ஆன்மிகம்

சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில் + "||" + Special Utmost Chinna Avudaiyar Temple

சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்

சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர்.
வாதவூரர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தள பதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.

ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையின் தென்புறம் விநாயகர், வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் தெற்கு பிரகாரத்தில் தென்முகமாக யோக தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்.

வடக்கு பிரகாரத்தில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆலயம் தற்போது வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் பல இடங்கள் சேதமடைந்து காணப்படும் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் கொள்ளுக்காடு உள்ளது.


- ஞான தங்கபாரதி, பட்டுக்கோட்டை