ஆன்மிகம்

வரம் தரும் திருப்பாடல் + "||" + Begetting Will Psalm

வரம் தரும் திருப்பாடல்

வரம் தரும் திருப்பாடல்
விவிலியம்! கிறிஸ்தவத்தின் புனித நூல். இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்த உலகம் தோன்றும் முன்பு தொடங்கி, அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு.
ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான், கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான். ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான். கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர்.

மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது. அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார், மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது.


பைபிள் என்பது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும், இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன.

இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள்! கிறிஸ்தவர்களால் அதிகம் பயன் படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள்.  “வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு” என்று இந்த நூலை அழைக்கின்றனர்.

திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு. பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம். அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு. ஆனால் திருப்பாடல்     களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார். எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு. இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும், ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும், கோராவின் மகன்கள் 10 பாடல்களையும், ஹெர்மான் ஒரு பாடலையும், எசேக்கியா பத்து பாடல்களையும், ஏதேன் ஒரு பாடலையும், சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர். மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும், அழகும் சேர்க்கிறது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதல், கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல். வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம்.

ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும், இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும், எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும், வரலாற்று பாடல்களாகவும், தீர்க்கதரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள்.

பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப்பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது.

திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மிகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது. இந்தப் பாடல்களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது. துயரத்தின் பிடியில் இருக்கிறோமா? ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா? பாவத்தின் பாதையில் நடக்கிறோமா? எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு.

இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களும் பயன் படுத்தும் நூலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இனிமையாக, இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன. வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல், கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது.

திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக, வழிகாட்டும் ஆசானாக, புதியவை சொல்லும் ஆசிரியராக, வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும்.

திருப்பாடல்கள் பிரபலமாய் இருக்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று,  இறைமகன் இயேசுவின் வருகையை தீர்க்க தரிசனமாய் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு எல்லாமே திருப்பாடல்களில் மறைமுகமாய் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டு, வாழ்வின் எல்லா சூழல்களிலும் ஆறுதல் தரக்கூடிய பாடல்களாக இவை இருக்கின்றன. குழப்பத்தில் வழிகாட்டவும், சோர்வில் உற்சாகமூட்டவும், பாவத்தை உணரவும், எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.

‘திருப்பாடல்கள்’ - ஆன்மிகத்தின் தேடல்கள், வாழ்வின் பாடங்கள்.

- சேவியர், சென்னை.