மனைவியை தண்டித்த மன்னன் 11-6-2018 கழற்சிங்க நாயனார் குருபூஜை


மனைவியை தண்டித்த மன்னன் 11-6-2018 கழற்சிங்க நாயனார் குருபூஜை
x
தினத்தந்தி 6 Jun 2018 6:41 AM GMT (Updated: 6 Jun 2018 6:41 AM GMT)

கழற்சிங்கர் என்ற பல்லவ வழி வந்த மன்னன், 63 நாயன்மார்களில் ஒருவராக உள்ளார்.

மன்னனாக இருந்து அவருக்கு இப்படியொரு பெருமை எப்படி வந்தது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

தான் ஆட்சி செய்த நாட்டை அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்த கழற்சிங்க மன்னன், சிவநெறியையும் தவறாது பின்பற்றி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று பொன்னும், பொருளும் பெற்றார். அவற்றையெல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார் களுக்கும் வழங்கி வந்தார்.

ஒரு முறை கழற்சிங்க மன்னருக்கு திருவாரூரில் அருள்பாலிக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதற்காக தனது மனைவியோடு, படைசூழ திருவாரூர் சென்றார். அங்கு பிறைசூடி அருள்பாலிக்கும் ஈசனை மனமுருக வேண்டினார். சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்கினார். பின்னர் இறைவனின் திருவடிவம் முன்பாக அமர்ந்து, தன்னை மறந்து பக்தியிலே மூழ்கிப்போனார்.

அந்த நேரத்தில் கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசியானவர், திருக்கோவிலை வலம் வந்து அங்கிருந்த மண்டபங்களைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு வலம் வரும் வேளையில் மணி மண்டபத்தில் சிலர், இறைவனுக்கு அணிவிப்பதற்காக மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருப்பதை அரசியார் கண்டார். கண்ணை கவரும் வண்ணத்துடனும், கருத்தைக் கவரும் நறுமணத்துடனும் இருந்த அந்த மலர்களை கண்டதும் அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமணம் வீசும் மலர்களைக் கண்டதும், தன்னிலை மறந்தார். அங்கிருந்த ஒரு மலரை எடுத்து மூக்கின் அருகே வைத்து முகர்ந்துப் பார்த்தார்.

மணி மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அடியார்களில், செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அடியவர்களுக்கும், ஆண்ட வனுக்கும் யாராவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்தால் அதனை உடனே கண்டிப்பார், இல்லாவிடில் தண்டிப்பார். அப்படிப்பட்ட செருத்துணை நாயனாருக்கு, அரசியின் செயலைப் பார்த்ததும் கடும் கோபம் வந்தது. இறைவனுக்கு அணிவிக்கும் மாலைக்காக தொடுக்க வைத் திருந்த மலரை முகர்ந்து பிழை செய்தவர், அரசி என்பதைக்கூட அவர் சிந்தனைச் செய்யவில்லை. தவறு என்பதை அறிந்ததும் தான் வைத்திருந்த வாளால், அரசியின் மூக்கை வெட்டினார்.

பூவினும் மென்மையான பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது சாய்ந்தாள். இந்தச் செய்தி, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னருக்கு எட்டியது. மன்னர் அரசியிடம் விரைந்து வந்தார். நிலத்தில் துவண்டு விழுந்து துடித்துக் கொண்டிருந்த அரசியாரின் நிலையைக் கண்டு மன்னனின் நெஞ்சம் பதைபதைத்தது.

‘இந்தக் கொடிய செயலைச் செய்தவர் யார்?’ என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டார்.

அந்த அச்சுறுத்தும் குரலோசைக் கேட்டு, ‘மன்னா! இச்செயலை செய்தது நான்தான்’ என்று துணிந்து கூறினார் செருத்துணை நாயனார்.

உடலில் சிவ சின்னத்துடன், சைவத் திருக்கோலத்தில் நின்றிருந்த செருத்துணை நாயனாரைப் பார்த்ததும் மன்னன் ஒருகணம் சிந்தித்தார். ‘சிவனடியார் தோற்றத்துடன் காணப்படும் இவர், இச்செயலை செய்யும் வகையில், என் மனைவி செய்த பிழைதான் என்னவோ!’ என்று எண்ணியவர். அதுபற்றி அந்த அடியவரிடமே கேட்டார்.

‘அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன்காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார் செருத்துணை நாயனார்.

மன்னர் மனம் கலங்கினார். இரு கரம் கூப்பி செருத்துணை நாயனாரை வணங்கியவர், ‘ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்று கூறியபடியே தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார். ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!’ என்று கூறியவர், சட்டென்று அரசியின் இரு கரங்களையும் வெட்டினார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவ பக்தி கொண்ட மன்னருக்கு தலை வணங்கினார் செருத்துணை நாயனார்.

அப்போது சிவபெருமான், உமா தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சியவர், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.

சிவபக்தியும், சிவ அடியார்களை பணிந்தும் வாழும் கழற்சிங்க நாயனாரை, அனைவரும் போற்றிப் பணிந்தனர். 

Next Story