருமக்களும் அப்படியே நபிகளைப் பின்பற்றி தங்கள் திசையை மாற்றிக் கொண்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் கஅபத்துல்லாவை முன்னோக்கியே தொழுது வருகிறார்கள்.
எந்த மஸ்ஜித்தில் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தொழுதார்களோ அந்த பள்ளிவாசல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு இமாம் நின்று தொழும் இடம் (மிக்ராப்) எதிரும் புதிருமாக இரண்டு இருப்பதை இன்று கூட அங்கு செல்லும் அனைவராலும் காணமுடியும். அந்த பள்ளிவாசல் ‘மஸ்ஜித் கிப்லதைன்’ (இரண்டு மிக்ராப்கள் கொண்ட மஸ்ஜித்) என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டு வருகிறது.
“இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர் களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது மக்கா வில் இருப்பது தான்” என்பது திருக்குர்ஆன் (3:96) வசனமாகும்.
அல்லாஹ்வால் கட்டி அமைக்கப்பட்ட இல்லம் கஅபத்துல்லா. உலகம் தோன்றிய அன்றே அல்லாஹ்வால் நிர்மாணிக்கப்பட்ட இறைஇல்லம் `கஅபா' உலகின் முதல் ஆலயமும், ஆதிபிதா ஆதம் நபியவர்கள் தொழுத ஆலயமும் இதுவே. பின்னாளில் நூஹ் நபி காலத்தில் வெள்ளப் பிரளயத்தால் உலகம் அழிக்கப் பட்ட போது கஅபத்துல்லாவும் சிதலம் அடைந்து மண்ணில் புதைந்திருந்தது.
இப்ராகிம் நபியவர்களின் காலத்தில் அல்லாஹ் அந்த கஅபத்துல்லாவை மீண்டும் புதுப்பித்து மக்களுக்காக வணக்கஸ்தலமாக உருவாக்க எண்ணினான்.
பாரசீகத்தில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபியவர்களை அரபு பாலைவனத்திற்கு வரச் செய்து, அந்த இடத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டி மீண்டும் அதனை கட்டி முடிக்க கட்டளையிட்டான். இப்ராகிம் நபியும், அவரது மகன் இஸ்மாயில் நபியும் சேர்ந்து கஅபாவை கட்டி முடித்து விட்டு இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
“எங்கள் இறைவனே! உனக்காக நாங்கள் செய்த இந்த பணியை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ தான் எங்களது பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:127)
அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், “மக்காவில் இப்ராகிம் நபியவர்கள் கட்டிய கஅபா என்னும் வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம்” (2:125) என்ற வசனத்தை திருக்குர்ஆனில் இறக்கி வைத்தான்.
இந்தியாவில் வாழும் பிற மதத்தினர் முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு திசையை நோக்கித் தொழுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அல்லாஹ்வின் கட்டளை கஅபத்துல்லாவை நோக்கி தொழ வேண்டும் என்பதே.
கஅபத்துல்லா, அல்லாஹ்வால் உருவாக்கப்படும் காலகட்டத்திலேயே இத்தகைய சிறப்பம்சத்தோடு தான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் முஸ்லிம்களின் தொழுகையின் முகப்பு கஅபத்துல்லாவாக இருக்கிறது.
“நீங்கள் எங்கிருந்த போதிலும் மஸ்ஜித் கஅபாவின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம் என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். அதனால் நீங்கள் நிச்சயமாக நேரான வழியை அடைவீர்கள்” என்பது திருக்குர்ஆன் (2:150) வசனம் ஆகும்.
நாம் எங்கிருந்த போதிலும் நம் முகத்தை காஅபா நோக்கியே திருப்புவோம், தொழுவோம், நன்மை அனைத்தையும் பெற்று கொள்வோம்.
Related Tags :
Next Story