புதன் கிரகம் தரும் நன்மை-தீமைகள்


புதன் கிரகம் தரும் நன்மை-தீமைகள்
x
தினத்தந்தி 31 May 2018 10:30 PM GMT (Updated: 30 May 2018 9:29 AM GMT)

அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம்.

வக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும் காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம் ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால் முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம் செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.

புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக் மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.

இனி புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்பு களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.

தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.

ஜாதகத்தில் புதன் தரும் பலன்

 புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

 புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

 புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

 புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

 புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.

 புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

 புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.

 புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.

 புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.

புதன் கிரகத்தால் ஏற்படும் உலக பாதிப்பு

புதன் கிரகமானது பகை மற்றும் நீச்ச ராசிகளில் நின்றாலோ அல்லது பகை கிரகங்களுடன் இணைந்தாலோ உலகில் காற்று புயல் பெருகும். காற்றில் தூசி கலந்து மூச்சு கூட விட முடியாமல் பொது ஜனங்கள் இறப்பார்கள். காற்றில் விஷம் கலந்து மனிதர்கள் இறக்க நேரிடும். பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுவதும், பத்திரிகைகள் முடக்கம் செய்வதும் நடைபெறலாம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மருத்துவ கலைஞர்கள், விஞ்ஞானிகள் கொலை செய்வது நாடு கடத்துவது போன்ற துஷ்டசம்பவங்கள் நடைபெறும். நாட்டை வழி நடத்த போதிய அறிவு திறன் படைத்த மன்னர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்க மாட்டார்கள். பொதுமக்கள் நிம்மதியற்ற நிலையில் வாழ்வார்கள். பயிர் விளைச்சல் குறையும். சூறாவளி காற்று வந்து விவசாயத்தை அழிக்கும். ஆட்சியாளர்களுக்கு குறுக்கு வழி, குறுக்கு புத்தியை கொடுத்து நாட்டை நாசம் செய்யக்கூடும்.

-ஆர்.சூரியநாராயணமூர்த்தி 

புதனுக்குரியவை

காரகன் - மாமன்

தேவதை - விஷ்ணு (பெருமாள்)

தானியம் - பச்சைப் பயறு

உலோகம் - பித்தளை

நிறம் - பச்சை

குணம் - தாமஸம்

சுபாவம் - சவுமியர்

சுவை - உவர்ப்பு

திக்கு - வடகிழக்கு

உடல் அங்கம் - கழுத்து

தாது - தோல்

நோய் - வாதம்

பஞ்சபூதம் - நிலம்

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழு பார்வை. 3, 10-ம் இடம் கால் பங்கும், 5,9-ம் இடம் அரை பங்கும், 4,8-ம் இடத்தை முக்கால் பங்கும் பார்ப்பார்கள்

பாலினம் - ஆணும், பெண்ணும் இல்லாத நிலை

உபகிரகம் - அர்த்தபிரகரணன்

ஆட்சி ராசி - மிதுனம், கன்னி

உச்சராசி - கன்னி

மூலத்திரிகோண ராசி - கன்னி

நட்பு ராசி - ரிஷபம், சிம்மம், துலாம்

சமமான ராசி - மேஷம், விருச்சிகம், தனுசு,

மகரம், கும்பம்

பகைராசி - கடகம்

நீச்ச ராசி - மீனம்

திசை ஆண்டுகள் - பதினேழு ஆண்டுகள் 

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்

நட்பு கிரகங்கள் - சூரியன், சுக்ரன்

சமமான கிரகங்கள் - செவ்வாய், குரு, சனி, ராகு-கேது

பகையான கிரகம் - சந்திரன்

அதிக பகையான கிரகம்- சந்திரன்

இதர பெயர்கள் - பாகன், கொம்பன், மால், மாலவன், கணக்கன், பண்டிதன், அருணன், சவுமியன்

நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி 

Next Story