மங்கலம் அருளும் பொங்கு சனீஸ்வரர்


மங்கலம் அருளும் பொங்கு சனீஸ்வரர்
x
தினத்தந்தி 29 May 2018 10:01 AM GMT (Updated: 29 May 2018 10:01 AM GMT)

ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும்.

முன்னொரு சமயம் உலக முதல்வனாம் சிவபெருமானுக்கும், உலக நாயகியாம் பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த வேளையில் இறைவன்- இறைவியின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், கிருடர்கள், கிம்புருவர், காந்தர்வர்கள் என அனைவரும் கயிலாயத்தில் குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து பூமி நிலைகுலைந்தது.

இதனையறிந்த சிவபெருமான் சப்தரிஷிகளுள் முதல்வரான அகத்திய முனிவரை தென்திசை சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி வந்தார் அகத்திய மாமுனிவர். அப்போது சந்தியா வேளை. அருகில் ஓடிய அனுமன் ஆற்றில் மூழ்கி அருகில் இருந்த புளியமர நிழலில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தார். அச்சமயம் புளிய மரக்கிளையில் கூடு கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து மணல் லிங்கம்மீது தேன் சொட்டியது. (மதுரமான) தேனில் இறுகி தேன்லிங்கமாக மாறியது. பூஜை முடித்தபின் இதனை கவனித்த அகத்தியர் சிவலிங்கத்தை ‘தேனீஸ்வரர்’ (மதுநாதர்) என்று அழைத்து ஆனந்தம் கொண்டார். தேனீஸ்வரா என்று அழைக்கப்பட்ட மணல் லிங்கமானது, பின்னர் மதுநாதா என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு அகத்தியர் வழிபட்ட மணல் லிங்கம் அமைந்திருக்கும் கோவிலே ‘மதுநாத சுவாமி திருக்கோவில்’ ஆகும்.

இவ்வூரின் வழியே ஆதியில் ஓடிய நதி ‘அனுமன் நதி’ ஆகும். ராம- லட்சுமணர்கள் வானர சேனையோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே, ‘அனுமன்’ ராம நாமம் சொல்லி பாறையில் அடிக்க, அப்பாறை வழியே ஆகாய கங்கை பெருகி ஓடிவந்து, ராம- லட்சுமணர் மற்றும் வானர சேனைகளின் தாகம் தீர்த்ததாக ஐதீகம். அந்நதியே அனுமன் நதியாகும். அனுமன் நதிக்கரையில் அமைந்த ஊரே இலத்தூர் ஆகும்.

‘மூர்த்தி தலம், தீர்த்தம் முறையாகத் தொழுவோருக்கு ஈசன் திருவடி எளிதில் கிட்டுமே’ என்ற முதுமொழிக்கிணங்க தொன்முனி அகத்தியரால் உருவாக்கப்பட்ட மதுநாதர், வாயு குமாரனால் உருவாக்கப்பட்ட அனுமன் நதி நீர் பாயும் திருக்குளம், ‘தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்குரியராம்’ தன்மையுடைய சான்றோர் வாழும் திருப்பதியாக இலத்தூர் திகழ்கிறது.

இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. அகத்திய மாமுனிவர் காலத்திற்குப் பின்பு தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் அன்னபூரணி மாதாவிற்கு தனிக்கோவில் உள்ளது என்பது சிறப்பு அம்சமாகும். சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும். பக்தர்கள் வலம்வரும் வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் மத்தியில் ஆறுமுக நயினார் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ளது.

மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ெரயில் சேவையும் உள்ளது. 

Next Story