நந்தீஸ்வரர் 20/20


நந்தீஸ்வரர் 20/20
x
தினத்தந்தி 6 Jun 2018 11:10 AM GMT (Updated: 6 Jun 2018 11:10 AM GMT)

சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் அவரது சன்னிதிக்கு முன்பாக வீற்றிருப்பார், நந்தியம்பெருமான்.

 சிவலோகத்தில் இருக்கும் கணங்களில், முதன்மையானவர் இவர் என்றும் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய இருபது சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

* ‘நந்தி’ என்பதற்கு ‘மகிழ்ச்சியைத் தருபவர்’ என்று பொருள். ஈசனை வழிபடுவதற்கு, பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து மகிழ்ச்சியை வழங்குபவர் என்பதால் இந்தப் பெயர்.

* கயிலாயத்தின் வாசலை காவல் காப்பவர் நந்தி பகவான். இவரிடம் அனுமதி பெற்றுதான், கயிலையில் வீற்றிருக்கும் ஈசனைப் பார்க்க முடியும். அதே வழிமுறையைதான் நாம் சிவாலயங்களிலும் பின்பற்றுகிறோம். முதலில் நந்தியை வணங்கிய பிறகே, மூலவரை வணங்க வேண்டும்.

* பிரதோஷ காலங்களில் நந்தீஸ்வரருக்குத் தான் முன்னுரிமை. ஆலகால விஷத்தை அருந்திய ஈசன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிந்தார். அது ஒரு பிரதோஷ வேளையாகும். எனவேதான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. பிரதோஷங்களில் தவறாது கலந்து கொண்டு நந்தியை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

* நாகப்பட்டினம் மாவட்டம் ஆத்தூரில் மந்தாரவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு நந்தியம்பெருமான், சிவபெருமானை பூஜை செய்யும் அற்புதக் காட்சியை தரிசிக்கலாம்.

* தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நந்தி என்று சொன்னால், அது தஞ்சை பெரியகோவிலான பிரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லில் வடிக்கப்பட்டது.

* ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல் நந்தியே, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கருங்கல் நந்தி என்று கூறப்படுகிறது.

* சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்கு பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் இருக்கிறது.

* அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இதன் கிரிவலப்பாதையின் ஒரு பகுதியில் மலையில் நந்தி படுத்திருப்பது போன்ற உருவம் தென்படும். இதனை ‘நந்தி முக தரிசனம்’ என்று அழைக்கிறார்கள்.

* திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ‘ஜோதி நந்தி’ உள்ளது. இதன் முன்பாக தீபம் ஏற்றி, மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

* மதுரை ஆவணி மூல வீதியில் ‘மாக்காளை’ என்று அழைக்கப்படும், சுதையால் வடிக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இதுபோன்ற மாக்காளை நந்திகளை, திருநெல்வேலி, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களிலும் காண முடியும்.

* கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

* மராட்டிய மாநிலம் புனேயில் கருவறை நந்தி என்ற நந்திக் கோவில் இருக்கிறது.

* மைசூர் பகுதியில் உள்ள சாமுண்டி மலை மீது காணப்படும் நந்தி, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது.

* திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் கோலத்தில் நந்தி காணப்படுகிறது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

* திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக திகழ்ந்தவர் நந்தியம்பெருமான். திருமூலருக்கு இவர்தான், வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

* கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி மலை உள்ளது. இந்த மலையே பெண்ணாறு, பாலாறு, பொண்ணையாறு ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறதாம். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் பழமை வாய்ந்த நந்தி கோவில் ஒன்றும் உள்ளது.

* சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலம் ஆகிய 8 பேரும் நந்தியம் பெருமானின் சீடர்கள் ஆவர்.

* நந்தியம்பெருமானின் வரலாற்றைப் பற்றி லிங்க புராணம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. சிவபெருமானே, நந்தியம்பெருமானாக பிறந்து, கணங்களில் தலைவராக மாறினார் என்றும் கூறப்படுகிறது.

* தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றி வைத்தவராக, நந்திகேஸ்வரர் என்ற பெயரில் ஒரு முனிவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

* சிவபெருமான் நாட்டியக் கலையை பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க, அதனை அறிந்த நந்தியம்பெருமான், அந்த நாட்டியக் கலையை பரத முனிவருக்கு போதித்ததாக அபிநய தர்ப்பணம் என்ற நூல் கூறுகிறது. 

Next Story