ஆன்மிகம்

உரையாடலை நிறுத்தாதீர்கள்..! + "||" + Do not stop the conversation ..!

உரையாடலை நிறுத்தாதீர்கள்..!

உரையாடலை நிறுத்தாதீர்கள்..!
இல்லறம் வெற்றிகரமாக அமைவதும், ஏனோதானோ என்று அமைவதும் தம்பதியர் கைகளில்தான் இருக்கிறது. என்றாலும், தம்பதியர் தம்மிடையே பேசும் உரையாடலிலும் அது அமைந்துள்ளது.
அனேக தம்பதியர் தங்களிடையே மனம்விட்டுப் பேசிக்கொள்வதே இல்லை. மனம்விட்டுப் பேசுவது இல்லை என்பதைவிட, பலகாலமாக பரஸ்பரம் பேசுவதே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதுவே மன விரிசலுக்கும், பின்னர் மண விரிசலுக்கும் காரணமாக அமைகிறது.

கி.மு., கி.பி. என்பதைப் போன்று அனேகமானவர்களின் வாழ்வு தி.மு. (திருமணத்திற்கு முன்), தி.பி. (திருமணத்திற்குப் பின்) என்று மாறிப்போனதற்கு உரையாடலை நிறுத்தியமையும் ஒரு காரணம் என்று கூறலாம்.

வெளி உலகில் சுற்றித் திரிந்துவிட்டு  வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு வேண்டுமானால், மனைவியுடன் உரையாடுவது தேவையற்ற செயலாகவோ, எரிச்சலை ஏற்படுத்தும் செயலாகவோ தோன்றலாம். ஆனால் வீடே கதி என்று கிடக்கும் மனைவியருக்கு அந்த உரையாடல்தான் உயிரோட்டமாக இருக்கும்.

திருமணத்திற்கு முன்னரும், திருமணம் நடைபெற்ற புதிதிலும் சிலர் பேச்சோ பேச்சென்று பேசுகின்றார்கள். ஆனால், தொடர்ந்து வரும் நாட்களில் பேசுவதையே தொந்தரவாகக் கருதுகின்றனர்.

ஏன் இப்படி..? பேசவேண்டியதை எல்லாம் பேசியாகிவிட்டது, இனி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதாலா..? அல்லது இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது என்ற விரக்தி நிலையா..? தெரியவில்லை.

‘மனம்விட்டுப் பேசினால் ரணம்விட்டுப் போகும்’ என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் தமது கணவரை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: “காதலிக்கும்போது மணிக்கணக்கா பேசுவார். இப்போ பேசுறதே இல்ல!”.

ஒருவரியில் சொல்வதென்றால், ‘உரையாடலை நிறுத்தும் இடத்தில்தான் கலகங்கள் தொடங்குகின்றன’. காதல் தொலைந்துவிடுகின்றது. பெண்களை எப்படிக் கையாள்வது என்றுதான் ஆண்களுக்குப்பாடம் எடுக்கப்படுகிறதே தவிர, அவர்களுடன் எவ்வாறு வாழ்வது எனச் சொல்லிக் கொடுப்பதில்லை. விரிசலுக்கு இதுவும் ஒரு காரணம்.

‘மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்’. நபிகளாரின் வழிமுறையும் இதுதான். ஒன்பது மனைவியர் ஒருசேர இருந்த பின்னரும்  நபிகளாரின் மணவாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்குக் காரணம் மனைவியரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் மனம்விட்டுப் பேசியதும்தான்.
வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் திருக்குர்ஆன், நபிமொழி, இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம் என்று பக்திப்பழமாகவே பேசியிருப்பார்கள் என்று எவராவது நினைத்தால் அது பிழை.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் பெருமானார் (ஸல்) அவர்களும் என்னவெல்லாம் பேசியிருக்கின்றார்கள் என்பது குறித்த விளக்கம், தலைசிறந்த நபிமொழித் தொகுப்பான புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு இருவரும் பேசியிருக்கின்றார்கள் என்றால், முற்காலத்தில் வாழ்ந்த காதல் ஜோடிகளைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் நெடுநேரம் பேசியிருக்கின்றார்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல.. பதினோரு காதல் ஜோடிகளைக் குறித்து பேசிய உரையாடல் முழுவதும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பேசிக்கொண்டே வந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இறுதியாக அபூ ஸர்வு-உம்மு ஸர்வு என்ற தம்பதியைக் குறித்துக் கூறினார்கள். அப்போது கவலையுடன் இவ்வாறு கூறினார்கள்: “ஆயினும் அல்லாஹ்வின் தூதரே! அபூஸர்வு, உம்மு ஸர்வுவை மணவிலக்குச் செய்துவிட்டார்”.

இதனைக் கூறும்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கவலை கொள்வதை கவனித்த நபிகள் (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உம்மு ஸர்வுக்கு, அபூ ஸர்வு எப்படியோ; அப்படியே உனக்கு நானும் அன்பாளனாக இருப்பேன். ஆயினும் அபூஸர்வு மணவிலக்குச் செய்ததைப் போன்று ஒருபோதும் உன்னை நான் மணவிலக்குச் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) கூறினார்கள்: “இறைவனின் தூதரே! அபூஸர்வுவைவிட தாங்கள் எவ்வளவோ சிறந்தவர்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

அபுத் தர்தா (ரலி) அவர்கள் தமது மனைவியிடம் இவ்வாறு கூறுவார்: “நான் கோபம் கொள்வதைக் கண்டால் நீதான் என்னை சாந்தப்படுத்த வேண்டும். நீ கோபம் கொள்வதைக் கண்டால் நான் உன்னை சாந்தப்படுத்துவேன். இல்லையேல் நாம் இணைந்து வாழ்வது இல்லாமல் ஆகிவிடும்”.

ஒரு கவிஞர் தம்முடைய மனைவியிடம் இவ்வாறு கூறினார்:

“கண்ணே! மன்னிக்கும் மனோபாவத்துடன் என்னோடு நடந்துகொள்! நானும் உன்னுடன் அவ்வாறே நடக்கிறேன்.
உன்னோடு நான் பாடும் அனுராகத்திற்கு நீண்ட ஆயுளை வழங்கு!
நான் கோபமுற்று இருக்கும்போது என்னோடு பேசாதே!
கோபத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
புகார்களை அதிகரிக்காதே! அது அன்பை பலம் குன்றச் செய்துவிடும்.
மேலும் உனக்கு எதிராக என் மனதை அது தூண்டும்.
புரண்டு கொண்டிருப்பதுதானே இதயத்தின் வேலை.
பிரியமும் வெறுப்பும் எப்போதாவது மனதில் ஒருசேர ஒன்று சேர்ந்தால்
பிரியம் தாமதமின்றி வெளியேறிவிடும் என்று நான் புரிந்து வைத்துள்ளேன்”.

அனேகமானவர்கள் வீடுகளை அன்பால் கட்டாமல் செங்கலால் மட்டுமே கட்டுகின்றார்கள். ஆகவேதான் இல்லறம் என்ற கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது.

மணாளியிடம் மனம்விட்டுப் பேசாமல் வேறு யாரிடம்தான் மனம்விட்டுப் பேசப் போகின்றோம். காலம் கடந்துவிட்டாலும் நம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எனவே உடன் வாழ்பவர்களுடன் ஒருபோதும் உரையாடலை நிறுத்தாதீர்கள்!

- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.