ஆன்மிகம்

மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம் + "||" + Wonderful temple to forecast rain

மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம்

மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம்
நமது இந்திய மண்ணில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்த, மகத்தான கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் மற்றும் நவக்கிரகங்களின் சக்திகளை வெளிப்படுத்தும் விதத்தில் முன்னோர் களால் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை காலம் காலமாக மக்களின் பல்வேறு சிக்கல்களை, நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைகளின் மூலம் தீர்ப்பதை அன்றாட வாழ்வில் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். நமது தென்னக பகுதியில் உள்ள கோவில்கள் கட்டமைப்பு மற்றும் ஆன்மிகச் சூழல், பூஜை முறைகள் ஆகிய நிலைகளை ஒப்பிடும்போது, வட மாநிலங்களில் உள்ள கோவில்களின் கட்டமைப்பு, இதர வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகளில், மாறுபட்ட நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கவனிக்க முடியும்.


மழைக்கோவில்

அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜகன்னாதர் ஆலயம். இந்தக் கோவிலை ‘மழைக்கோவில்’ என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் ஒரு வருடத்தில் அந்தப் பகுதியில் பெய்யும் மழை அளவு பற்றிய தகவல்களை அந்த ஆலயம் குறிப்பிடுவதாக தெரியவந்துள்ளது. அக்கோவில் பற்றிய சிறப்புகளை காணலாம்.

பொதுவாக, நமது பகுதிகளில் குறிப்பிட்ட வருடத்தில் பெய்யவேண்டிய மழையின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது ஆகிய காரணங்களை முன்னிட்டு சுவாமிக்கு பொங்கல் வைப்பது, கிராம மக்கள் மண் சோறு சாப்பிடுவது என்பது போன்ற நம்பிக்கை சார்ந்த வித்தியாசமான முறைகளை கடைப்பிடிப்பது வழக்கம். வருண பகவானின் அருளைப்பெற ‘அமிர்தவர்ஷினி’ என்ற ராகத்தை சங்கீத வல்லுனர்கள் அல்லது வாத்திய கலைஞர்களை கொண்டு நதிக்கரை அல்லது கடற்கரையில் இசைக்க வைப்பதும் பல நேரங்களில் நடப்பது உண்டு.

ஆனால் இவை எதுவும் இல்லாமல், மேற்கண்ட கோவில் மூலம் அறியப்படும் மழை பெய்வது பற்றிய குறிப்புகள், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் விதை விதைப்பது, அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

மழைக்கான முன்னறிவுப்புகள்

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் நடை பெறும் தேர்த்திருவிழா சமயத்தில், கோவிலின் மேற்கூரையில் நீர்த்துளிகள் உருவாகும் விதத்தைக் கணக்கில் கொண்டு அந்த வருடத்தின் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்கிறார்கள்.

தேர்த்திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருந்தால், மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி கீழே சொட்டுச்சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் பெரும் மழை பெய்யும் என்றும் அப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், கிட்டத்தட்ட நூறு ஆண்டு களாக அந்த நம்பிக்கைக்கு மாறாக மழையின் அளவுகள் பொய்த்து விட்ட சம்பவங்கள் எதும் இதுவரை நடைபெறவில்லை என்பது தான். இதனை அந்தப் பகுதியில் உள்ள மக்களும், கோவிலில் பூஜை செய்பவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஈரப்பதம் அல்லது நீர்த்திவலைகள் ஏதும் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான நடப்பாக இருந்து வருகிறது. பொதுவாக, மழை பெய்வதற்கு ஒரு வாரம் முன்பாகவே மேற்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்குமாம்.

மின்காந்த சக்தியுள்ள சக்கரம்

அந்த கோவிலில் கடந்த ஏழு தலைமுறைகளாக பூஜையில் ஈடுபட்டு வரும் தலைமை பூசாரியான தினேஷ் சுக்லா என்பவர் குறிப்பிடும்போது, அசோகர் காலத்தில் ஸ்தூபி வடிவத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை. அதோடு, கோவிலின் மேற் கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதில்லை’ என்கிறார்.

வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில், இப்போது அந்த மாநில தொல்பொருள் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலின் மேற்கூரையில் உருவாகும் நீர்த்திவலைகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தை அறிய முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், இதுவரையில் யாராலும் அதுபற்றிய மர்மத்தை கண்டறிய இயலவில்லை.

- ஜானகிராம்

அதிகம் வாசிக்கப்பட்டவை