ஆன்மிகம்

கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்! + "||" + Be careful, be watchful!

கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்!

கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்!
இயேசு ஆற்றிய இறுதிஉரையில் ‘விழிப்பாயிருங்கள்’ என்ற அறைகூவலை விடுக்கிறார்.
தூக்கம் சிலருக்கு நண்பன், ஆனால் விழித்திருத்தல் எல்லோருக்கும் கடின மானது. அளவுக்கு மீறிய தூக்கம் அலட்சியத்தை தரும். உழைப்புக்கு உயிர் கொடுக்கும் விழித் திருப்பு லட்சியத்தை வெல்லும்.

இறைமகன் இயேசு தம் சீடர்களிடம் விழித்திருக்கும்படியான ஒரு அழைப்பைக் கொடுக்கிறார்.

எருசலேமில் இயேசு ஆற்றிய இறுதிஉரையில் ‘விழிப்பாயிருங்கள்’ என்ற அறைகூவலை விடுப்பதோடு விழித்திருத்தலின் முக்கியத் துவத்தையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.

மானிட மகன் வரும் நாளையும் வேளையையும் பற்றி தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆதலால் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:33). என் கிறார்.

இறைமகன் இயேசு ஆற்றின பணிகளின் முழுமை அவருடைய பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் விளங்க இருக்கும் நிலையில் இவ்வாறு கூறுகிறார்.

இனி நிகழவிருக்கும் பாடு, மரணம், உயிர்ப்பின் முன்னேற்பாடாகவும் தம் வாழ்வின் நோக்கம் நிறைவு பெற்று விட்டது என்பதைக் காட்டவும், இனித் தம் சீடருக்கும் நிகழவிருக்கும் எதிர்ப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும் இந்த இறுதி உரையை ஆற்றுகிறார்.

மேற்கூறிய அறிவுரை திருவெளிப்பாடு நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் பற்றியது. இவை நிறைவேறும் காலம் எவ்வளவு உண்மையோ, அவை நிகழும் காலமும் மறைபொருளாய் இருக்கிறது என்பதும் அவ்வளவு உண்மை. மானிடமகனின் வெற்றி வருகையின் மாட்சியும் அதுவே. இந்த வருகை தான் கடவுள் மக்களைத் தீர்ப்பிடும் நாள் என்று கருதப்படுகிறது (லூக்கா 21:34).

இத்தகைய தீர்ப்புகள் மறைபொருள் போல் பாதுகாக்கப்பட வேண்டியதால் அது யாருக்குமே தெரியாது என்றும், மக்கள் என்றுமே தங்கள் கடமைகளை ஆற்றி, இந்த தீர்ப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்வில் ஒரு நிரந்தரமான ஒழுக்க நிலை இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இறைமகனின் வருகை நாளாகவே கருதப்பட வேண்டும்.

இயேசு ஆற்றிய இறுதி உரையின் முடிவுரை ஒரு சிறப்பான எச்சரிக்கை வார்த்தையுடன் அமைந்துள்ளது. ‘அழிவு’ என்ற சிந்தனையுடன் இவ்வுரை தொடங்குகிறது. இந்த அழிவு எப்போது வரும் என்று தம் சீடர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த முதல் பதில் “அவர்கள் கவனமாயிருக்க வேண்டும்” என்பது தான்.

இந்த உரையின் இறுதிக்கட்டத்தில் இறை மகன் இயேசு மீண்டும் அதே எச்சரிக்கை சொற்களைப் பயன்படுத்துகிறார். “சீடர்கள் விழிப்பாயிருக்க வேண்டும்” என்று அவர் நான்கு முறை எச்சரிக்கை விடுக்கிறார் (மாற்கு: 13:33,34,35,37).

விழித்திருங்கள் (அ) விழித்திருத்தல் என்பதன் கிரேக்க மூலப்பதம் “கிரிகாரியோ” என்பதாகும். இது தொடர்ந்து எப்போதும் ஆயத்த நிலையில் அல்லது விழிப்புடன் இருத்தலைக் குறிப்பிடுகின்றது.

போர்க்களத்தில் ஆயத்த நிலையில் இருக்கும் வீரர்களிடம் உள்ள விழிப்புணர்வுடன் இது ஒப்புமைப்படுத்தப்படுகிறது.

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இறை மகன் இயேசுவின் மாட்சிமிகு வருகையை மிகுந்த மனோவாஞ்சையோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். எதிர்பார்ப்புக் காலம் நீடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் கிறிஸ்தவர்கள் தங்கள் கடமைகளில் தளர்ந்து இருந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கும்படியாகவே இத்தகைய எச்சரிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

பொறுமை, நம்பிக்கை, கடமை தவறாமை, தளராத எதிர்பார்ப்பு மனநிலை ஆகிய பண்புகளுடன் கூடியதாகத் தான் இந்த எச்சரிக்கைகளையும் காண வேண்டும்.

ஒரு ஆயத்த நிலை என்ற கருத்து தான் இயேசுவின் இறுதி உரையில் தொடர்ந்து எதிரொலித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு ஆயத்த நிலை மனப்பாங்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை உணர்வாக திகழ வேண்டும். இந்த ஆயத்த நிலையில் ஒவ்வொரு நாளும் இயேசுவின் வருகையை உணரலாம்.

இறைவன் நம் மானிட பிறப்பு சிறப்புறுவதற்கு நம் திறமைகளை அறிந்து ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை அளித்துள்ளார். அதோடு நம் கடமைகளில் நாம் தவறுகின்ற தருணங்களில் அவர் தம் வாக்கின் வழியாக நம்மை எச்சரித்து ஆற்றுப்படுத்துகிறார்.

அவர் வருகையை நாம் அறியாதவர்களாக இருக்கிறோம். மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ, அவர் வருகை எந்த நாள், எந்த சமயமென்று, ஆராயாமல் அவர் திடீரென்று வந்து நாம் தூங்குவதை காணாதபடிக்கு, அவர் வருகைக்காக நம் கடமைகளில் கவனமாயிருந்து விழித்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஆண்டவர் இயேசு கூறிய ‘தோழியர் பத்து பேர்’ உவமையில் மணவாளன் திடீரென்று நடுஇரவில் வருகிறார் (மத்தேயு 25:1,13)

விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். (I தெச 5:6) என்கிறார் தூய பவுல் அடிகளார்.

இறைவன் அழைத்த அழைப்பை உணர்ந்து, நமக்கு கொடுக்கப்படுகின்ற கடமைகளை சிறப்புடன் ஆற்ற அவர் ஒவ்வொரு நாளும் நம்மை தகுதிப்படுத்தி வருகிறார். நாளுக்கு நாள் அவருடைய வருகையின் தாகம் நம்மில் அதிகரிக்க வேண்டும். விழிப்புள்ள மக்களாக இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை எந்த நேரமுமாயினும் எதிர்கொள்வதற்கு ஆயத்தமான விழிப்புள்ள மக்களாய் வாழ்வோம்.

அருட்பணி. ம. பென்னியமின், பரளியாறு.