தம்பதியரை காக்கும் ஞானாம்பிகை


தம்பதியரை காக்கும் ஞானாம்பிகை
x
தினத்தந்தி 13 Jun 2018 7:15 AM GMT (Updated: 13 Jun 2018 7:15 AM GMT)

கணவன்-மனைவியின் ஒற்றுமையை காப்பதிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஞானம் தருவதிலும் அன்னை ஞானாம்பிகைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

திருக்கோடிக் காவல் தலத்தில் அருள்பாலிக்கும் திருக்கோடிஸ்வரரை தரிசிக்க, ஒரு சமயம் வெங்கடேச பெருமாள் வந்தார். அப்போது இரவு நேரம் வந்து விட்டதால் சிவமல்லிகாவனம் எனும் தட்சிண காளஹஸ்தியில் தங்கி, மறுநாள் திருக்கோடிக் காவல் சென்று இறைவனை தரிசித்துச் சென்றாராம்.

சிவமல்லிகாவனம் என முன்பு அழைக்கப்பட்டு, தற்போது கதிராமங்கலம் என அழைக்கப்படும் இத்தலத்தில் உள்ளது தான் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. பெருமாள் தங்கிச் சென்ற தலம் இது. எனவே இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரித்து வந்த பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மொட்டை கோபுரத்தை அடுத்து அகன்ற பிரசாரம். பீடம், நந்தி பகவானின் தனி சன்னிதியைத் தொடர்ந்து அலங்கார மண்டபம் உள்ளது. தென்பகுதியில் சமயக் குரவரான திருஞான சம்பந்தரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். இடது புறம் விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள்பாலிக்க, அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை காணப்படுகிறது.

கருவறையில் இறைவன் காளஹஸ்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தின் தென்புறம் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் சூரிய பகவானுக்கு காட்சி தந்த சூரிய வரத விநாயகர் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மற்றும் ஷேத்திர கணபதி, வள்ளி- தெய்வானை, சுப்ரமணியர் ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர், சுவாமிநாதர், தாரக பரமேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன.

அம்மனின் ஆலயம் வடக்குப் பிரகாரத்தில் உள்ளது. அன்னை ஞானாம்பிகை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள் பாலிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், அகோரவீரபத்ரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னிமரம். இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இறைவனின் தேவ கோட்டத்தின் பின்புறம் குலோத்துங்க சோழன் மற்றும் மருகண்டு மகரிஷி ஆகியோர் சிலைகள் உள்ளன.

மேற்கு பிரகாரத்தில் அருள் பாலிக்கும் சூரிய வரத விநாயகர் சூரிய பகவானுக்கு அருள் புரிந்தவராம். சூரிய பகவானுக்கு தோஷம் வந்த போது இவரை வணங்க அவரது தோஷம் நிவர்த்தியானதாம். இன்றும் ஆண்டு தோறும் ஆனி மாதம் 12-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் விநாயகரை குளிப்பாட்டும் காட்சியை இப்போதும் காணலாம்.

இந்த ஆலயம் அருகே வனதுர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. கவி சக்கரவர்த்தி கம்பரின் மனம் கவர்ந்த அன்னை இவள். ஒரு சமயம் கம்பரின் குடிசை சீர்கெட்டு போன போது, இந்த அன்னை கம்பருக்கு கூரை வேய்ந்து கொடுத்தாளாம். எனவே இந்த அன்னையை கூரை வேய்ந்த நாயகி என்றும் அழைப்பதுண்டு. அன்னை ஞானாம்பிகையை தரிசிக்க வருபவர்கள், வனதுர்க்கையையும் தரிசித்துவிட்டு வரலாம்.

அன்னை ஞானாம்பிகை ஞானம் தரக் கூடியவள். அன்னைக்கு வெண்டைக்காய் மாலை அணிவித்து, பொங்கல் வைத்து படையல் செய்து, அர்ச்சனை செய்தால் குழந்தை பேறு நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். சோமவாரம், கார்த்திகை, நவராத்திரி, மார்கழி 30 நாட்களும், திருவாதிரை நாட்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கணவன்-மனைவியின் ஒற்றுமையை காப்பதிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஞானம் தருவதிலும் அன்னை ஞானாம்பிகைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை - ஆடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது கதிராமங்கலம் என்ற இந்த தலம். 

Next Story