ஆன்மிகம்

உயிர் எனும் ரத்தம் + "||" + Life is the blood

உயிர் எனும் ரத்தம்

உயிர் எனும் ரத்தம்
விவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.
‘ரத்தம்’ என்பது விவிலியத்தில் முன்னூறு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. ‘ரத்தம் என்பது உயிர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது. ‘உயிர்களின் ரத்தத்தை, உயிராகிய ரத்தம்’ என விவிலியம் கூறுகிறது.

“எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்” ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே” என லேவியர் 17:14 குறிப்பிடுகிறது. ரத்தம் என்பது வாழ்வுக்கு சமமாக குறிப்பிடப்படுகிறது.

பழைய ஏற்பாடு, ரத்த பலிகளை அங்கீகரித்தது. எனவே தான், ரத்தம் பூமியில் சிந்தப்படலாம், ஆனால் அதை உணவாக உட்கொள்ளக் கூடாது என விவிலியம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

கடவுள் தனது சாயலாக மனிதனைப் படைத்து, தனது உயிர்மூச்சையே வாழ்வாகக் கொடுத்தார். எனவே கடவுள் விரும்புகிற பண்பு களை வெளிப்படுத்துகிற வாழ்வு உடையவனாக மனிதன் வாழவேண்டும். அதையே இறைவன் விரும்புகிறார்.

கடவுள் ஒரு நல்ல தலைவராக, நல்ல முதலாளியாக இருக்கிறார். நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குரிய அத்தனை வசதிகளையும் செய்து தருகின்றார்.

“கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை” என்கிறது 1 திமோத்தேயு 4:4.

கடவுளால் படைக்கப்பட்ட எல்லாம் நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு சிலவற்றை விலக்கவேண்டுமென காலப்போக்கில் சட்டங்களை தருகிறார். கடவுள் படைத்தவை அனைத்தும் நல்லவை, ஆனால் அவை படைத்தவரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் எனும் சிந்தனையை அது தருகிறது.

கடவுளின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் எதையும் உணவாக்கிக் கொள்ள முடியாது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. அப்படி மீறி உட்கொள்வது பாவமாகி விடுகிறது. “பெருந்தீனிக்காரரைப் போல உணவு உண்ணாதே” என விவிலியம் அத் தகைய மனிதரை எச்சரிக்கிறது.

“வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை ரத்ததோடே உண்டார்கள்” என 1 சாமுவேல் 14:32 கூறுகிறது. இது ஆண்டவருக்கு எதிரான பாவமாக மாறிவிட்டது.

2 சாமுவேல் 23-ம் அதிகாரம் தாவீது மன்னனையும் அவருடைய வலிமை மிகு வீரரையும் பற்றிய ஒரு செய்தியை விவரிக்கிறது. போர் காலம்- தாவீதுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது அவரது வீரர்கள் அவருக்கு தன்ணீர் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள். எதிரிகளின் எல்லைகளுக்குள் புகுந்து போய் தண்ணீர் கொண்டு வருகின்றனர். ஆனால் அதை தாவீது பருக மறுத்து விடுகிறார்.

“தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் ரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?’ என்று சொல்லி, அதை குடிக்காமல் விட்டார் தாவீது.

தண்ணீரைக் கூட ரத்தத்தைப் போல பாவித்து, அதைக் கூட குடிக்க மனமில்லாமல் இருந்தார் தாவீது. அந்த அளவுக்கு மனச்சான்றோடு வாழ்ந்தார், தாவீது.

மனிதனுடைய செயல்களை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. அறிவு சார்ந்த செயல்: ஒரு விஷயம் சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்த்து செய்கின்ற செயல் இது என சொல்லலாம்.

2. உணர்வு சார்ந்த செயல்: ‘இந்த செயலைச் செய்ய விரும்புகிறேன், எனது உணர்வு இதை எனக்கு பரிந்துரை செய்கிறது’ என முடிவெடுக்கின்ற செயல்.

3. மனச்சான்று சார்ந்த செயல்: நான் எதைச் செய்யலாம் என மனசாட்சி சார்ந்து முடிவெடுப்பது.

தாவீது எடுத்த முடிவு, மனசாட்சி சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த மனசாட்சிகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. துர்மனசாட்சி: நமது துர்மனசாட்சியை விட்டு இறைவனை நோக்கி திரும்பி வரவேண்டும். எப்படி தாவீது சரியான ஒரு செயலைக் கூட மனசாட்சிக்கு விரோதமாய் செய்யாமல் இருந்தாரோ, அப்படிப்பட்ட மனசாட்சி நமக்கு வேண்டும்.

2. மாசு படிந்த மனசாட்சி: ‘கடவுளை அறிந்திருப்பதாய் சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன’ என மாசு படிந்த மனசாட்சி உடையவர்களை விவிலியம் சித்தரிக்கிறது.

3. வலுவற்ற மனசாட்சி: இது நல்ல சிந்தனைகள் இருந்தாலும் அதைச் செய்வதற்குரிய வலு இல்லாத மனசாட்சியைப் பற்றியது. இதைப் பற்றியும் விவிலியம் பேசுகிறது. பாவம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தாலும் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்ற நிலமை வலுவற்ற மனசாட்சியின் வெளிப்பாடு.

நாம் நமது வாழ்க்கையில் இருக்கின்ற தீய, மாசுபடிந்த, வலுவற்ற மனசாட்சியை விலக்கி விட்டு நல்ல, தூய்மையான வலிமையான மனசாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உயிர் எனும் ரத்தம், இந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது கடவுள் விரும்பும் குணாதிசயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.