எப்படி ஜெபிக்க வேண்டும்?


எப்படி ஜெபிக்க வேண்டும்?
x
தினத்தந்தி 8 Jun 2018 8:36 AM GMT (Updated: 8 Jun 2018 8:36 AM GMT)

இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, தந்தையாகிய கடவுளிடம் தனிமையில் ஜெபித்தார் என்று பைபிள் கூறுகிறது.

‘இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்’ (மாற்கு 1:35) என்றும், இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார் (மத்தேயு 14:23) என்றும் வாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் கடவுளிடம் தனிமையில் ஜெபிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்திருக்கிறார். ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்’ (மத்தேயு 6:5,6) என்று அவர் கூறு கிறார்.

தங்களை பக்தியுள்ள மனிதர்கள், கடவுளுக்கு நெருக்கமான பிள்ளைகள் என்று காட்டும் எண்ணத்துடன், விளம்பரம் செய்கின்ற வகையில் ஜெபிக்கிறவர்களை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார். தெருக்களிலும் ஆலயங்களிலும் வீண் பகட்டுக்காக சத்தம் போட்டு, ஜெபிப்பது போல நடிக்கின்றவர்களை ஆண்டவர் வெளிவேடம் போடுகிறவர்கள் என்று குறை கூறுகிறார். இப்படி செய்கிறவர்களுக்கு கைமாறாக, ஏற்கனவே தண்டனைத் தீர்ப்பு கிடைத்து விட்டது என்றும் அவர் கூறு கிறார்.

ஆனால், தனிமையில் வைக்கப்படும் மறைவான வேண்டுதலை கடவுள் இரக்கத்தோடு கேட்டு, அவர்களுக்குத் தேவையானதை செய்வார் என்றும் ஆண்டவர் உறுதி அளிக்கிறார்.

இயேசு கிறிஸ்து தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் விண்ணகத் தந்தை அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:7,8)

நாம் கேட்பதற்கு முன்பே கடவுள் நமது தேவைகளை அறிந்திருக் கிறார் என்று இயேசு கூறுவதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். ஒருவர் அறிந்த காரியத்தைப் பற்றி நாம் அதிகமாக விளக்கம் அளிப்பது தேவையற்ற ஒன்று.

நமக்கு கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால், ஜெபிக்கும் வேளையில் மிகுதியான சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதே இயேசு தரும் போதனை.

மிகுதியான வார்த்தைகளைக் கொண்டு பிதற்றுவதில் அல்ல, கடவுள் மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையின் மூலமே நமது தேவைகளுக்கு பதில் கிடைக்கும் என்பதே அவரது வழிகாட்டுதல்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்” (மத்தேயு 6:9-13) என்று இயேசு கற்பித்தார்.

ஒரு ஜெபத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களை, ஆண்டவர் கற்பித்த இந்த ஜெபத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

முதலில் நாம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். அவரது பெயரைப் போற்றி, அவரது ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நமது விருப்பத்திற்கும் மேலாக கடவுளின் விருப்பத்தை நாட வேண்டும். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதற்கல்ல, அன்றாட உணவுக்காக மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

நாம் பிறரை மன்னித்த பிறகே, நமக்கான கடவுளின் மன்னிப்பை கேட்க வேண்டும். சோதனைக்கு உட்படாமல் இருக்கவும், தீமையில் இருந்து விலக்கி காக்குமாறும் நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். ஏனெனில், ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருடையன.

நமது வாழ்வும் ஜெபமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனையாக இருந்தது. ஆகவேதான், அவர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தில் ஒரு வாழ்வியல் பாடத்தையும் பொதிந்து வைத்துள்ளார்.

“மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையாகிய கடவுளும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்ற எச்சரிக்கை மிகுந்த அறிவுரையையும் ஆண்டவர் வழங்குகிறார்.

இயேசுவை இறைமகனாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவரும், அவரது வார்த்தைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள். தங்கள் தேவைகளை ஆண்டவரிடம் கூறுவது மட்டுமே ஜெபம் என்ற தவறான சிந்தனையில் இருந்து விடுபட்டு, நமது வாழ்வால் கடவுளை மகிமைப்படுத்துவதே ஜெபம் என்பதை உணர்வோம்.

“என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல் படுபவரே செல்வர்” (மத்தேயு 7:21) என்பதே இயேசு கிறிஸ்துவின் எச்சரிக்கை.

ஆகவே, வெளிவேடம் மிகுந்த ஜெபங்களை விடுத்து, நமது தூய வாழ்வால் கடவுளுக்கு மாட்சி அளிப்போம்.

- டே. ஆக்னல் ஜோஸ் 

Next Story