மங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன்


மங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன்
x
தினத்தந்தி 20 Jun 2018 7:13 AM GMT (Updated: 20 Jun 2018 7:13 AM GMT)

வீ ர உணர்வுக்கு காளியையும், பகைவரை வெல்ல துர்க்கையையும், கல்வி பெருக கலைமகளையும், செல்வம் செழிக்க திருமகளையும், மழை வளம் பெருகவும், நோய் நொடிகள் அகலவும் மாரியம் மனையும் வழிபடுதலை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மகமாயி, சீதளாதேவி, கருமாரி, ரேணுகாதேவி என பலப் பெயர்களால் மாரியம்மனை மக்கள் பக்தியுடன் பூஜை செய்து வணங்குகின்றனர். காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே ஆல், வேம்பு மரங்களும் அதன் கீழ் விநாயகர், நாகர் சிலைகளும் காணப் படுகின்றன. ஆலய முகப்பின் மேல்புறம் மகிஷாசுரமர்த்தினியின் திருமேனி சுதை வடிவில் உள்ளது. ஆலயத்தின் உள்ளே கருவறை எதிரில் சூலமும் அடுத்து கழுமரமும் இருக்கிறது. அடுத்து பித்தளை உலோக சூலமும், மின்னடையான் என அழைக்கப்படும் பலிபீடமும் உள்ளது. அருகே தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.

திருச்சுற்றில் தெற்கில் பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, ஓம்சக்தி அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடக்கில் காத்தவ ராயன் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் காத்தவராயன், கருப்பண்ணசாமி, மாரியம்மன் ஆகியோரது மரச்சிலைகள் உள்ளன. மேற்கில் கஜ லட்சுமியின் திருமேனி காணப்படுகிறது.

அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் விநாயகர், அம்பாளின் உற்சவர் சிலைகள் உள்ளது. கருவறையில் அன்னை மாரியம்மன் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன், அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் கருணை அளப்பரியது என்கின்றனர் ஊர் மக்கள்.

அடிக்கடி நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை அம்மனுக்கே தத்து கொடுத்துவிடுகின்றனர். குழந்தையை பெற்றவர்கள் குழந்தையுடன் அம்மன் சன்னிதிக்கு வருகின்றனர். அர்ச்சகர் ஒரு மரக்காலில் தவிட்டை நிரப்பி, குழந்தையின் பெற்றோர்களிடம் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தங்களது குழந்தையை, அம்பாளுக்கு தத்துக் கொடுக்கின்றனர். அன்று இரவு அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் தங்குவது கிடையாது. வேறிடத்தில் தங்க வைக்கப்படும். இப்படி தத்துக் கொடுக்கப்படும் குழந்தை சில நாட்களில் பரி பூரண குணமடைவது கண்கூடான உண்மை.

குழந்தைக்கு நோய் குணமானதும், அந்தக் குழந்தையின் பெற்றோர், அம்பாளின் சன்னிதிக்கு சென்று இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, குழந்தையை திரும்பப் பெறும் வைபவம் அடிக்கடி நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆரம்பத்தில் கீற்றுக்கொட்டகையில் இருந்த அன்னை, தற்போது அழகிய ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேயே ஆலயம் திறக்கப்பட்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை சுமார் 200 பெண்கள் கலந்து கொள்ளும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கும் திருவிழாவில், முதல் நாள் கரகம் புறப் படுவதுடன் அன்ன வாகனத்தில் அன்னை வீதியுலா வருவாள். இரண்டாம் நாளும் அன்னவாகனத்தில் வீதியுலா வரும் அன்னை, மூன்றாம் நாள் வேப்பிலை அலங்காரத்திலும், நான்காம் நாள் பல்லக்கிலும், ஐந்தாம் நாள் சப்பரம் எனும் தெருவடைச்சானிலும், ஆறாம் நாள் ஓடத்திலும், ஏழாம் நாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 8-ம் நாள் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ம் நாள் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று காப்பு களைதலுடன் உற்சவம் நிறைவு பெறும்.

இங்கு அருள்பாலிக்கும் ஓம்சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அன்னையின் பின்புறம் உள்ள வேப்பமரம் இயல்பாகவே தோன்றி, அன்னையின் சக்தியை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.

ஆலயம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தன்னை நாடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அறிந்து அருள்பாலித்து அவர்களை குறையின்றி வாழ வைக்கும் மடப்புரம் மாரியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து பயன்பெறலாமே.

அமைவிடம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவிலுக்கு கிழக்கே காளஹஸ்திநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மடப்புரம் கிராமம்.

- ஜெயவண்ணன்

Next Story