கண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியதேவன்
கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சூரியக் கடவுளுக்கென்று ஒரே கோவில் இதுவாகும்.
கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.
பின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.
கேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
இத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.
இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வலம் வருபவர் சூரிய பகவான். வானத்தில் வலம் வரும் சூரியனிடமிருந்து கிடைக்கும் சூரியஒளி இல்லாவிட்டால், பூவுலகில் எதுவுமே உயிர்ப்புடன் இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் விஷ்ணுவும், சூரியனும் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். இதனைக் கொண்டே சூரியனைச் ‘சூரியநாராயணன்’ என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். சூரிய நாராயணனுக்கும் மகாவிஷ்ணுவைப் போல் சங்கு, சக்கரம் கைகளில் இருக்கின்றன.
உலக உயிர்கள் அனைத்துக்கும் பரம்பொருளாக இருப்பவர் சிவபெருமான். அவரது மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பழமையான நம்பிக்கையின் அடிப்படையில் தான் சிவாலயங்களில் இறைவனை நோக்கியபடி வலது, இடது புறங்களில் சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒரு சில கோவில்களே இருக்கின்றன. இவற்றுள் ஒரிசாவில் உள்ள கோனார்க், கயாவில் உள்ள தட்சிணார்க்கா, ஆந்திராவில் உள்ள அரசவல்லி, குஜராத்தில் உள்ள மொதேரா, அசாமில் உள்ள சூர்யபஹார், மத்தியப்பிரதேசத்தில் உள்ள உனாவோ, கேரளாவில் உள்ள ஆதித்யபுரம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், தமிழ்நாட்டில் உள்ள சூரியனார்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சூரியனுக்கான ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் காஷ்மீர் ஸ்ரீநகரிலுள்ள சூரியன் கோவிலான மார்த்தாண்டா ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்கின்றனர்.
Related Tags :
Next Story